மார்ச் 11, 2010
யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்
-துவாரகன்-
ஒருநாள் நீ வந்தாய்
புதியதொரு பிறப்புச் சான்றிதழ் படிவத்தோடு
‘இதை நிரப்ப வேணும் சேர்’ என்றாய்
அப்போது நான் அறிந்தது உன்னை
தர்மேகன் என்று.
பிறப்புச் சான்றிதழில்
உன் பெயர் தர்மவேகன் என்றாய்
இருவரும் சிரித்துக் கொண்டோம்
பின்னர் சங்கடத்துடன் கூறினாய்
‘என்ன சேர் செய்யிறது?
மாறிப் பதிஞ்சிட்டாங்களாம்!
நீங்கள் இப்படியே எழுதுங்கோ’
அன்றிலிருந்து
எம் குரு சிஷ்ய உறவு தொடர்ந்தது
வசீகரிக்கும் கறுப்பு நிறத்தில் நீ
எந்நேரமும் துருதுருத்துக் கொண்டிருக்கும்
உன் விழிகள்.
பல்வரிசை காட்டி நீ சிரிக்கும் அழகு
கண்ணில் நின்று ஆடுதடா
கற்றலில் விளையாட்டில்
வழிகாட்டலில், வழிநடத்தலில்
கைகொடுப்பதில்
எங்கும் உன் செம்மை கண்டேன்
சேமமடு ஆசிரியர் விடுதியில்
எம்மோடிருந்து படித்து
உறங்கிய ஒரு நாள்
உனது இடது உள்ளங்கால் தோலை
எலி அரித்து விட்டுச் போனது
காலை எழுந்தவுடன்
பாயில் இருந்தபடி
உன் காலைக் காட்டியபோது
தேங்காய் அரித்த அடையாளம்…
‘நீ வெள்ளையாய் வருவாய்’ என்றோம்
மறுநாள் ‘அக்காவின் மோதிரம் சூடுகாட்டிச் சுட்டேன்’ என்றாய்
உனக்குக் கிடைக்கும் சுவையான சாப்பாடு
எங்களின் பங்குபோடலுக்குக் கொண்டு வருவாய்
மாலை முழுவதும்
நுங்குக்குலை, பழங்கள் எமக்காகும்
வயல் வெளியும் மஞ்சள் வெயிலும்
குளக்கரையும் உலாவ வைப்பாய்
பல தடவைகளில் நீதான் வழிகாட்டி
வர்ணனையாளன்… எல்லாமே
குளத்தில் குளிக்கும்போது
சின்னமீன்கள்
உடம்பில் கடிக்கும் இதம்காண வைத்துவிட்டு
நீ குத்துக் கரணம் அடிப்பாய்
உன்னோடு சேர்ந்து நாமும் சின்னவர்களாவோம்.
எந்த வேலையும் உனக்கு இலகுவாகும்
ஒரு விளையாட்டுப் போட்டி
‘சேர் வித்தியாசமாக ஏதும் செய்வோம்’
இல்லத்துக்கு ‘ஈபிள் ரவர்’ வடிவம் சொன்னேன்
கண்டவர் வாய் பிளக்க காரியம் செய்தாய்
சரஸ்வதி பூஜை, பரிசளிப்பு விழா
மாணவர் மன்றம், நாடக விழா
எல்லாம் முன்வரிசை நாயகன் நீ
வீட்டாரை உறவென்று ஆக்கினாய்
பேச்சாலும் சிரிப்பாலும் நட்பினைப் பெருக்கினாய்
பள்ளிப் பருவத்தை முழுதாய் அனுபவித்த
முதல் மாணவன் நீயடா
மூன்றரை வருடத்தின் பின்
உன் அம்மாவின் கையால்
மீண்டும் ஒரு தடவை
சாப்பிடும் அன்பு கிடைத்தபோது
என்னருகில் நீ இருந்து
‘சேர் வடிவாச் சாப்பிடுங்கோ’
அந்தச் செல்ல அதட்டல் காதில் கேட்டதடா!
இன்று
எல்லாம் இழந்து வந்த
உன் உறவுகளின் முன்னிருந்து
கதை பயிலத் தொடங்கினேன்.
உன் அத்தானும் அம்மைய்யாவும்
நீயும் இல்லாத
வெறிச்சோடிய வீட்டில்
உன் சிரிப்பினைச் சுமந்து கொண்டு
அக்காவின் பிள்ளைகள்
புன்னகைக்கக் கண்டேன்.
இப்போ உன் சிரித்த முகம் மட்டும்...
உன் அம்மாவின் காய்ந்த விழிநீரின் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
கொடுப்பில் வெற்றிலை வைத்துக் கொண்டு
நடுங்கும் குரலில் கதைக்க
உன் அப்பாவிடம் கண்டேனடா.
ஆவலாய்க் கதைகேட்கும்
உன் அக்காவின் கருவிழிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
டிரக்டர் சீற்றில் இருந்து
அதட்டிக் கதைசொல்லும்
உன் அண்ணன்மாரிடம் கண்டேனடா
தயங்கித் தயங்கி வேலை செய்யும்
உன் தம்பியின் உருவத்தில் கண்டேனடா
ஆனால்
உன் செல்லக்குட்டி மருமகளிடத்தில் மட்டும்
ஆசை அங்கிள் வருவார் என்று
உன் அன்புக்கு ஏங்கி நிற்கும்
சிரித்த முகத்தை இன்றும் கண்டு கொண்டேன்.
என் அன்பு மாணவனே
நீ தர்ம வேகன் என்பதாலோ
வேகமாகச் சென்றுவிட்டாய்?
11.03.2010
நன்றி - பதிவுகள்
(வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற எனது மாணவன் ஐ. தர்மேகன் நினைவாக)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எனது மாணவன் தர்மேகனுக்காய் நண்பர் தீபச்செல்வன் எழுதிய மற்றுமோர் கவிதை 'அந்தச் சிறுவன் திரும்பி வருவான் ' பின்வரும் தளத்தில் உள்ளது.
பதிலளிநீக்குhttp://globaltamilnews.net/tamil_news1.php?nid=21856&cat=9
அன்பின் துவாரகன் தர்மேகனுக்காய் எழுதப்பட்ட 'அந்தச் சிறுவன் திரும்பி வருவான் ' என்ற பதிவை 'THE BOY WOULD COME BACK' என லதாராமகிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கிறார்.
பதிலளிநீக்குhttp://edeebam.blogspot.com/2010/03/boy-would-come-back.html
என்ற எனது ஆங்கிலத்தளத்தில் படிக்க முடியும்.