மே 28, 2012

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?



-துவாரகன்

துளிர்த்துச் சிலிர்த்துப்
பற்றிப் படர்ந்து
கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம்
எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள்.

அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி.
இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர்
எங்கள் பாரிகள்.

கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை
குலத்துக்காகாது என்றே
கோயிலெல்லாம் சுற்றிப்
பிணி நீக்கினாள்
எங்கள் பாட்டி.
வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம்
உடனே விற்றுவிடு என்றார் அப்பா.

உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும்
எங்கள் தனயன்மாரை
நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது?

கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும்
குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும்
குமரியைச் சிதைத்துக் கொல்வதும்
இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும்
எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்?

நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம்.
இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே.
05/2012