டிசம்பர் 25, 2009

சர்க்கஸ் கோமாளிகளும் சனங்களும்


-----துவாரகன்

முகப்பூச்சு வேடஉடை ஒப்பனையுடன்
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்

கூடாரமடித்து
மேளம் கொட்டி
சனத்தைக்கூட்டி
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்

கோமாளிகளின் கூத்தைப் பார்ப்பதற்கு
யாருக்குத்தான் ஆசையில்லை?
கண்கள் விரித்து ஆச்சரியப்படுகிறார்கள்
கைகொட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள்

கயிற்றில் தொங்கும் கோமாளியின்
காற்சட்டையைக் கழற்றுகிறான் ஒரு கோமாளி
கொட்டாவி விட்டவனின் வாயில்
கையோட்டுகிறான் இன்னொரு கோமாளி
பீப்பாவில் வைத்து உருட்டித் தள்ளுகிறான்
மற்றொரு கோமாளி
எல்லாக் கோமாளிகளும்
குரங்குகள் போல் குத்துக்கரணமும் அடிக்கிறார்கள்

கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் சிரிக்கிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் கைகொட்டுகிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் காசு கொடுக்கிறார்கள்

கூத்து முடிய
கோமாளிகள்
வேடஉடை கழற்றுவர்
வெளியே வருவர்
இன்னும் கூத்துத் தொடரும் என்பர்

கண்கள் விரிய
கைகொட்டிச் சத்தமிட்டு
காசு கொடுப்பதற்கு
இன்னும் இன்னும்
இந்த ஏமாளிச் சனங்கள்
காத்திருக்கிறார்கள்
211220090717

டிசம்பர் 04, 2009

நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்




-----துவாரகன்

இப்போ நானும் கொஞ்சம்
குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன்.
யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம்
பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன்.

நந்தவனச் சோலைகளிலும்
பிரசங்க மேடைகளிலும்
திருவிழாக்களிலும்
நான் சேகரித்த குப்பைகளை
சட்டைப் பைகளுக்குள்
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.

அவை என் புத்தகங்களையும்
படிக்கும் அறைகளையும் மீறி
சாமியறைகளிலும் நுழைந்து கொள்கின்றன

கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை
மூளையிலும் திணித்துக் கொள்கிறேன்.
தம்பி தங்கை அப்பா அம்மாவுக்கும்
இப்போ நான்தான் வழிகாட்டி

என் தாத்தாவின் மடியிலும் கொஞ்சம்
குப்பை கொட்டி
என் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கப் போகிறேன்

நானும் ஒரு புத்திசாலி
என் இளவல்களுக்கு வழிகாட்டி
மூளையில் குப்பை நிரப்பிக் கொண்ட
என் நண்பர்களைப் போலவே.
071120092311