முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உக்கிப்போன சொற்கள்

-துவாரகன் நாற்றத்தைத் தூவும் சொற்களைத் தூக்கி எறி பழைய ஓலைப்பாயைப்போல் போகும் இடமெல்லாம் நீதானே அந்தச் சொற்களைத் தூக்கிச் செல்கிறாய் வெள்ளையும் மஞ்சளுமாய் உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும் காய்ந்துபோன மாமரக் கொப்பென சொற்கள் வழியெங்கும் சிதறுகின்றன. வீட்டு யன்னல்களை இறுகப் பூட்டிக்கொண்டு ஒரு கணம் வீட்டையும் நாற்றத்தையும்கூட குற்றம் சொல்கிறாய். அந்தச் சொற்களைத் தூக்கி எறி. விறகுக்கட்டின் கீழிருந்து செத்துப்போன ஒரு எலியைத் தூக்கி எறிவதேபோல்! 12/2011

சாம்பற்பூச்சிகளென

                            -துவாரகன் சிரி அணை சிதை ஊரைக்கூட்டு உனதென்று சொல் இரத்த நாளம் மூளைத்திசு எங்கும் மூட்டைப் பூச்சியாய் களிம்பாய் ஒட்டு. துலா மிதித்து வந்தாரை வாழவைத்து வளர்ந்த சாதி வாய் கிழியச் சொல். சுட்டுவிரல் நாற்காலி உச்சக்குரலோடு சேர்ந்து நீயும் விழுங்கு சாம்பற்பூச்சிகளென! 11/2011

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி

-துவாரகன் நகரச் சந்துகளில் கூவிக்கூவி விற்ற கடலை வியாபாரி ஒருநாள் என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான் மழை பெய்து ஓய்ந்திருந்த மாலைப்பொழுதில் சிறுவர்கள் மாபிள் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் கோவிலில் கடவுளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் மூச்சிலும் சிறுவர்களின் பேச்சிலும் ஊர் உயிர்த்திருந்தபோது ஊரின் ஒதுக்குப் புறத்தால் வந்துபோனான் கடலை வியாபாரி கடவுளைத் தூக்கி வீதியுலாச் செல்ல இளைஞர்களைத் தேடியபோது அவர்கள் யாருக்கும் தெரியாமல் கடலை கொறித்துக் கொண்டிருந்தனர். அழகான கிராமத்தின் குச்சொழுங்கைகள் எல்லாம் அசிங்கமாயின பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால். 11/2011 நன்றி - பதிவுகள், tamilauthors

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது

-துவாரகன் உயிரைக் கொண்டோடிய கணத்தில் தாயைப் பறிகொடுத்தாள். சோதரி கைபிடித்து மீண்டு வந்தாள். வாரப்படாத தலை கறைபடிந்த பற்கள் உயிர்ப்பற்ற சிரிப்பு குமரியானாலும் குறுகி நடந்தாள் தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள் சில அப்பாக்களைப் போலவே ஒருநாள் புதுத்துணைவியோடு பெற்றவன் வந்தான். வாடிய பூக்களிடையே மீண்டும் அவள் காணாமற்போயிருந்தாள். அவளுக்கென்று எதுவுமில்லாதபோது ஒருநாள் அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள். அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது. 10/2011 (குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)

ஒளி

- துவாரகன் ஒளி ஞாயிற்றின் தூய சுடர் இருள் விரட்டி அறிவேற்றும் குறி விளக்கேந்திய பெருமாட்டியும் இருள்விரட்டி உயிர்த்திரி தூண்டினாள். அப்போதும்கூட விளக்குகள் விளக்குகளாகவே ஒளிர்ந்தன. கடவுளின் தூண்டாமணி விளக்கு களவுபோனதிலிருந்து விளக்குகளுக்கு இருள் பற்றிய பயம் தொடங்கிவிட்டது. விளக்கைச் சுற்றிய ஈசல்கள் மழையில் செட்டைகழற்றிச் செத்துக்கிடந்த நேரம் பார்த்து கொல்லைப்புறத்தால் கடவுள் வந்தார். கையில் அணைந்துபோன விளக்கு. ஒரு மின்மினிப் பூச்சியை அடையாளமாகப் பற்றிப் பிடித்திருந்தார். 10/2011

கிழித்துப்போடு

-துவாரகன் ம ண்டைக்குள் குறவணன் புழு நரம்புகளுள் கொழுக்கிப்புழு வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம் உடலெங்கும் ஊனம் இன்னும் பேசிப்பேசியே வாசனை பூசு கவச குண்டலம் பந்தியில் பறிபோனது காண்டீபம் திருவிழாவில் தொலைந்து போனது சாரதியும் தேரோடு செத்துப்போனான் இந்த அழகிய உலகில் அழுகிய மனிதர்களோடு இன்னமும் வாழ்கிறேன் என்று உன் வரலாற்றில் எழுது. இல்லையெனில் இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு! 2011/09

மூளை விற்றவர்களின் கதை

-துவாரகன் நான் சிறுவனாக இருந்தபோது அயலூரில் ஒரு மூளைதின்னி இருந்தானென்று அம்மா சொல்வாள். வேகும் பிணத்தின்முன் சுடுகாட்டில் காத்திருப்பானாம். இப்போ மூளை விற்ற மனிதர்களைக் கண்டுகொண்டேன். பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள் செம்மறியாட்டினதும் குரங்கினதும் காண்டாமிருகத்தினதும் மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள் சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள் உடையுண்டு நிறமுண்டு கையுண்டு நகமுண்டு காலில்லை பேயென்று என் குழந்தை சொல்கிறது நான் சொல்லிக்கொள்கிறேன் அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று நாங்களும் யோசிக்கலாம் எங்கள் மூளைகளை நல்ல விலைக்கு விற்பதுபற்றி…! 08/2011

ங போல் வளை

-துவாரகன் உடல் குறுகு எலும்பை மற கும்பிடு போடு நாணலாய் இரு தவளையாவாய். இனிப்பெனச் சொல் குட்டையைக் குளமாக்கு இன்னும்... ங போல் வளை தமிழ்ப்பாட்டிக்கு நன்றி சொல் நீ துளிர்ப்பாய். 8/2011

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள் -2

-துவாரகன் முகமூடியில்லை குறுவாள் இல்லை சோதரரோடு கைகோர்த்து நிஜத்தில் கூடவே இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். சிரிப்பைப் பறித்து காட்டேரியிடம் கொடுக்கிறார்கள் நிலத்தைச் சுருட்டி நீளமாய் விரித்துப் படுக்கிறார்கள் குழந்தைகளின் சோற்றை கூட்டாய்க் களவாடுகிறார்கள் இருப்பையும் உணர்வையும் தம் கைகளில் திணிக்கிறார்கள் மூட்டை கட்டியெடுத்தவருக்கு படத்தில் இருக்கும் பாட்டனின் மீசையும் வளையில் செருகிய பாக்குவெட்டியும் உறுத்துகிறது Night museum இரவில் உயிர்ப்பதுபோல் அஞ்சுகிறார் எங்கள் கடவுளரிடமும் இருக்கிறது அவரவருக்கு ஒவ்வொரு பாக்குவெட்டி. 8/2011 (Night museum - சிறுவருக்கான ஜனரஞ்சக ஆங்கிலப் படம். அப்படத்தில் ஒவ்வொரு இரவும் மியூசியத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் உயிர் வந்துவிடும்)

தலைப்பில்லாத கவிதை -1

-துவாரகன் குளித்த ஈரம் துவட்ட நேரமில்லை. காற்சட்டை காயும்முன்னே அணிந்து கொள்கிறேன் சாப்பாடும் ஆலயப் பூஜைபோல் ஆறுவேளையாயிற்று அப்புச்சியின் உலகில் பழஞ்சோற்றுடன் வயிறு குளிரக் கஞ்சி. பின்னொரு காலம் வெள்ளைப் பிட்டுடன் ருசியான மிளகாய்ச் சம்பல். அவசரக் கோமாளிகளின் கையில் ‘கேக்’கும் 'மைலோ' பாலும். நினைவுகளின் துகிலுரிப்பு நிலைப்பவற்றின் நிலையழிப்பு என்னையும் தொலைக்கிறது என் கண்ணிலும் மூளையிலும் மூக்கின் வழியிலும் பாட்டனின் கறுப்பு இன்னும் மீதியாய் ஒட்டியுள்ளது. அவசரமாகக் கண்ட இடமெல்லாம் குந்தி எழும்பியதில் என் பின்பக்கம் மட்டும் கொஞ்சம் கறுத்துப் போயுள்ளது. நண்பரே சந்தேகமெனில் காட்டட்டுமா? யூலை/2011 நன்றி- tamilauthors.com (குறிப்பு - கவிஞர் சோ. ப வின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று ஞாபகம் வருகிறது)

தமிழ்ப்புலமையின் குறியீடு நீ

ஈ ழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ தமிழ்ப் புலமையின் குறியீடு நீ சொல்லின் வீச்சும் அறிவின் துலக்கமும் தமிழ் கூறும் உலகெங்கும் உன்னை நினைக்க வைத்தது. விமர்சன வீச்சினால் ஈழத்தமிழை உலகெங்கும் எடுத்துச் சென்றாய் நீ கணைகள் பெற்றாலும் சளைக்காது தொடர்ந்தாய் நீ. யாழ் பல்கலையில் இறுதியாய் உன் தமிழ்ப்புலமையின் கப்பிப்பால் குடித்த பாலகர்களில் ஒருவனாய் அன்று நானும் உன் அருகில் இருந்தேன் ஐயா. அதனால் இருவிழி நீருடன் உலகெங்கும் பரந்த உன் மாணவசீடர்களில் ஒருவனாய் நின்று அஞ்சலித்தேன் ஐயா! ஈழத்து இலக்கிய வானின் விடிவெள்ளியாய் என்றும் ஒளிர்வாய் தமிழ்ப் புலமையின் குறியீடாய் நீ இன்னும் வாழ்வாய் -சு. குணேஸ்வரன் (துவாரகன்)

சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்

-துவாரகன் இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன் அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான். சொல்… விழுங்கினால் திக்கும். யாருக்கும் எதுவும் புரியாது. வேடதாரி ஒளியை விழுங்கினான். அது தொண்டைக்குழியில் மீன்முள் போல் சிக்கிக்கொண்டது. பாட்டன் சொன்ன கதைகள் போல் கனவுகண்டான் ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று. ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று. குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான் ஒளி அசைவற்றுக் கட்டியாகியது. இன்னமும் ஆட்டுக்குட்டியை விழுங்கிய வெங்கடாந்திப் பாம்புடல்போல் துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி 06/2011

தீராக்காதலியின் வினாக்கள்

-துவாரகன் என் உதட்டுச்சாயம் பற்றியும் கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும் கூந்தல்அழகு பற்றியும் நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை என் அன்பும் தீராக்காதலும் ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன என் நகப்பூச்சுக்கே நாளும் புகழ்ந்து தள்ளும் நீ நான் பேசும்போதெல்லாம் வானத்தையும் பூமியையும் பார்த்து ஏதேதோ பிதற்றுகிறாய் தீராக்காதலி அடுக்கடுக்காக மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள். ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும் அழகுடன் கூடிய பரிசுப்பொருளுடன் பேச முடிவுசெய்துவிட்டேன். அவளின் கேள்விக் கணைகள் முழுதாக என்னை மூடும்முன்னே! 06/2011 நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாதும்

சபிக்கப்பட்ட உலகு - 2

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்… உயிரின் மோகம்… ததும்பி வழிய முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன் நினைவு துரத்துகிறது. மறதியே! என் இருளறையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன் நீ வாழ்க இப்போது மட்டும் எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது ஒரு சுருக்குக்கயிறு. 06/2011 நன்றி - காற்றுவெளி யூன்/பதிவுகள்

உக்கிப்போன தெருவும் எலும்பும்

-துவாரகன் உக்கிப்போன தெருவில் எலும்பொன்றைக் கண்டெடுத்தேன் சுவட்டெச்ச ஆராய்ச்சிக்கு மூளை தயாரானபோது காற்றுக் கைகளிலிருந்து அது நொறுங்கி விழுந்தது செத்துக் கோதாகிப்போன மிருகத்துள் புகுந்து குடைந்து வெளியேறும் பன்றியைப்போல் தெருவையும் எலும்பையும் குடைந்துகொண்டிருக்கிறது பதார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் தீராப்பிணிபோல்... உக்கிப்போகின்றன தெருக்களும் எலும்புகளும். 04/2011 நன்றி - சுடர் ஒளி மே 29

மீன்குஞ்சுகள்

-துவாரகன் கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்குஞ்சுகள் ஒருநாள் துள்ளி விழுந்தன மாடுகள் தின்னும் வைக்கோல் கற்றைக்குள் ஒளிந்து விளையாடின வேப்பங் குச்சிகளைப் பொறுக்கியெடுத்து கரும்பெனச் சப்பித் துப்பின வயலில் சூடடித்து நீக்கிய ‘பதர்’ எல்லாம் பாற்கஞ்சிக்கென தலையிற் சுமந்து நிலத்தில் நீந்தி வந்தன வீதியிற் போனவர்க்கு கொல்லைப்புறச் சாமானெல்லாம் விற்றுப் பிழைத்தன திருவிழா மேடையில் ஏறி ஆழ்கடல் பற்றியும் அதன் அற்புதங்கள் பற்றியும் நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும் அளந்து கொட்டின இப்படித்தான் வைக்கோலைச் சப்பித் தின்னும் மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த மீன்குஞ்சுகள். 04/2011 நன்றி - காற்றுவெளி/ வார்ப்பு

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

-துவாரகன் நேற்றும்கூட என் அம்மா எனக்காக ஒருபிடி திரளைச்சோறு குழைத்து வைத்திருந்தாள் நான் வருவேனென்று. அவளிடம் சேகரமாயிருக்கும் எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை. எல்லாப் பாரத்துக்கும் அவளே சுமைதாங்கி அப்பாவின் உயர்வில் கோபம்கொண்டே அவர்கள் எங்கள் வீடு அடித்து உடைத்து போத்தலால் அப்பாவைக் காயப்படுத்தி அம்மாவும் நாரியில் அடிவாங்கி அலறியபோது வேலிப்பொட்டால் எங்களை இழுத்துக் காத்த 'பெரியமாமி' சொல்லக் கேட்டிருக்கிறேன். பெற்றெடுத்த கணத்திலும் முன்பு எங்களுக்காய் சேகரித்து வைத்திருந்த முத்தங்கள் பற்றி. தாம் சொல்வது பொய்யெனத் தெரிந்தும் ஆயிரம் வார்த்தைகள் கூறியும் காத்திடுவர் எங்கள் தாயர். ஊரானுக்கு ஊதாரியென்றாலும் அவளுக்கு உயிர்க்கொடி. நள்ளிருளிலும் தனித்திருந்து கலங்குவாள். தாய்மைக்கு வார்த்தைகளேது? எங்கள் தாயரைப்போலவே என் அம்மாவின் புன்னகை அழகு அவளின் அழுக்கு அழகு அவளின் மனசு அழகு எங்கள் தாயரின் காலங்கள் புனிதமானவை. இப்போ எங்கள் சின்னத்தாயர் இந்தப் புன்னகைகளை எல்லாம் குப்பைக்கூடையில் தூக்கிஎறிந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறார் தாயாக அல்ல தெருநாயாக…பேயாக… 04/2011

அவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்

-துவாரகன் பரிபாஷைகளுடன் இருப்பவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அளவுகோல் வைத்து ஆராய்ந்தவர்கள் இப்போ உதிர்க்கும் வார்த்தைகளை இரத்தினப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி சாமரம் வீசி குதிரையில் ஏற்றிச்செல்லக் காத்திருக்கிறார்கள். அவளின் வார்த்தைகள் பறவைபோல் சிறகடிப்பவை குழந்தைகளின் வண்ணமயச் சட்டைகளில் அழகுகாட்டக்கூடியவை மனிதர்களின் வார்த்தைகள் எப்போதும் தூலமானவை பூடகமானவை எப்போதும் பொய்யானவை எந்நேரமும் கொல்லக்கூடியவை. உயிர்வாழவைக்கும் வார்த்தைகள் எங்கள் கடவுளரிடமும் இல்லை. இப்போ தீர்மானமாயிற்று மனிதர்களுக்கு வார்த்தைகளைக் கடன் கொடுப்பதைப் பார்க்கிலும் ஒரு சிட்டுக்குருவிக்குக் கொடுக்கலாம் என்று. 03/2011 நன்றி : காற்றுவெளி

கைகளிருந்தால்…

-துவாரகன் எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம் எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம் நட்புடன் பற்றிக்கொள்ளலாம் நாலுபேருக்கு உதவலாம் நாட்டைக் கட்டியெழுப்பலாம் கைகளில்லாவிடில் எல்லாவற்றுக்கும் எல்லாநேரமும் யாரையும் எதிர்பார்க்கக்கூடும் ஒரு பயணத்தில் கையிரண்டும் இல்லாமல் மிகப் பிரயத்தனப்பட்டாள் அவள். ஆனாலும் அவள் சிரித்தாள் நட்போடு உரையாடினாள் மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில் இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆதலால் அவள் உயிரோயிருக்கிறாள். 03/2011 நன்றி : திண்ணை/காற்றுவெளி/பதிவுகள் --- குறிப்பு - இந்தக் கவிதைக்குரிய பெண்ணை 29.07.2011 newjaffna.comஎன்ற இணையத்தள செய்தி ஒன்றின்மூலம் தற்செயலாக மீளவும் அறிய முடிந்தது. இதற்குள் பெரிய கதையே இருக்கிறது. கீழே உள்ள லிங்கின் ஊடாக சென்று பாருங்கள். நாங்கள் என்ன பங்களிப்புச் செய்யலாம் என்பது பற்றி யோசிக்கலாம். http://newjaffna.com/fullview.php?id=NDc5OA==

தூய்மையும் தூமையும்

-துவாரகன் இப்பொழுதெல்லாம் புனிதம் பற்றிப் பேசுகிறாய் தூசுகளால் ஆன இந்த உலகு தூ(ய்)மை நிறைந்ததுதான் பட்டுப்போன மரக்கொட்டுக்கூட உனக்குப் புனிதமென்றால் எனக்கென்ன இருந்து விட்டுப்போகட்டுமே! குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல் என் வாழ்வழித்து புதிதுபுதிதாய் வரைகிறாயே இதை என்னவென்பது? முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும் நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியம் பூசுவதும் பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட இருந்து விட்டுப்போகட்டும். தொப்புட்கொடிப் பிறப்பும் மரணவீட்டுப் பிணமும் ஒருவேளை தீட்டாக இருக்கலாம் உன் வீட்டுப் பூச்சாடியும் நாய்க்குட்டியும் உனக்குப் புனிதமென்றால் என் பூர்வீகமும் நாமமும் என்ன தூமைச் சீலையா? 03/2011 நன்றி - பதிவுகள்/

கனவில் வந்த கடவுள்

-துவாரகன் ஒரு நாள் என் கனவில் கடவுள் வந்தார் தான் யார் என்று கேட்டார் கடவுள் என்றேன் எல்லாம் அறிந்தவர் எங்கும் நிறைந்தவர் எல்லோரையும் காப்பவர் அவரே கடவுள் என்றேன் ஆனாலும் கடவுள் மிகக் கவலைப்பட்டார் என்னவென்று கேட்டபோது தான் நன்றாக இல்லை என்றார். கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார் கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார் இதனால்த்தான் கடவுள் நன்றாக இல்லையென்பதைப் புரிந்துகொண்டேன் ஒளிவட்டம் கொண்ட ஞானிகள் போல் கடவுளும் இருக்கவேண்டும் இல்லாவிடில் இரணியன் வந்துவிடுவானே? இப்போ நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் இரவில் மின்னுகின்ற மின்மினிப் பூச்சிகளையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே 180120112212 நன்றி - திண்ணை/வார்ப்பு/காற்றுவெளி

மழைநீரில் கரைந்துபோகும் கண்ணீர்த்துளிகள்

-துவாரகன் துயரத் தொடர் கதைக்கு அளவேது வெள்ளக் காட்டிடையே நீரைக் கிழித்துச் செல்கிறது வண்டி மழைநீரும் கடலும் இணையும் ஓரத்தில் அடுக்கடுக்காய் குச்சிக் குடிசைகள் மழையில் நனைந்த காக்கைகள்போல். தலையில் மழைநீர் சொட்டச் சொட்ட நைந்துபோன நூல்சேலையுடன் சங்கடப்பட்டபடி முக்காடு போட்ட தாய். கூடவே பயணித்தாள் அந்தச் சிறுமி அவளைவிடப் பெரிய சட்டையுடன். தலையில் நிறங்கலைந்து போன நீல ‘வூல்பாண்ட்’ வெளியே றபர் தொங்கிக் கொண்டிருந்தது காய்ந்து கறுத்துப்போன முகம் வழித்திழுக்கப்பட்ட தலை நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கையில் ஒரு காய்கறிக் கூடை மழையில் நனைந்த கைகள் நடுங்கின ‘என்ன நல்லா நனைஞ்சிட்டீர்போல… நடுங்குதோ? சின்னப் புன்முறுவலுடன் தலையாட்டினாள் குச்சிக் குடிசையும் அவளைவிடப் பெரிதான சட்டையும் அந்தச் சின்னச் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கக் கண்டேன். 160120110705 (ஒரு மழைநாளில் குச்சவெளி புல்மோட்டை பிரதேசத்தினூடாகப் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவம்) நன்றி - உதயன் /காற்றுவெளி