
-துவாரகன்
வார்த்தைகளை மண் மூடுகிறது
முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது
பூதத்தீவுப் புதிர்போல
ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது
கணங்கள்தோறும்
மெளனமே இலகுவாயிற்று
நினைவு குமட்டுகிறது
எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க
இயலாமை… மரணம்…
உயிரின் மோகம்…
ததும்பி வழிய
முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன்
நினைவு துரத்துகிறது.
மறதியே!
என் இருளறையை உனக்குக்
காணிக்கையாக்குகிறேன்
நீ வாழ்க
இப்போது மட்டும்
எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது
ஒரு சுருக்குக்கயிறு.
06/2011
நன்றி - காற்றுவெளி யூன்/பதிவுகள்
கருத்துகள்
கருத்துரையிடுக