உக்கிப்போன சொற்கள்
-துவாரகன்
நாற்றத்தைத் தூவும்
சொற்களைத் தூக்கி எறி
பழைய ஓலைப்பாயைப்போல்
போகும் இடமெல்லாம்
நீதானே அந்தச் சொற்களைத்
தூக்கிச் செல்கிறாய்
வெள்ளையும் மஞ்சளுமாய்
உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும்
காய்ந்துபோன மாமரக் கொப்பென
சொற்கள்
வழியெங்கும் சிதறுகின்றன.
வீட்டு யன்னல்களை
இறுகப் பூட்டிக்கொண்டு
ஒரு கணம்
வீட்டையும் நாற்றத்தையும்கூட
குற்றம் சொல்கிறாய்.
அந்தச் சொற்களைத் தூக்கி எறி.
விறகுக்கட்டின் கீழிருந்து
செத்துப்போன ஒரு எலியைத்
தூக்கி எறிவதேபோல்!
12/2011
நல்ல கவிதை. கவிஞனின் எண்ணம் பவித்திரமானது. மேலும் நுணுகிப்பார்க்கையில் இரண்டு இடங்களில் என் புருவங்கள் நெரிந்தன. நாற்றத்தைத் தூவும் என்கிற வரிகள்.நாற்றம் தானாகவே பரவக்கூடியது. தூவுப்பட புறச்சக்தி இருக்கவேண்டும். ஆகவே தூவும் என்பது -> கமழும் அல்லது காலும் என்கிற வார்த்தைகளால் பிரதியீட்டப்பட்டிருந்தால் மேலும் அழகு.
பதிலளிநீக்குஅடுத்தது செத்த எலியை விறகுக்கட்டிலிருந்து தூக்கி எறிந்திருந்தாற்கூடப்பரவாயில்லை. அது விறகுக்கட்டிலின் கீழே எறியப்படுகிறதென்கிற தகவல் எதற்காக அங்கே என்பது மர்மமும், இன்னும் கவிதைக்குள் மேலதிகமும்!
இருந்தும் காத்திரமான கவிதை ! பாராட்டுக்கள் !
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. ஓரிடத்தில் பிழை ஏற்பட்டுவிட்டது.தவறு என்னுடையதுதான்.
பதிலளிநீக்கு"விறகுக்கட்டின் கீழிருந்து" என வரவேண்டும். திருத்தியுள்ளேன்.
மற்றையது "நாற்றத்தைத் தூவும்" என வருவதுதான் எனது கவிதையின்படி சரியென நினைக்கிறேன். ஏனெனில் யாரோ ஒருவரால் தூவப்படுகிறது என்றுதான் அர்த்தம். ஆகவே தானாகப்பரவாத நாற்றம்.
ஆரோக்கியமாக சுட்டிக்காட்டிய கருணாகரமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் அன்பு கலந்த நன்றி.
"..நாற்றத்தைத் தூவும்
பதிலளிநீக்குசொற்களைத் தூக்கி எறி ..
ஒவ்வொருவரும் தூக்கி எறிந்தால்
ஒவ்வாரு கணமும் சொர்க்க வாழ்வுதான்.
அருமையான கவிதை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்.
பதிலளிநீக்குபழைய ஓலைப் பாயும்..உளுத்துப்போன மாமரக் கொப்பும் அருமையான உவமைகள்.
பதிலளிநீக்கு"செத்துப் போன எலியை தூக்கி எறிவதைப் போல". தூக்கியெறிந்தால் இன்னோரிடத்தில நாற்றங்களை பரப்புகிறவர்களாக நாம் ஆகி விட மாட்டோமா.
வெட்டிப் புதைத்துவிடு என வந்திருக்கக் கூடாதா?
தீபிகா.
தீபிகா, உங்கள் கேள்வி நியாயமானதுதான். சுவாரஷ்யமாகவும் உள்ளது.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நந்தினி சேவியர் மின்னஞ்சலில் எழுதியது
பதிலளிநீக்குNanthiny Xavier nanthinyxavier@yahoo.com
10:08 AM (11 hours ago)
to me
mika nallakavithai. thoppi alavanavarkal poddukolladdum. unkal kavithayin sotkal ukkippokathavai. vasakan . nanthinyxavier.