பிப்ரவரி 11, 2012

தலைப்பில்லாதது
-துவாரகன்

இனி எந்தப் பிஞ்சுக் குழந்தை
உன் விரல் பிடித்து நடந்து வரும்?
இனி எந்தக் குமரி உன்னைப் பார்த்துக்
கண்சிமிட்டிக் கதை பேசுவாள்?

என் சின்னப் பெண்ணை
என் சகோதரியை
என் மனைவியை
என் அம்மாவை
என் பாட்டியை
இனி எந்த நம்பிக்கையுடன்
குறிகள் மட்டுமே உள்ள
உனக்கருகில் தனியே விட்டுச் செல்வேன்?

நான் வெளியேறி மீண்டுவரும்போதெல்லாம்
என் கால்விரல் நக்கி
அன்பைச் சொல்லும்
என்வீட்டுச் சின்ன நாய்க்குட்டியிடம்
இருக்கும் ஈரம்கூட;
உன் உலகத்தில் இருந்து
நழுவிக்கொண்டிருக்கிறது.

கனவிலும் நனவிலும் திடுக்கிட்டு விழித்து
‘எங்கே என் சின்னப்பெண்’ எனத் தவிக்கும்
ஈரவிழிகளின் உலகத்தில் தான்;
இன்னமும்
குறிகள் மட்டுமே உள்ளவர்
மனிதரென வாழ்கிறார்.
02/2012
நன்றி - பதிவுகள், காற்றுவெளி