அக்டோபர் 18, 2021

நிர்வாண மனிதர்கள்


-       - துவாரகன்

 

வெட்கப்படவேண்டியது நீங்கள்தான்.

உங்கள் நிர்வாணம்தான்

வீதியெங்கும் மிதக்கிறது.

 

மண்ணைக் கிளறி

வெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும்

உ ழைப்பாளியும்

உங்களைப் பற்றித்தான்

கேலி பேசுகிறான்.

இதைவிட

ஓட்டைச் சிரட்டைக்குள்

சீவனை விட்டிருக்கலாம்

என்கிறாள் அம்மா.

 

என் பாட்டனின்

கைகளில் இருந்த

தளநாரின் வலிமைகூட

உங்களிடம் இப்போ இல்லை.

 

‘யுரேக்கா’ என்றபடி

அவன் வீதியில் ஓடியபோது

யாருக்கும்

அவனின் நிர்வாணம் தெரியவில்லை.

 

நாலுகூட்டுக் கச்சேரியான

பரிவாரத்திலும்

உங்கள் நிர்வாணமே

எங்களுக்குத் துலக்கமாயிருக்கிறது.

 

முற்றும் துறத்தல் என்பதும்

சாத்தியமில்லாதபோது,

இருளே உமதானது.

ஒளியே எமதானது.

13102021

https://vanakkamlondon.com/literature/2021/10/134691/?fbclid=IwAR3rIP-n2qjUAj488bo2MGo57bEdQ7hvJ6p8ALtftoNOxTG5SchABz9SJcw

அக்டோபர் 02, 2021

அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல்- துவாரகன்

 

இன்னும் எத்தனை காலம்தான்

கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்?

இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான்

இந்தச் செம்பாட்டு மண்ணில்

நடந்து திரிகிறாயா?

 

சுருண்டுபோன புடலங்காய்க்கு

ஒரு சிறுகல் போதுமே!

நான்கு தலைமுறையாக

இந்த நிஷ்டையைக் கலைக்க

ஓர் ஒளிப்பொட்டுக்கூடவா

உனக்குக் கிடைக்கவில்லை?

 

இனி மலையைப் பிளக்கவேண்டாம்

ஒரு கூழாங்கல்லைத் தேடி எடு

எறிவதற்கல்ல.

சுருண்டுபோன வாலை நிமிர்த்துவதற்கு.

01102021.

நன்றி: https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/132500/?fbclid=IwAR0OgD5VcrmsiRCniJoK9KxdXUOpemS-5cI1CUvEJhi127p1GL-zJ3K7TLY

என் குழந்தையைக் களவாடியவன்


-       துவாரகன்

 

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளை

கன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்

எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.

எண்ணெய் பூசி

தடுக்கில் வளர்த்தியிருந்தபோது

அந்தத் திருடன் களவாடி விட்டான்.

 

நேர்த்திக் கடன் கழித்த

சந்நிதியின் வாசலிலே

முல்லைச் சிரிப்புடன்

கைகளில் தவழ்ந்தது கண்டு

அன்பு கொண்டவன்.

கன்னக்குழியின் அழகுபேசி

கதை கேட்டவன்.

 

சற்று நாங்கள் கண்ணயர்ந்தபோது

ஓசைப்படாமல் வந்து

களவாடிவிட்டான்.

 

மார்பிருத்திச் செல்லங்கொஞ்சிய

மனது வலிக்க

நாட்களை எண்ணிக்கொண்ட

பச்சை வயிறு தவிக்க

ஊசலாடும் வெற்றுடல்கள் ஆனோம்.

 

புதியபெயர் சூட்டி

புரியாத மனிதரிடம் அகப்பட்ட 

என் குழந்தையைக் கண்டீராயின்

தேடித் தருவீரோ அன்பரே!

19072021

(தடுக்கு : குழந்தைகளுக்குரிய சிறிய ஓலைப்பாய்)

நன்றி : இலக்கியவெளி 2021

https://vanakkamlondon.com/literature/2021/09/131701/?fbclid=IwAR25iiYTqYkdeZLjfH4fIeIrHTKcSktyn7Er59lGDKYmbwVAJCCU_goJ_50

செப்டம்பர் 22, 2021

கறங்குபோல் சுழன்று

 - துவாரகன் இந்தக் காலத்திற்கு 

என்னதான் அவசரமோ? 

சுழலும் வேகத்தில் 

இழுத்து நடுவீதியில் 

வீசிவிட்டுப் போகிறது. 


என் வீட்டு நாய்க்குட்டிகள் 

கண்மடல் திறந்ததும் 

மல்லிகை மணம்வீசி 

மனத்தை நிறைத்ததும் 

சிட்டுக் குருவி வந்து 

முற்றத்தில் மேய்ந்ததும் 

நேற்றுத்தான் போலிருக்கிறது. 


வெளிகளில் இறக்கைகட்டிப் 

பறக்கலாம் என்றீர்கள். 

இப்போ, 

பிணங்களை வெளியே 

கொண்டுவாருங்கள் 

என்றல்லவா அழைக்கிறார்கள். 

21092021

https://vanakkamlondon.com/

அதிபர் இரா. ஶ்ரீநடராசா : பணி நிறைவும் பிறந்தநாள் வாழ்த்தும்

 

எமது அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் இன்றையதினம் (14.09.2021) தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் ஆற்றிய பணிகள், பெற்ற சாதனைகள், தொண்டைமானாறு கிராமத்தின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் அவர் முன்னின்று செயற்பட்ட காலங்கள் முக்கியமானவை.
80களின் நடுப்பகுதியில் இருந்து 92 வரை இயக்கங்களினதும் படைகளினதும் நெருக்கடிகளில் இருந்து இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் கல்வியையும் கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் காலங்கள் மறக்கமுடியாத நினைவுகளை மீட்டக்கூடியவை. தொடர்ந்து வாசிக்க

ஆகஸ்ட் 15, 2021

காலச்சுழல்

-       துவாரகன்


முன்னோர்

புண்ணியத்தை அறுவடை செய்யக்

கற்றுத் தந்தனர்.

நேர்மையைக் கற்றுத் தந்தனர்.

நாங்களோ,

பாவத்தை அறுவடை

செய்து கொண்டிருக்கிறோம்.

 

நல்ல காற்றைச் சுவாசிக்க

மறந்து போனோம்.

சங்கூர்ந்த நிலங்களை

சாம்பல் மேடாக்கினோம்.  

கைவீசி நடந்த கரங்களுக்கு

விலங்குகளை இட்டோம்.

உண்மையையும் நீதியையும் பிணைத்து

சவாரி மாடெனச் சாய்த்தோம்.

 

சின்னச் சிட்டுக் குருவிக்கு

ஒரு சிறாங்கைத் தானியத்தையேனும்

விட்டுவைக்க மறந்து போனோம்.

 

கவனமாகப்

பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட

உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும்

காலச்சுழலை

யார்தான் விரும்பிக் கேட்டார்கள்?

 

வீடு திரும்பிவிடுவோம் என்ற

நினைவுடனேயே

வைத்தியசாலை வாசலில்

கால் பதிக்கிறோம்.

 

அந்த நம்பிக்கையேனும்

நிச்சயமாக

மீதியாக இருக்கட்டும்.

11082021

---

 நன்றி :  பதிவுகள்

ஆகஸ்ட் 06, 2021

கருணையாளரின் தும்புத்தடி

 


-       துவாரகன்

அவள் பூனை வளர்ப்பதை

எப்போதும் விரும்புவதில்லை.

கண்ட கண்ட இடமெல்லாம் மயிர் உதிர்த்தும்.

திண்ட மிச்சத்தையும் வீட்டுக்குக் கொண்டு வரும்.

கட்டிலின் கீழே

கடித்துப் பாதியான ஓணான் தலையொன்றைக்

கண்ட நாள்முதல்

அவள் பூனையை வெறுத்தாள்.

 

பூனை உதிர்த்த மயிரைக்

கூட்டித் தள்ளுவதற்கு

இதுநாள்வரை

நல்ல தும்புத்தடி கிடைக்கவில்லையென்று

நாளும் விடியற்காலையில்

புறுபுறுத்துக் கொண்டேயிருப்பாள்.

 

பொங்கலோடு மடைபோட்டுப் பலியிட்ட

வயற்கோயிற் திருவிழாவில்

காலமெல்லாம் நின்றுழைக்கும்

மிகத் திறமான தும்புத்தடி விற்றார்கள்.

 

 இப்போ

கருணையாளரிடம்

மிகத் திறமான தும்புத்தடிகள் உள்ளன.

அவற்றுள்

ஒன்று கூட்டக்கூடியது.

இன்னொன்று கூட்டிக் கொடுக்கக்கூடியது.

270820211212

ஆகஸ்ட் 01, 2021

சாந்தனின் எழுத்துலகம் உரையாடல்

 சாந்தனின் எழுத்துலகம் தொடர்பாக இலக்கிய வெளியின் ஏற்பாட்டில் நிகழ்ந்த உரையாடலில் "சாந்தனின் சிறுகதைகள்" தொடர்பாக கலாநிதி சு. குணேஸ்வரன் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி. https://www.youtube.com/watch?v=P5Ak_xFQ8hc&t=153s

ஜூன் 21, 2021

மிட்டாய் வியாபாரியின் குதிரையேற்றம்

 

துவாரகன்

 

புதிய குதிரையில் சிட்டாய்ப் பறந்த

மிட்டாய் வியாபாரி

உடம்பெல்லாம் சிரிப்பாக நின்றான்.

 

மிட்டாய்ச் சுவைக்கு மயங்கி

குதிரை கொடுத்தவன்

குத்திட்ட மயிர்த்துளைகளுடன்

குதித்துக் கொண்டிருந்தான்.

 

பேரத்தின் இறுதியில்

கடையும் குதிரையும் கைமாறின.

 

ஒருநாள் குதிரை திரும்பியே விட்டது.               

கையறுநிலையில் கடைக்காரன்.

 

சாபம்பெற்ற இந்திரனின் கண்களை

மிட்டாய்க் காரனும் குதிரைக்காரனும்

இனிப்பாலும் சிரிப்பாலும் மூடியபடி

கடந்து கொண்டிருக்கின்றனர்.

2021

ஜூன் 18, 2021

வெள்ளெலிகளுடன் வாழ்தல் பற்றி


எனது கவிதையான "வெள்ளெலிகளுடன் வாழ்தல்" தொடர்பான இரசனைக் குறிப்பை மா. பா. மகாலிங்கசிவம் அவர்கள் எழுதியுள்ளார். தெளிவாக நூலகம் இணைப்பில் வாசிக்கலாம். வெள்ளெலிகளுடன் வாழ்தல் - துவாரகன் கவிதை

நன்றி : உதயன் மற்றும் மா. பா. மகாலிங்கசிவம் 


ஜூன் 04, 2021

குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்

 குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்  (ரூபவாகினி  & ஐ அலைவரிசை) எனது மூன்றாவது காணொளி https://www.youtube.com/watch?v=SyjC0EtV0m0&t=368s


முன்னைய காணொளிகள் 

தரம் 6 குறும்பா

தரம் 9 சகுந்தலைவ. அ. இராசரத்தினம் படைப்புகள் மீதான உரை

 

தொடர்புடைய காணொளி 

https://www.facebook.com/100000000176167/videos/4355903544419608/

வெளியார் பாடல்

துவாரகன் ஐயா தர்மவான்களே!

நாங்கள் தினமும் காலையில் நீராடுகிறோம். 

மூன்று வேளையும் கைகால் அலம்புகிறோம். 

கைநகங்களையும் சுத்தமாக்கி வைத்திருக்கிறோம். 

காலையில் உங்களைப் போலத்தான் குந்தி எழும்புகிறோம்.

தினமும் உடைகளை மாற்றுகிறோம்.

மூன்று வேளையும் உண்கிறோம். 

நீராகாரமும் பருகுகிறோம். 

வீதியிலும் கைகளை வீசி 

இரண்டு கால்களாலும் நடக்கிறோம். 

நீங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான் 

நாங்களும் சுவாசிக்கிறோம்.

வைத்தியரும்கூட எங்கள் உடலில் ஓடுவது 

சிவப்பு இரத்தம் என்றுதான் சொன்னார். 

அப்படியிருக்கும்போது…

நாங்களும் மனிதர்கள்தானே!

நன்றி : கனவு 2021

மே 09, 2021

நாற்றத்தின் கொண்டாட்டம்

    

         துவாரகன்

 

ஒரு பூனையின் கால்களுக்கிடையே

அகப்பட்ட சுண்டெலியின்

ஈனமான கீச்சிடல்

காதில் ஒலிக்கிறது.

 

வருந்தி உழைப்பதும்

விற்றுப் பிழைப்பதும் ஒன்றென

உன் மாயக்கண்ணாடி அறிவு

உனக்குச் சொல்லியிருக்கலாம்.

 

மலக்குழி வெடிப்பினூடாக

வெளியேறும் நாற்றம்போல்

நடந்து வந்த பாதை.

இனி நறுமணத்தைப் பூசிக்கொண்டே

நாங்கள் உரையாடவேண்டியிருக்கிறது.

 

நாற்றம் உனக்கானது.

உன்னோடு வாழக்கூடியது.

எதிர்காலமும் நாற்றத்தையே

புனிதமாகக் கட்டமைக்கும்.

அப்போதும் உன்பாடு கொண்டாட்டம்தான்.

தீம்புனல் 2021.05.08

ஜனவரி 26, 2021

“மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை

-  பா. இரகுவரன்

   சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி  மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.

   சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம்  மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க https://sevvarathai-aachchi.blogspot.com/2021/01/blog-post.html