மார்ச் 26, 2011

அவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்-துவாரகன்

பரிபாஷைகளுடன் இருப்பவளிடம்
வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்

உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைக்கும்
அளவுகோல் வைத்து ஆராய்ந்தவர்கள்
இப்போ உதிர்க்கும் வார்த்தைகளை
இரத்தினப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி
சாமரம் வீசி
குதிரையில் ஏற்றிச்செல்லக்
காத்திருக்கிறார்கள்.

அவளின் வார்த்தைகள்
பறவைபோல் சிறகடிப்பவை
குழந்தைகளின்
வண்ணமயச் சட்டைகளில்
அழகுகாட்டக்கூடியவை

மனிதர்களின் வார்த்தைகள்
எப்போதும் தூலமானவை
பூடகமானவை
எப்போதும் பொய்யானவை
எந்நேரமும் கொல்லக்கூடியவை.

உயிர்வாழவைக்கும் வார்த்தைகள்
எங்கள் கடவுளரிடமும் இல்லை.

இப்போ தீர்மானமாயிற்று
மனிதர்களுக்கு
வார்த்தைகளைக்
கடன் கொடுப்பதைப் பார்க்கிலும்
ஒரு சிட்டுக்குருவிக்குக் கொடுக்கலாம் என்று.
03/2011
நன்றி : காற்றுவெளி

மார்ச் 16, 2011

கைகளிருந்தால்…


-துவாரகன்

எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்

எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்

கைகளில்லாவிடில்
எல்லாவற்றுக்கும் எல்லாநேரமும்
யாரையும் எதிர்பார்க்கக்கூடும்

ஒரு பயணத்தில்
கையிரண்டும் இல்லாமல்
மிகப் பிரயத்தனப்பட்டாள் அவள்.
ஆனாலும்
அவள் சிரித்தாள்
நட்போடு உரையாடினாள்

மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில்
இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆதலால்
அவள் உயிரோயிருக்கிறாள்.
03/2011
நன்றி : திண்ணை/காற்றுவெளி/பதிவுகள்
---
குறிப்பு - இந்தக் கவிதைக்குரிய பெண்ணை 29.07.2011 newjaffna.comஎன்ற இணையத்தள செய்தி ஒன்றின்மூலம் தற்செயலாக மீளவும் அறிய முடிந்தது. இதற்குள் பெரிய கதையே இருக்கிறது. கீழே உள்ள லிங்கின் ஊடாக சென்று பாருங்கள். நாங்கள் என்ன பங்களிப்புச் செய்யலாம் என்பது பற்றி யோசிக்கலாம்.http://newjaffna.com/fullview.php?id=NDc5OA==மார்ச் 04, 2011

தூய்மையும் தூமையும்-துவாரகன்

இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்

பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?

முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.

தொப்புட்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்

உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?
03/2011
நன்றி - பதிவுகள்/