ஜூன் 01, 2010

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?-துவாரகன்

மூன்று மரக்கம்புகளும்
பிளாஸ்ரிக் விரிப்பும்
கிடைத்தாகி விட்டது
மீளவும் ஒரு கூடாரம் தயார்.

பொதிகளைக் கிளறி
தங்குவோர் பெயரைக் கேட்கும் காவற்காரனே
ஆக மிஞ்சி
எங்களிடம் என்ன இருக்கப் போகிறது?

தண்ணீர் பிடித்துக் கொள்ள
ஒரு பிளாஸ்ரிக் குடுவை
பிள்ளைகளோடு படுத்துறங்க
இரண்டு பாய்கள்
அலுமினியப் பாத்திரங்களோடு கோப்பைகள்
கூடவே துணிமூடைகள்

இளைய பிள்ளையின் வயிற்றுப் பகுதியில்
சிவப்புக் கொப்புளங்கள் தெரிகின்றன
மூத்த பிள்ளையின் முகமெல்லாம் வீங்கி வடிகிறது
காய்ந்து போன விழிகளோடு
பார்த்துக் கொண்டிருக்கிறாள் மனைவி

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில்
இந்தக் கூடாரத்தை விட்டு
எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும்.
இல்லையெனில்
என் பிள்ளைக்கும்
பிள்ளையின் பிள்ளைக்கும்
இதுவே முதுசமாகலாம்.

வயிற்றோட்டமும் சளியும்
பிள்ளைகளின் பரம்பரைச் சொத்தாகலாம்
வெடித்துச் செதிலாகிப் போன
என் கால்களையும் கைகளையும்
நான் சொறிந்து கொண்டிருக்கலாம்
என் அழகான மனைவி
கால்கள் சூம்பி
மூப்பும் பிணியும் கொண்ட மூதாட்டியாகலாம்
நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?

கனவான்களும் ஆட்சியாளர்களும்
கோட்டுடன் கோவைகளைச் சுமந்து கொண்டு
தம் கழுத்துப் பட்டியை இறுக்கியபடி
விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வாழ்வை எங்களிடம் தருவதற்காக

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?
020520100145

5 கருத்துகள்:

 1. கவிதை மிக நன்றாக வந்துள்ளது. உண்மையில் எமது இனத்தை ஒரு சாபம் தொடர்ந்தபடியே இருக்கிறது... எமது அதிஸ்டம் பற்றிய எண்ணங்களில் வந்துவிட்ட அபத்தமும் வாழ்வில் அவர்களின் துயரும் நெஞ்சைப் பிழிவன. சிலர் ஏதோ தமக்கு இல்லைத் தானே என்று ஓடிக் காண்டிருக்கிறார்கள். உண்மையில் துவாரகன் உங்கள் சமூக அக்கறையும் கவிதையும் மிகவும் சிறப்பானது.. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் துவாரகன்

  கவிதை எங்கள் வாழ்வுச் சூழலை நேர்த்தியாக பேசுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்குரிய கவிதை ஒன்றை எழுதியிருக்கிறீர்கள்.

  "நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில்
  இந்தக் கூடாரத்தை விட்டு
  எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும்.
  இல்லையெனில்
  என் பிள்ளைக்கும்
  பிள்ளையின் பிள்ளைக்கும்
  இதுவே முதுசமாகலாம்."

  உங்கள் கவிதைகளுக்குரிய வலியினால் எழும் எரிச்சலும் வெறுமையும் கவிதையின் முக்கிய சாத்தியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. கருத்துக்களை எழுதிய நண்பர்கள் அஐந்தகுமார்> தீபச்செல்வன் ஆகியோருக்கு நன்றி. எழுதி என்னத்தைத்தான் சாதிப்பது? ஆனாலும் எழுதாமலிருக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. "கனவான்களும் ஆட்சியாளர்களும்
  கோட்டுடன் கோவைகளைச் சுமந்து கொண்டு
  தம் கழுத்துப் பட்டியை இறுக்கியபடி"

  இது மாறும் காலம் வருமா?
  மாற்ற எமக்கு வலிமை வேண்டும்.

  பதிலளிநீக்கு