யாருக்குத் தெரியும்?



-துவாரகன்

இவ்வளவும் நடந்த பிறகும்
எனது வீடு இருந்த வீதி இருக்கிறது
அப்பு துலாக்கோலுக்குப் போட்ட
பெரிய கல்லு இருக்கிறது
ஆனால் அவளின் உதிரப்பூ மட்டும் இல்லை.

யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
நாய்கள் இழுத்து இழுத்துச்
சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ
சுட்டுத்தள்ளியவன் உருத்தெரியாமல் எரித்துவிட்டுப் போனானோ
யாருக்குத் தெரியும்?

இன்று எல்லோரும் உன்னை மறந்து விட்டார்கள்
தன் மடியில் வைத்துப் பாலூட்டியவள்
விறைத்துப்போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்

அதிஷ்டவசமாக
நீ, அவள் முன்னால் வந்து
சிரித்துக் கொண்டிருக்கும்
அந்தக் கணங்களுக்காக
இன்னமும் உயிரோடிருக்கிறாள்.
020920102013
நன்றி - காற்றுவெளி

கருத்துகள்

  1. மூச்சுக்கள் தொலைந்துபோன
    அந்தக்கணங்கள்பற்றி யாருக்குத்தெரியும்?
    //அதிஷ்டவசமாக
    நீ, அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்
    அந்தக் கணங்களுக்காக...//

    பதிலளிநீக்கு
  2. //அதிஷ்டவசமாக
    நீ, அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்
    அந்தக் கணங்களுக்காக
    இன்னமும் உயிரோடிருக்கிறாள்.//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. "...யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
    உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
    கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
    நாய்கள் இழுத்து இழுத்துச்
    சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ.."

    கண்ணில் வழியும் நீரை
    கரவாய் வழித்து விட்டு
    ஒன்றும் அறியாப் பேதையென
    முழிக்கத்தான் முடிகிறது

    பதிலளிநீக்கு
  4. ஈழத்தில் பிள்ளைகளை இழந்துவிட்டு தவிக்கின்ற தாயரின் துன்பம் மிகுந்த வரிகளுக்கு கருத்துக் கூறிய, மதுரை சரவணன்> டொக்டர் எம்.கே. முருகானந்தன்> உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கவிதையின் "விறைத்துப் போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்" , "இன்னமும் உயிரோடு இருக்கிறாள்" ஆகிய வரிகள் கூறியது கூறல் போல் எனக்குப் படுகிறது.
    "விறைத்துப் போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்
    அதிஸ்டவசமாக - நீ
    அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்...
    அந்தக் கணங்களுக்காக"
    என்ற வரியுடனேயே கவிதை பூரணத்துவம் பெறுவதனால் கடைசி வரியை நீக்குவது கவிதையின் இறுக்கத்தை மேலும் வலுவடையச் செய்யும்.
    See more

    பதிலளிநீக்கு
  6. நினைக்கமுடியாத இழப்புக்குப் பின்னால் அவள் கற்சிலையாய் இருப்பது ஒரு விடயம் என்றால் அதிஷ்டவசமாக தன் பிள்ளை தனக்குத் திருப்பிக் கிடைக்கக் கூடும் என்பதற்காக உயிரோடிருக்கிறாள் என்றும் எடுக்கலாம். இதில் என்னைப் பொறுத்த வரையில் கூறியது கூறல் இல்லை. சாபம் பெற்று சிலையான அகலியையைப்போல. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

சபிக்கப்பட்ட உலகு -1