ஏப்ரல் 05, 2012

உறைந்துபோன கண்கள்


-துவாரகன்

சொற்கள் செத்துப்போன கணங்களில்
கைகளும் கால்களும் உறைந்தன.
கண்கள் உயிரின் பாஷைகளாயின.

வெளிச்சத்தில் குறுகவும்
அதிசயத்தில் விரியவும்
பழக்கப்பட்ட கண்கள் அவை

பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள்
உயிர்கொண்ட கணத்தில்...
மண்ணும் கல்லும் சாந்தும்
குழைத்தெழுந்த சுவர்களுக்கு
ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,
மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின.

எத்தனை ஜோடிக்கண்கள் பேசின
எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன
எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன
எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன.

வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது.
கருணையை கையேந்தி இரந்துகொண்டே
பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும்
ஆட்டின் குருதியென உறைந்திருந்தன.

சுருட்டுப்புகையோடு
ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும்
'சொக்கன்அண்ணா'
ஒருநாள் மாலைக்கருக்கலில்
பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது
கண்கள் மட்டும்
விழிந்தபடியே உறைந்திருந்தன.

சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை.
குப்பையில் தூக்கிவீசப்பட்ட
ஒரு பொம்மையைப் போலவே!
04/2012
---

16 கருத்துகள்:

 1. சொற்கள் செத்துப்போன கணங்கள்.மனதைத் தொடும் கவிவரிகள்.மரணம் அணுகாத நிலையிலும், சொற்கள் செத்துப் போகும் கணங்கள் வருவதுண்டு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தாட்சாயணி.

  பதிலளிநீக்கு
 3. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாகவே கவிதைபுனையப்பட்டுள்ளது.
   மண்ணும் கல்லும் சாந்தும்
   குழைத்தெழுந்த சுவர்களுக்கு
   ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,
   மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின.
   படிமங்கள் பூசப்பட்டுள்ளன.

   நீக்கு
 4. ரவியண்ணா; வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ”பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும்
  ஆட்டின் குருதியென”
  வலிக்கும் உவமை.உறைந்து போன கண்களில்
  நிறைந்து பரவும் வலி
  சொற்களை காட்டிலும் அடர்த்தியானதாய் இருக்கிறது.


  ”எத்தனை ஜோடிக்கண்கள்
  பேசின
  துடித்தன
  இரந்தன
  பார்த்துக்கொண்டேயிருந்தன.”

  சொல்லாமல் சொல்லும் கண்களின்
  சொற்கள் கனதியானவை.

  பதிலளிநீக்கு
 6. நன்றி தீபிகா. உங்களின் காத்திரமான கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 7. //கண்கள் மட்டும்
  விழிந்தபடியே உறைந்திருந்தன.//

  சேரனின் 'உடல்' கவிதையில் இறப்பிலும் மூட மறுத்த கண்கள் என ஒரு வரியுண்டு. உங்கள் கவிதை அதை நினைவூட்டியது. நல்ல படிமங்கள் வாயக்கிறது தங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமாவளவன்.

  பதிலளிநீக்கு
 9. "..சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை.்்"
  மனம் உறைய வைத்த கணம் இது.

  பதிலளிநீக்கு
 10. முகநூலில் நண்பர்கள் சொன்னவை.

  Packiyanathan Murugesu
  good

  13 hours ago
  Rahila Halam
  என் கண்களும் உறைந்துப் போயின... பா வினைக் கண்டு......
  அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...........

  13 hours ago
  Waseem Akram
  good. poem.


  8 hours agoMullai Amuthan
  nice to read.wishes

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை.

  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,
  என்னுடைய வலைப்பூக்கு ஆதரவு தரும் படி வேண்டுகின்றேன்

  என்றும் அன்புடன்
  உங்கள் செழியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செழியன்.

   நீக்கு