டிசம்பர் 19, 2014

படங்காட்டுதல்- துவாரகன்

தெருவுக்கொரு தியேட்டர்
பொழுதுக்கொரு புதுவரவு
யார் காட்டும் படத்தை முதலில் பார்ப்பது?

பற்களிள் இடுக்குகளில் நரமாமிசம்
கைகளெல்லாம் காய்ந்துபோன கறை
தழும்பு கொண்ட முகமெங்கும் முகப்பூச்சு
புன்னகை முகமென்னும் நினைவோடையில்
தள்ளுவண்டில் சுண்டல்காரன்போல்,
கூவி அழைக்கிறார்கள்.
தகரக்கொட்டகைகளும் தறப்பாள் குடில்களும்
காணாமற்போகும் நாள்வரும் என்று
கூவி அழைக்கிறார்கள்.

நீங்களே நடித்து
நீங்களே இயக்கி
நீங்களே அனுமதிச்சீட்டு எடுத்து
உங்கள் படங்களை
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

மழைவெள்ளம் தேங்கிய
என் வீட்டுமுற்றத்தையும்
சரிந்து கிடக்கும் தகரக் கொட்டகையையும்
நான் சரிப்படுத்தவேண்டும்.
11/2014

நவம்பர் 10, 2014

எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது
- துவாரகன்

காலநீட்சியின் பின்
எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது.

மூத்தோருக்கும்

காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும்
மற்றோருக்கும்
இயலாதபோது கைகொடுக்கும்
ஊன்றுகோல் அல்ல இது.

உடையாருக்கு குடை பிடிக்கவும்

பக்கப்பாட்டுப் பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல்.
இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.

திண்ணையில் கதையளக்கும்போதும்

அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும்.
ஊன்றுகோல் பற்றியே இனி கனவுகாணவேண்டும்.
நடக்கும்போது சேறுபடாமல் பார்த்துக்கொள்ளவும்,
மிகப் பவித்திரமாக…
குளிக்கும்போது அதற்கும் ஒரு நீராட்டு செய்யவும்
சிந்திக்கவேண்டும்.
உக்கிப்போகாதபடி வர்ணம் பூசவும்
வெள்ளி முலாமிட்ட கிரீடம் ஒன்றினை
அதற்குச் சூட்டிக்கொள்ளவும்
ஒருவரின் உதவியை நாடவேண்டும்.

சமையற்கட்டில்

வேலைத்தளத்தில்
வாசிகசாலையில்
கோயிற் திருவிழாவில்
இன்னும்... பொதுமேடைகளில்
எனக்குக் கிடைத்த ஊன்றுகோல் பற்றியே
இனிப் புகழ்ந்து பேசவேண்டும்.

காலநீட்சியின்பின்

கிடைத்த ஊன்றுகோல் இது.
நன்றாகப் பற்றிக்கொள்ளவும்
இரவல் கொடுத்திடாது காத்துக்கொள்ளவும்
என்னைப் பழக்கப்படுத்தவேண்டும்.
10/2014
---

ஜூலை 07, 2014

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்


- துவாரகன்அடி அழகி, இவ்வளவு காலமும்
குளத்துத் தெருவோரம்
வெறும் திரளைக் கற்களை
பொறுக்கிகொண்டிருந்தேனே!
என் காலங்களைக் கரைத்து விட்டேனடி!

செல்லத்துரையரும் ...காத்தானும்...
குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்...
பெரியவளவு முதலியாரும்...
உன் வீடு வந்து போகும்போதெல்லாம்
பொறாமை கொண்டேனடி.
என் காலங்கள் வீணானதடி.

உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர்.
நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து
பொக்கிசமாய் பொத்திவைத்தேன்.
அந்த ஏடுகளைச் சிதைத்தவரே.
மிச்சமிருப்பனவும் தருவேன்
தீயிட்டுப் பொசுக்குவீர்.

கனகி, அவள் அழகி.
அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும்.
அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க
என்னையும் சேர்த்திடுவீர்.
அவள் பேச்சின் நளினமும்
அவளின் அசைவின் அர்த்தமும்
இத்தனை நாள் தெரியாதிருந்தேனே!

அன்பரே வாரீர்!
கனகியின் பெருமை கேளீர்!!

அவள் கூந்தலில் கொண்டை பாரீர்!
அவள் கைகளில் விரல்கள் பாரீர்!
அவள் கால்களில் கொலுசு பாரீர்!
அவள் முகத்திலே கண்கள் பாரீர்!
---
(குறிப்பு – ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற அங்கதநூலே ‘கனகிபுராணம்’. இதனை எழுதியவர் நட்டுவச் சுப்பையனார்)

மார்ச் 03, 2014

நாங்கள் மனிதர்?
- துவாரகன்

எத்தனை மனிதர்
எத்தனை முகம்
எத்தனை குணம்
எத்தனை குரூரம்

ஒரு பொம்மையைக்கூட...
கைவேறு கால்வேறு கழற்றிப்போட
மனம் பதறுகிறது.

ஒரு சைக்கிளைக்
கழற்றிப் போட்டதேபோல்
மனிதர்களைச் சிதைத்துவிடும் குரூரத்தை
எங்களுக்கு யார் கற்றுத் தந்தார்?

விடிகாலை,
மண்வெட்டி தோளில் சாய்த்து
மண்ணைப் பொன்னாக்கிய
மனிதர் நாம்.
இன்று
மனிதர்களைப் பிளந்து கொண்டிருக்கிறோம்.
03/2014