முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?



-துவாரகன்

துளிர்த்துச் சிலிர்த்துப்
பற்றிப் படர்ந்து
கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம்
எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள்.

அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி.
இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர்
எங்கள் பாரிகள்.

கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை
குலத்துக்காகாது என்றே
கோயிலெல்லாம் சுற்றிப்
பிணி நீக்கினாள்
எங்கள் பாட்டி.
வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம்
உடனே விற்றுவிடு என்றார் அப்பா.

உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும்
எங்கள் தனயன்மாரை
நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது?

கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும்
குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும்
குமரியைச் சிதைத்துக் கொல்வதும்
இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும்
எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்?

நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம்.
இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே.
05/2012

கருத்துகள்

  1. நச்சுக்கொடி படர்ந்த தனயர் கிடைத்தது எங்கள் துரதிர்ஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாட்சாயணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #on facebook....

      *
      Jeyakumar Antoni
      சமூகப்பிரக்ஞையுணர்வுடன் சமகால ஈழத்தமிழர் பற்றிய ஆழ்ந்த கவலையுடன் கவிஞர், வாசகர்களுடன் பகிரவிழையும் சேதி, கவிதையாக எம்முன்னே. இத்தாலியச் சொல்லாகிய STANZA (பிரிவுகள்) என்பதை அறை என தமிழில் மொழிப்படுத்தலாம். ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு தேவைக்கு...ப் பயன்படுத்துவோமாயினும் பல அறைகள் சேர்ந்த ஒன்றே வீடு என்று கொள்கிறோம். ஏழு அறைகள் கொண்டு கட்டப்பட்ட வீடாக, கவிதை அமைந்துள்ளது. நச்சுக்கொடிகள் பற்றிய இயற்கை வர்ணனையுடன், முதல் அறையின் தரிசிப்பு, தொடர்ந்து பாரிவள்ளலின் பிரசன்னம், கிராமியச்சூழலில் வியாபித்துவளர்ந்த நம்பிக்கை………….என வீடுபூரா உலாவரும்போது, துகிலுரியப்பட்ட கிழவி, பிரித்தெடுக்கப்பட்ட குழந்தை, சிதைக்கப்பட்ட குமரி, அடித்துக்கொல்லப்பட்ட அப்பன், அண்ணன் என இரத்தவாடையை எம்முள் உணர்கிறோம். பிணவாடை நிறைந்த பயங்கரமானதோர் தமிழ் வீடு, எமது வீடு. நம்பியிருந்த எம் கைகளே, எம் கண்ணைக் குத்திக் கிழித்துமகிழும் கொடுமை. ”நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம்” …..தொடர்ந்துவரவிருக்கும் தமிழ்மனித சங்காரத்திற்கு கட்டியம் கூறும் கொடுவாசகமெனக் கொள்ளலாம். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே பண்ணோடு தோன்றிய மூத்தகுடி” என்ற நாசூக்கான சேதியையும், இறுதிப்பகுதியில் கண்டுகொண்டோம்.
      சமூகநலம் பற்றிய, இதுபோன்ற கவிதைகளில் மூன்றுவகைப் பண்புகளின் மேற்கிளம்புகையைக் கண்டுதெளியலாம்.
      1. கவியிடமிருந்து வரும் தாழ்மையான வேண்டுகோள், கவிதையின் உள்ளூடாக எழுந்து, வாசகரின் கண்களை ஈர்த்துக் கொள்ளுதல்.
      2. கவியின் வேதனையான, பரிதாபமான குரலை வாசகரின் காதுகளைக் கூர்மையாக்குதல்.
      3. சமூகநலம் பற்றி வாசகர்களிடம், தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் உறைந்திருக்கலாம். ஆயினும் சகல வாசகரும் கவியின் தெளிவான உண்மையை, கருத்தை ஆமோதித்து ஏற்கவைக்கும் கவன ஈர்ப்பும் சிந்தனையும்.
      மூன்று பண்புகளும் அமையப் பெற்ற சிறப்பானதோர் கவிதை, வளரும் எதிர்கால கவிஞர்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரட்டும். வேதனை தரும் நிஜமான சேதிதந்த கவியை, நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.See more
      3 hours ago · UnlikeLike · 1
      *
      Subramaniam Kuneswaran எனது முதற்தொகுப்பில் வந்த கவிதைகளுக்குப் பின்னர், அண்மைக்காலத்தில் நான் எழுதிய கவிதைகளில் ஒரு தனிக்கவிதைக்கு (யாரிடம் விற்றுத் தீர்ப்பது) விரிவாக எழுதப்பட்ட கருத்தாக இது அமைந்துள்ளது. Jeyakumar Antoni உங்கள் காத்திரமான கருத்துக்கும், கவனத்திற்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். - துவாரகன்.
      6 minutes ago · LikeUnlike

      #
      Write a comment...

      நீக்கு
  3. arumai,vaazthukkaz.arambam satru pathungi naduvil pammi mudivil payinthu kozgirathu manathi.meendum vaazthukkaz.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல கற்பனை.மனதைத் தொடுகிறது.காற்றுவெளியிலும் பிரசுரித்துள்ளேன்.நமக்கான கவிதைப் பரப்பு இறுக்கமாக விரிவடைந்து வருகிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி முல்லை அமுதன். காற்றுவெளியிலும் பார்த்தேன். மிக்க நன்றி. நல்ல கற்பனை என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் இப்போது இப்படியான சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எல்லோரும் கொஞ்சம் அரிதாரம் பூசிக்கொண்டிருப்பதால் வெளியே தெரியவில்லை. இது நீங்கள் அறியாததுமல்ல.

    அன்புடன்
    துவாரகன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---