துவாரகன் பூங்குருவிகள் இப்போ சோலைகளுக்கு வருவதில்லை. நீரோடும் வாய்க்காலில் சிறகுலர்த்துவதில்லை. பறவைகளில் நீங்கள்தான் இனிமையாகப் பாடக்கூடியவர்கள் யாரோ கதையடித்து விட்டார்கள். அன்றிலிருந்து மண்டை வீங்கிய மனிதர்களாகிவிட்டன பூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன. கீச்சிடும் பறவைகளை அதட்டின. குழந்தைகளைத் துரத்திக் கொத்தின. வீதியில் வழிப்பறி செய்தன. வெற்றிலைத் துப்பலையும் கெட்ட வார்த்தைகளையும் கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல் கண்ட இடமெல்லாம் எச்சமிட்டன. வலதுபுறம் சமிக்ஞைகாட்டிவிட்டு இடதுபுறம் திரும்பின. இனி அந்த வயல்வெளியில் சிறகுலர்த்தும் அழகு இல்லை. இனிமை ததும்பும் மென்குரல் இல்லை. பூங்குருவிகளும் மனிதர்களைப் போலவே துரோகமும் ஏமாற்றுவித்தையும் கற்றுக் கொண்டனபோலும். நன்றி : வகவம், கவிதை இதழ் 2 2022/10
துவாரகனின் வலைப்பதிவு