டிசம்பர் 29, 2010

கிரகவாசியும் ஆதிவாசியும்


- துவாரகன்


நெஞ்சடைத்து வரும் ஆற்றாமை
வாய் திறந்து அழுதால் தீருமோ?

கல்லோடு கட்டிக்
கடலில் போட்ட கதையாக
அச்சமும் அவலமும்
எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தன?

தந்திரமா தன்வினைப்பயனா வரலாறா
தமக்குள் கேட்கிறார்கள்.
எல்லாம் மாயை
ஒரு சித்தனும் கூறுவான்

பிரபஞ்சம் அறிந்து விரிந்தபோது
மானிட வாழ்வு மட்டும்
எப்படிப் பூச்சியமானது?
பறித்துப் பிரித்தெடுத்து
முழுவதும் விழுங்கும்
குரங்குபோல்
வந்த தூதர்களின் மூச்சொலி
இன்னமும் கேட்கிறது.

வழக்காட முடியாத தமிழ்ச்சாதியோ?
என்றான் ஒரு கவிஞன்.
பிரபஞ்சத்தின் வெற்றியில்
தூசாக அடிபட்டுப் போன
மானிட ஜாதி இதுதானா?

வேரெது குரலெது
மரத்தடிப் பிச்சைக்காரன்போல்
கேட்டுக் கொண்டேயிரு!

தட்டில் மட்டும்
அப்பப்போ
சில சில்லறைகள் மட்டும் விழக்கூடும்.
231220101038

டிசம்பர் 20, 2010

சபிக்கப்பட்ட உலகு -1-துவாரகன்-


மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
241120100131
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

டிசம்பர் 13, 2010

காடு-துவாரகன்-

அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து
வைத்திருக்கும் அழகிய உலகம்

பொய்யும் கபடமும்
இந்தக் காடுகளிடம் இல்லை
சிறகுவிரித்து நுழைய நுழைய
தன் கரம் நீட்டிக் காப்பாற்றும்.

இயற்கையிலும் வாழ்க்கையிலும்
மோகம் கொண்ட மனிதன்
காடுகளைக் கண்டடைந்தான்.
பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு
ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு
உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு

காடுகளில்தான் மனிதன்
வேட்டையாடக் கற்றுக் கொண்டான்
காடுகளில்தான் மனிதன்
போராடக் கற்றுக் கொண்டான்
காடுகளில் இருந்துதான்
மனிதன் நாடுகளைப் பிடித்தான்.
வீரர்களைக் காக்கும்
விரிந்த உலகானது காடு.

நாகரீக மனிதனோ,
காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான்.
காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான்.

ஆனாலும், காடுகளே அற்புதங்கள்
காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள்
காடுகளே விடுதலையின் வெற்றிகள்
051220100655