இடுகைகள்

யாருக்குத் தெரியும்?

படம்
-துவாரகன் இவ்வளவும் நடந்த பிறகும் எனது வீடு இருந்த வீதி இருக்கிறது அப்பு துலாக்கோலுக்குப் போட்ட பெரிய கல்லு இருக்கிறது ஆனால் அவளின் உதிரப்பூ மட்டும் இல்லை. யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ நாய்கள் இழுத்து இழுத்துச் சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ சுட்டுத்தள்ளியவன் உருத்தெரியாமல் எரித்துவிட்டுப் போனானோ யாருக்குத் தெரியும்? இன்று எல்லோரும் உன்னை மறந்து விட்டார்கள் தன் மடியில் வைத்துப் பாலூட்டியவள் விறைத்துப்போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள் அதிஷ்டவசமாக நீ, அவள் முன்னால் வந்து சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் கணங்களுக்காக இன்னமும் உயிரோடிருக்கிறாள். 020920102013 நன்றி - காற்றுவெளி

விசப்பாம்புகளின் உலகத்தில் வாழ்தல்

படம்
-துவாரகன்- எப்போதும் தீண்டுவதற்குத் தயாராகத் தலையுயர்த்திய பாம்புகளின் உலகத்தில் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம். சதா நாவை நீட்டிக் கொண்டு புற்றிலும் பற்றை மறைவிலும் ஆட்களற்ற வெளிகளிலும் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. குறிவிறைத்து அலையும் குழுவன்மாடுபோல் கூட்டுக் கலவியில் களித்திடத் துடிக்கும் தெருநாய்கள்போல் அலைகின்றன. பெருந்தெருக்களில் தம் விஷப்பற்களைக் காட்டி இளிக்கின்றன. நஞ்சுப் பையை வாயில் ஒளித்து வைத்துக் கொண்டு எங்கள் இருக்கையையும் படுக்கையையும் பங்கு கேட்கின்றன. பக்கத்தில் புற்றிருந்தும் கொல்வதற்குத் தடியிருந்தும் பாம்புக்குப் பால்வார்க்கும் உத்தமர்களோடு ஒன்றும் இயலாத குஷ்டரோகிகளாக சுற்றியிருக்கின்றனர் மனிதர். இது பாம்புகளின் உலகம் அதில் நாங்கள் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம். 160820102225

உன் தந்தையின் கச்சை நெடி உன்னிலும் வீசுகிறது

படம்
-துவாரகன்- நாற்றம் கொண்ட வாயுடன் அலையும் அற்பனே உன் பாவத்தை கழுவ என் கிணற்று நீர் கூட அனுமதிக்காது. அதற்குள் புனித நீரா தேடுகிறாய் என் உடைவாள் என் கைப்பை நான் படுக்கும் சாக்குக் கட்டில் குந்தியிருக்கும் திண்ணை எல்லாம் தேடி விட்டாய் என் ஆச்சியும் அப்புவும் கால்நீட்டிக் கதை பயின்ற முற்றம் இது கழிசடையே என் மூத்திரக் கோடிகூட உனக்கு உரியதல்ல உன் தந்தையின் கச்சை நெடி உன்னில் இன்னும் பலமாகத்தான் வீசுகிறது. 160720101050

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?

படம்
-துவாரகன் மூன்று மரக்கம்புகளும் பிளாஸ்ரிக் விரிப்பும் கிடைத்தாகி விட்டது மீளவும் ஒரு கூடாரம் தயார். பொதிகளைக் கிளறி தங்குவோர் பெயரைக் கேட்கும் காவற்காரனே ஆக மிஞ்சி எங்களிடம் என்ன இருக்கப் போகிறது? தண்ணீர் பிடித்துக் கொள்ள ஒரு பிளாஸ்ரிக் குடுவை பிள்ளைகளோடு படுத்துறங்க இரண்டு பாய்கள் அலுமினியப் பாத்திரங்களோடு கோப்பைகள் கூடவே துணிமூடைகள் இளைய பிள்ளையின் வயிற்றுப் பகுதியில் சிவப்புக் கொப்புளங்கள் தெரிகின்றன மூத்த பிள்ளையின் முகமெல்லாம் வீங்கி வடிகிறது காய்ந்து போன விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் மனைவி நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில் இந்தக் கூடாரத்தை விட்டு எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும். இல்லையெனில் என் பிள்ளைக்கும் பிள்ளையின் பிள்ளைக்கும் இதுவே முதுசமாகலாம். வயிற்றோட்டமும் சளியும் பிள்ளைகளின் பரம்பரைச் சொத்தாகலாம் வெடித்துச் செதிலாகிப் போன என் கால்களையும் கைகளையும் நான் சொறிந்து கொண்டிருக்கலாம் என் அழகான மனைவி கால்கள் சூம்பி மூப்பும் பிணியும் கொண்ட மூதாட்டியாகலாம் நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா? கனவான்களும் ஆட்சியாளர்களும் கோட்டுடன் கோவைகளைச்...

மே 17

படம்
பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாக அழிக்கப்பட்ட எங்கள் உடன் பிறப்புக்களின் நினைவுகளுக்கு...

பல் ஈறுகளில் நெளியும் புழுக்கள்

படம்
-----துவாரகன் எப்போதும் ஆவென்றபடி கிடக்கும் உன் வாயிலிருந்து புழுக்கள் நெளிவதை நானும் கண்டு கொண்டேன். நூற்றாண்டுகளுக்கு முன் உன் தந்தையர் கடித்துச் சுவைத்த நரமாமிசத்தின் மீதியிலிருந்து உனக்கான புழுக்கள் உருப்பெற்றிருக்கின்றன. அழுகி வடியும் துர்முகத்தினூடே புண்களால் வழிந்தொழுகும் நிணத்தினூடே கற்றை கற்றையாய் எட்டிப் பார்க்கின்றன பற்களிலிருந்து வெளிப்படும் புழுக்கள் செத்துப்போன மிருகங்களின் உடல்களிலும் அழுகிப்போன பண்டங்களிலும் மூக்கைச் சுழிக்க வைக்கும் மலத்திலும் நான் கண்டு கொண்ட நெளியும் புழுக்களை இன்று உன் பல் ஈறுகளிலும் கண்டு கொண்டேன். உன் கதையினூடேயும் உன் செயலினூடேயும் உன் நாவுக்கும் விரல்களுக்கும் அவை தாவுகின்றன கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் தொற்றிவிடுமோ என்று இப்போ நானும் அச்சம் கொள்கிறேன். என் அப்பா, அப்பாச்சி கூட உன் தந்தையர் பற்களிலிருந்து முன்னரும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு கொண்டதாகச் சொன்னார்கள். நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் நரமாமிசம் தின்ற வாயை தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க இன்னுமா உனக்குத் தெரியவில்லை? ஆறாத புண்ணிலிருந்து உற்பவிக்கும் வெள்ளைப் புழுக்கள் இனி, ம...

துயர மலைகளைச் சுமக்கும் மடிகள்

படம்
-----துவாரகன் உரையாடலின் நடுவில் ‘இது எனது மூத்தவனின்’ என்றபடி அந்தப் பச்சைப் பிளாஸ்ரிக் கோவையை என்னிடம் தந்தபோது என் கைகள் நடுங்கின அவனைத் தாங்குவதுபோல் மிக மெதுவாகப் பற்றிப் பிடித்தேன். பள்ளியில் அவன் பெற்ற பெறுபேறுகள் சான்றிதழ்கள் திறமைகள் எல்லாம் அந்தக் கோவையில் இருந்து சிரித்தன என் கைவிரல்கள் ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டிருந்தன. அந்த பெரிய உருவத்தில் சின்னக் கண்களும் பழைய கரியல் வைத்த சைக்கிளில் எப்போதும் சரித்துக் கொழுவப்பட்ட வளைபிடியிட்ட கறுப்புக் குடையும் சின்னச் சிரிப்புடன் கதைகூறும் மென்மையும் ஒவ்வொரு சான்றிதழ்களிலும் படமாய்த் தொங்கின. உன் அன்னை நீ படிக்கும் இரவுகளில் நித்திரைத் தூக்கத்தோடு சுவரில் சாய்ந்திருந்து காவலிருந்தாள் உனக்குப் பிடித்தவற்றைத் தேடித் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டாள். தன் வாழ்நாளில் சிறுகச் சிறுகச் சேமித்து உன்னைப் படிக்க வைத்து உயர்வில் மகிழும் ஒவ்வொரு கணமும் உன் தந்தைக்கு காத்திருந்த கணங்களாகியது. முதற்பக்கத்தில் குழந்தையாய்த் தவழ்ந்த படத்தைச் செருகி வைத்திருந்தாள் உன் தங்கை. இறுதிப் பக்கத்தில் அஞ்சலிப் பிரசுரத்தை ஞாபகமாய் வைத்திருந்தான் உ...

யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்

படம்
-துவாரகன்- ஒருநாள் நீ வந்தாய் புதியதொரு பிறப்புச் சான்றிதழ் படிவத்தோடு ‘இதை நிரப்ப வேணும் சேர்’ என்றாய் அப்போது நான் அறிந்தது உன்னை தர்மேகன் என்று. பிறப்புச் சான்றிதழில் உன் பெயர் தர்மவேகன் என்றாய் இருவரும் சிரித்துக் கொண்டோம் பின்னர் சங்கடத்துடன் கூறினாய் ‘என்ன சேர் செய்யிறது? மாறிப் பதிஞ்சிட்டாங்களாம்! நீங்கள் இப்படியே எழுதுங்கோ’ அன்றிலிருந்து எம் குரு சிஷ்ய உறவு தொடர்ந்தது வசீகரிக்கும் கறுப்பு நிறத்தில் நீ எந்நேரமும் துருதுருத்துக் கொண்டிருக்கும் உன் விழிகள். பல்வரிசை காட்டி நீ சிரிக்கும் அழகு கண்ணில் நின்று ஆடுதடா கற்றலில் விளையாட்டில் வழிகாட்டலில், வழிநடத்தலில் கைகொடுப்பதில் எங்கும் உன் செம்மை கண்டேன் சேமமடு ஆசிரியர் விடுதியில் எம்மோடிருந்து படித்து உறங்கிய ஒரு நாள் உனது இடது உள்ளங்கால் தோலை எலி அரித்து விட்டுச் போனது காலை எழுந்தவுடன் பாயில் இருந்தபடி உன் காலைக் காட்டியபோது தேங்காய் அரித்த அடையாளம்… ‘நீ வெள்ளையாய் வருவாய்’ என்றோம் மறுநாள் ‘அக்காவின் மோதிரம் சூடுகாட்டிச் சுட்டேன்’ என்றாய் உனக்குக் கிடைக்கும் சுவையான சாப்பாடு எங்களின் பங்குபோடலுக்குக் கொண்டு வருவாய் மாலை முழுவதும் ந...

இரண்டு கவிதைகள்

படம்
1. என்னை நானே சொறிந்து கொள்ளல் -----துவாரகன் என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல் மிகச் சுகமாக இருக்கிறது மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க இது மிக நல்லது நாகரிகமானது மற்றவரின் முதுகு சொறியும்போது அருவருப்பாக இருக்கும் தேமல் படர்ந்த தோல்களும் ஊத்தை நிரம்பிய உடம்புமாக இருக்கும் மற்றவரின் முதுகை இவர்கள் எப்படித்தான் முகம் சுழிக்காமல் சொறிந்து கொள்கிறார்களோ? யூன் 2008 2. உருமாற்றம் குரங்கு தன் உடம்பைச் சொறிந்து கொள்கிறது. என்னைப் பார்த்துப் பல்லிளிக்கிறது. நானும் என் உடம்பைச் சொறிந்து கொள்கிறேன். பல்லிளித்துக் கொள்கிறேன். பல்லிளிப்பதாலும் சொறிந்து கொள்வதாலும் நானும் குரங்காகிட முடியுமா? நான் நானேதான். யூன் 2008

* யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை

படம்
-----துவாரகன் ஒரு நாள் என் வீடு இருந்தது. வயல்வெளிக்கு நடுவே ஆலமர விருட்சம் போல் அரைக்காற்சட்டையோடு அண்ணா டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான் அப்பா விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார் மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும் குளத்தில் வரால் மீன் பிடிக்கவும் சின்னத்தம்பி என்னுடன் வருவான். தங்கையும் நானும் கதை பயில தேக்கமரமும் மலைவேம்பும் எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள். மாலையானதும் மாடுகள் அசைபோடுவது போல் உறவுகள் சுற்றியிருந்து அன்பை அசைபோடுவோம். அம்மாவும் பெரியக்காவும் சுவையாகச் செய்த சாப்பாடு. செய்திக்குப் பின் அப்பா என்னிடம் தரும் றேடியாவில் வழிந்து வரும் பாட்டு. காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம் எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன். இப்போ இரண்டு காவலரனுக்கு நடுவில் மழை வெள்ளம் தரைதட்ட தொண்டு நிறுவனம் தந்த படங்கு காற்றில் அடிக்க எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில் அம்மாவின் காய்ந்த விழிகளோடு நானும் காத்திருக்கிறேன். யாரோ போட்டு முடித்து முகாமொன்றில் தானமாகக் கிடைத்த ஒரு இரவுச் சட்டை என்னை மூடிக்கிடக்கிறது. 241220091122  * (தலைப்ப...