ஆகஸ்ட் 25, 2011

மூளை விற்றவர்களின் கதை



-துவாரகன்

நான் சிறுவனாக இருந்தபோது
அயலூரில்
ஒரு மூளைதின்னி இருந்தானென்று
அம்மா சொல்வாள்.
வேகும் பிணத்தின்முன்
சுடுகாட்டில் காத்திருப்பானாம்.

இப்போ
மூளை விற்ற
மனிதர்களைக் கண்டுகொண்டேன்.

பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு
நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள்
செம்மறியாட்டினதும்
குரங்கினதும்
காண்டாமிருகத்தினதும்
மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள்
சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள்

உடையுண்டு நிறமுண்டு
கையுண்டு நகமுண்டு
காலில்லை பேயென்று
என் குழந்தை சொல்கிறது

நான் சொல்லிக்கொள்கிறேன்
அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று

நாங்களும் யோசிக்கலாம்
எங்கள் மூளைகளை
நல்ல விலைக்கு விற்பதுபற்றி…!
08/2011

2 கருத்துகள்:

  1. மூளையை விற்றுவிட்ட பல ஈழத்து தமிழ் இலக்கியவாதிகளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவள் நான்!! உங்கள் கவியை நேராகக் கண்டவள்

    பதிலளிநீக்கு
  2. அப்படி எங்கள் இலக்கியவாதிகள் இருக்கக்கூடாது. அவர்களின் குரல்கள்தான் ஓங்கி ஒலிக்கவேண்டும் தாரணி.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு