அக்டோபர் 30, 2011

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது




-துவாரகன்

உயிரைக் கொண்டோடிய கணத்தில்
தாயைப் பறிகொடுத்தாள்.
சோதரி கைபிடித்து
மீண்டு வந்தாள்.

வாரப்படாத தலை
கறைபடிந்த பற்கள்
உயிர்ப்பற்ற சிரிப்பு
குமரியானாலும் குறுகி நடந்தாள்
தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள்

சில அப்பாக்களைப் போலவே
ஒருநாள் புதுத்துணைவியோடு
பெற்றவன் வந்தான்.
வாடிய பூக்களிடையே
மீண்டும் அவள்
காணாமற்போயிருந்தாள்.

அவளுக்கென்று எதுவுமில்லாதபோது
ஒருநாள்
அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள்.

அவளுக்கொரு
புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது.
10/2011

(குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)


9 கருத்துகள்:

  1. நன்றே உள்ளது.அவளுக்கு ஒரு புது சயிக்கிள் எப்படி கிடைத்தது?வாழ்க்கையோடு அமைந்துவிட்டதா?சயிக்கிளை மறைபொருளாக கூறுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  2. (குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)

    பதிலளிநீக்கு
  3. போர் அழித்துவிட்டுச் சென்ற வாழ்வின் உயிர்ப்பை உயர்திணைகள் முடியாத போது அஃறிணை பொருட்களாலும் ஏற்படுத்தமுடியும் போலும்...இழைந்துவரும் சந்தம் ஒன்றும் அது சுமந்துவரும் துயரின் கசிவும் சடாரென்று மனதை அறைகிறது..அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அவளுக்கென்று எதுவுமில்லாதபோது...
    என்கிற வரி வலிக்கிறது.
    அவள் இழந்துபோன
    சிரிப்பின் உயிரை...
    யாரால் திருப்பிக் கொடுத்துவிட முடியும்?
    காயங்களை ”நன்று” என
    சொல்லிவிட முடியவில்லை.
    மனசை கனக்க வைக்கிற கவிதை.


    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. "அவளுக்கென்று எதுவுமில்லாதபோது..." அது கவிதையில் ஒரு வரிதான். ஆனால் அவளின் வாழ்க்கையில் அது பெரிய கதைக்குரிய வரி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீபிகா.

    பதிலளிநீக்கு