டிசம்பர் 04, 2018

ஏணியும் பிசாசும்


- துவாரகன்

வானத்தில் சென்றுகொண்டிருந்த
பிசாசுகளை
அங்கங்கே ஏணி வைத்து
இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் ஒரு
ஏணி தாருங்கள்.
உங்களுக்கு உதவ.

எல்லோரும் ஒன்றுசேர்வோம்.
எங்கள் வாழ்வை
பிசாசுகளுக்கு அர்ப்பணிப்போம்.
11/2018

ஆகஸ்ட் 07, 2018

கறிவேப்பிலை


- துவாரகன்


கறிவேப்பிலை
கறிக்குச் சேர்க்கலாம்.
வீட்டின் கொல்லைப்புறத்தில்
கழிவுநீர் ஊற்றியும் வளர்க்கலாம்.

தேவைப்படும்போது சேர்க்கவும்
சாப்பிடும்போது தூக்கி எறியவும் கூடியது.
அனேகர் பொதுப்புத்தியும் இதுவே!

கறிவேப்பிலைக்கு
மருத்துவக் குணமுண்டு என்பதும்
அது உண்ணக்கூடியது என்பதும்
சிலருக்குத்தான் தெரியும்.

சில மனிதர்களும் இருக்கிறார்கள்.
கறிவேப்பிலைபோல்...
பயன்படுத்தவும்
தூக்கி எறிந்துவிடவும்.
072018பிப்ரவரி 23, 2018

நஞ்சூறிய வார்த்தைகள்- துவாரகன்

அவர்களுக்கு மட்டும்
இது எப்படித்தான் வாய்த்துவிடுகிறது?
கருணை அன்பு இரக்கம் எதுவுமே இல்லை.
நல்லபாம்புபோல்
நஞ்சு தெறிக்கும்
வார்த்தைகளால் தீண்டுகிறார்களே?

இன்னொருபுறம்
மனத்தில் வைத்துக் குடைந்து கொண்டு
வாய்விட்டு அழவும் முடியாமல்
மற்றவரிடம் பகிரவும் முடியாமல்
பாதிவாழ்வில் காரணம் தெரியாமலே
மரித்துப்போகிறார்கள்.
இதற்கு நஞ்சூட்டிய மனங்கள்தான் காரணமோ?

குலைத்துப்போடவும் கூடிக்கெடுக்கவும்
புறம்பேசிக் கொல்லவும்
அவர்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறது.

இந்த நஞ்சூறிய எண்ணத்தை
யாரால்தான் மாற்றமுடியும்
அண்டவெளியில் இன்னொரு புதிய கிரகம் பிறந்தாலும்
அங்கு சென்றும் நஞ்சூட்டும் எண்ணத்துடன்
இவர்கள் விரைந்து கொண்டே இருப்பார்கள்.

கறங்குபோல் சுழன்று
மேலது கீழாய்
கீழது மேலாய்
மாறும் என்றார் பெரியர்.
இங்கு கறங்கும் இல்லை.
மாற்றமும் இல்லை.
28012018