தூய்மையும் தூமையும்



-துவாரகன்

இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்

பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?

முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.

தொப்புட்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்

உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?
03/2011
நன்றி - பதிவுகள்/

கருத்துகள்

  1. கவிதை நன்று.கருத்துக்கு பலகருத்து எடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. வாசனைப் பூச்சும்
    வண்ண மலர் செண்டுகளும்
    உள்ளத்துத் தீட்டை
    மறைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. மறைக்கமுடியாதுதான். ஆனால் 'பூர்வீகமும் நாமமும்' தீட்டெனக் கூறுபவனிடத்தில் இவற்றை பெரிதுபடுத்திப் பயனில்லைத்தானே!

    பதிலளிநீக்கு
  4. ரவி அண்ணா சொன்னது போல் உன்னிப்பாகப் படிக்கும் போது இக் கவிதை பல தளங்களுக்குச் செல்கின்றது. முகப் பூச்சென்றதும் எனக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமலன்

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் கவிதை அர்த்தமான கவிதைதான். பட்டுப்போன மரக்கொட்டு எதன் உருவகம் என்பது எனக்குப்புரியவில்லை. இன்னும் தூமை என்னும் வார்த்தைபற்றிச்சொல்ல நிறைய இருக்கிறது. நான் தூமை இதழுக்கு எழுதிய அஞ்சலின் பிரதியை இணத்திவிடுகிறேனே.

    = தூமம் =

    சொன்னது யாரென்று கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், நம்புங்கள் எங்கள் கவிப்பேரரசுதான் சொல்கிறார் தூமச்சீலை என்பது தூய்மைச்சேலை என்பதன் திரிபாம்.
    (கள்ளிக்காட்டு இதிகாசம், பக்கம் -121) அதாவது தூமச்சேலையில் இருக்கும் அழுக்கு அல்லது உடைந்துவெளியேறிய பெண் முட்டைகளின் சிதிலமும் குருதியும் ஒருபோதும் தூமம் என வழங்கப்படவில்லை எனவும் கொள்ளலாம். காரணம் தூமம் அல்லது தூமை என்கிற சொல் இலக்கியங்களிலோ காவியங்களிலோ இதிகாசங்களிலோ எங்கும் பதிவாகியிருப்பதாகத் தெரியவில்லை. வேதியியலில் தூமம் என்றால் வாசனைத்திரவியம் அல்லது Fumes என்றே பொருள்படும். பெண்களைப்பழித்த சித்தர்களோ , பட்டினத்தார்கூட பீறுமலமும் குருதியும் வழியும் பெருங்குழியினின்று ஏறும் வழி கண்டிலேன் என்றாரே தவிர தூமம் என்கிற வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை என்பதுவும் கவனிக்கப்பாலது.

    பதிலளிநீக்கு
  7. 'பட்டுப்போன மரக்கொட்டு' என்னைப்பொறுத்தவரை மிகச் சாதாரண பொருள். அதைப்போன்றவற்றை தூக்கி வைத்துக் 'கொண்டாடுதல்' எமது தற்போதைய சூழலில் மிக அதிகம்.

    மேலும் தூமை பற்றிக் குறிப்பிட்டீர்கள். தர்மினியின் தளம் ஏற்கனவே வாசித்து வருகிறேன். உங்கள் அனுபவ முதிர்ச்சியால் வழிப்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது