துயர மலைகளைச் சுமக்கும் மடிகள்
-----துவாரகன்
உரையாடலின் நடுவில்
‘இது எனது மூத்தவனின்’ என்றபடி
அந்தப் பச்சைப் பிளாஸ்ரிக் கோவையை
என்னிடம் தந்தபோது
என் கைகள் நடுங்கின
அவனைத் தாங்குவதுபோல்
மிக மெதுவாகப் பற்றிப் பிடித்தேன்.
பள்ளியில் அவன் பெற்ற
பெறுபேறுகள் சான்றிதழ்கள் திறமைகள் எல்லாம்
அந்தக் கோவையில் இருந்து சிரித்தன
என் கைவிரல்கள் ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டிருந்தன.
அந்த பெரிய உருவத்தில் சின்னக் கண்களும்
பழைய கரியல் வைத்த சைக்கிளில்
எப்போதும் சரித்துக் கொழுவப்பட்ட
வளைபிடியிட்ட கறுப்புக் குடையும்
சின்னச் சிரிப்புடன் கதைகூறும் மென்மையும்
ஒவ்வொரு சான்றிதழ்களிலும் படமாய்த் தொங்கின.
உன் அன்னை
நீ படிக்கும் இரவுகளில்
நித்திரைத் தூக்கத்தோடு
சுவரில் சாய்ந்திருந்து காவலிருந்தாள்
உனக்குப் பிடித்தவற்றைத்
தேடித் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டாள்.
தன் வாழ்நாளில் சிறுகச் சிறுகச் சேமித்து
உன்னைப் படிக்க வைத்து
உயர்வில் மகிழும் ஒவ்வொரு கணமும்
உன் தந்தைக்கு காத்திருந்த கணங்களாகியது.
முதற்பக்கத்தில் குழந்தையாய்த் தவழ்ந்த
படத்தைச் செருகி வைத்திருந்தாள் உன் தங்கை.
இறுதிப் பக்கத்தில்
அஞ்சலிப் பிரசுரத்தை
ஞாபகமாய் வைத்திருந்தான் உன் தம்பி
இந்தத் துயரமலையை
எப்படித்தான்
தாங்கிக் கொண்டாள் உன்னைப் பெற்றவள்.
‘இது என்ரை மூத்தவன்ரை தம்பி பாருங்கோ’
உன்னைப் பெற்றவன் என் கரங்களில் தந்தபோது
கண்கள் பனித்ததடா?
190320102149
(வவுனியா விவசாயக் கல்லூரி மாணவன் திருநாமம் சிந்துஜன் ஞாபகமாக)
படிக்கும்போது கண்கள் பனித்து விட்டது!!!
பதிலளிநீக்குஆழமான வரிகள்,,,,தொடருங்கள்,,,,
நண்பர் சங்கருக்கு நன்றி. உண்மைச் சம்பவங்களைக் கவிதையாக்கும்போது அந்தக் கவிதைகள் சிலவேளைகளில் மற்றவரின் உணர்வையும் தொட்டுவிடுவது உண்மைதானே.
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் உண்மையின் வலிகளாய்த் தோய்ந்து துயரமாய் என்முன்னே நிற்கிறது
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி . உங்களின் வலைப்பதிவில் நீங்கள் ஏற்கனவே எழுதியவற்றை இணைக்கலாமே?
பதிலளிநீக்கு