அக்டோபர் 08, 2012

ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல்


 
- துவாரகன்

கண்ணிருந்தும்
கள்ளிப்பால் பட்டவர்போல்
குருடாயிருந்து கொன்றவரும்
சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும்
இந்தத் தீவின்
சீழ்கொண்ட மானிடர் என்பேன்.

இழிந்தவரை…
நெடிக்கு நெடி சபித்துக்கொண்டே இருப்பேன்.
ஆனாலும்
இன்னும் இன்னும் தோத்திரமும் செய்வேன்.

ஆகப்பெரிய தண்டனை தந்த
ஊழிப்பெருமழையில்
எங்கள் உயிரும் உடலும் காத்த உறவுகளை
எப்படி மறப்பேன்.

தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
போவென்று விட்டானே ஒருவன்
முகந்தெரியா அவன் இதயம் வாழ்க.

துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
பிரித்துப் பொருத்தி உயிர்காத்தானே
ஒரு மருத்துவன்
அவன் பாதங்கள் என்றும் வாழ்க.

சுமந்து வந்த சுற்றம்
கூட இருந்த நட்பு
உயிர் காத்த உறவு
எப்படி மறக்கமுடியும்?

இந்தத் தேசத்தின் நன்னீர்ஓடைகள் நீங்கள்
உங்களுக்கு ஆயிரம் தடவை தோத்திரம்.
10/2012
---