முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நிர்வாண மனிதர்கள்

-          -  துவாரகன்   வெட்கப்படவேண்டியது நீங்கள்தான். உங்கள் நிர்வாணம்தான் வீதியெங்கும் மிதக்கிறது.   மண்ணைக் கிளறி வெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும் உ ழைப்பாளியும் உங்களைப் பற்றித்தான் கேலி பேசுகிறான். இதைவிட ஓட்டைச் சிரட்டைக்குள் சீவனை விட்டிருக்கலாம் என்கிறாள் அம்மா.   என் பாட்டனின் கைகளில் இருந்த தளநாரின் வலிமைகூட உங்களிடம் இப்போ இல்லை.   ‘யுரேக்கா’ என்றபடி அவன் வீதியில் ஓடியபோது யாருக்கும் அவனின் நிர்வாணம் தெரியவில்லை.   நாலுகூட்டுக் கச்சேரியான பரிவாரத்திலும் உங்கள் நிர்வாணமே எங்களுக்குத் துலக்கமாயிருக்கிறது.   முற்றும் துறத்தல் என்பதும் சாத்தியமில்லாதபோது, இருளே உமதானது. ஒளியே எமதானது. 13102021 https://vanakkamlondon.com/literature/2021/10/134691/?fbclid=IwAR3rIP-n2qjUAj488bo2MGo57bEdQ7hvJ6p8ALtftoNOxTG5SchABz9SJcw

அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல்

- துவாரகன்   இன்னும் எத்தனை காலம்தான் கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்? இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான் இந்தச் செம்பாட்டு மண்ணில் நடந்து திரிகிறாயா?   சுருண்டுபோன புடலங்காய்க்கு ஒரு சிறுகல் போதுமே! நான்கு தலைமுறையாக இந்த நிஷ்டையைக் கலைக்க ஓர் ஒளிப்பொட்டுக்கூடவா உனக்குக் கிடைக்கவில்லை?   இனி மலையைப் பிளக்கவேண்டாம் ஒரு கூழாங்கல்லைத் தேடி எடு எறிவதற்கல்ல. சுருண்டுபோன வாலை நிமிர்த்துவதற்கு. 01102021. நன்றி: https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/132500/?fbclid=IwAR0OgD5VcrmsiRCniJoK9KxdXUOpemS-5cI1CUvEJhi127p1GL-zJ3K7TLY

என் குழந்தையைக் களவாடியவன்

-        துவாரகன்   மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளை கன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன் எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி. எண்ணெய் பூசி தடுக்கில் வளர்த்தியிருந்தபோது அந்தத் திருடன் களவாடி விட்டான்.   நேர்த்திக் கடன் கழித்த சந்நிதியின் வாசலிலே முல்லைச் சிரிப்புடன் கைகளில் தவழ்ந்தது கண்டு அன்பு கொண்டவன். கன்னக்குழியின் அழகுபேசி கதை கேட்டவன்.   சற்று நாங்கள் கண்ணயர்ந்தபோது ஓசைப்படாமல் வந்து களவாடிவிட்டான்.   மார்பிருத்திச் செல்லங்கொஞ்சிய மனது வலிக்க நாட்களை எண்ணிக்கொண்ட பச்சை வயிறு தவிக்க ஊசலாடும் வெற்றுடல்கள் ஆனோம்.   புதியபெயர் சூட்டி புரியாத மனிதரிடம் அகப்பட்ட   என் குழந்தையைக் கண்டீராயின் தேடித் தருவீரோ அன்பரே! 19072021 (தடுக்கு : குழந்தைகளுக்குரிய சிறிய ஓலைப்பாய்) நன்றி : இலக்கியவெளி 2021 https://vanakkamlondon.com/literature/2021/09/131701/?fbclid=IwAR25iiYTqYkdeZLjfH4fIeIrHTKcSktyn7Er59lGDKYmbwVAJCCU_goJ_50

கறங்குபோல் சுழன்று

 - துவாரகன்  இந்தக் காலத்திற்கு  என்னதான் அவசரமோ?  சுழலும் வேகத்தில்  இழுத்து நடுவீதியில்  வீசிவிட்டுப் போகிறது.  என் வீட்டு நாய்க்குட்டிகள்  கண்மடல் திறந்ததும்  மல்லிகை மணம்வீசி  மனத்தை நிறைத்ததும்  சிட்டுக் குருவி வந்து  முற்றத்தில் மேய்ந்ததும்  நேற்றுத்தான் போலிருக்கிறது.  வெளிகளில் இறக்கைகட்டிப்  பறக்கலாம் என்றீர்கள்.  இப்போ,  பிணங்களை வெளியே  கொண்டுவாருங்கள்  என்றல்லவா அழைக்கிறார்கள்.  21092021 https://vanakkamlondon.com/

அதிபர் இரா. ஶ்ரீநடராசா : பணி நிறைவும் பிறந்தநாள் வாழ்த்தும்

  எமது அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் இன்றையதினம் (14.09.2021) தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் ஆற்றிய பணிகள், பெற்ற சாதனைகள், தொண்டைமானாறு கிராமத்தின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் அவர் முன்னின்று செயற்பட்ட காலங்கள் முக்கியமானவை. 80களின் நடுப்பகுதியில் இருந்து 92 வரை இயக்கங்களினதும் படைகளினதும் நெருக்கடிகளில் இருந்து இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் கல்வியையும் கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் காலங்கள் மறக்கமுடியாத நினைவுகளை மீட்டக்கூடியவை. தொடர்ந்து வாசிக்க

காலச்சுழல்

-        துவாரகன் முன்னோர் புண்ணியத்தை அறுவடை செய்யக் கற்றுத் தந்தனர். நேர்மையைக் கற்றுத் தந்தனர். நாங்களோ, பாவத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.   நல்ல காற்றைச் சுவாசிக்க மறந்து போனோம். சங்கூர்ந்த நிலங்களை சாம்பல் மேடாக்கினோம்.   கைவீசி நடந்த கரங்களுக்கு விலங்குகளை இட்டோம். உண்மையையும் நீதியையும் பிணைத்து சவாரி மாடெனச் சாய்த்தோம்.   சின்னச் சிட்டுக் குருவிக்கு ஒரு சிறாங்கைத் தானியத்தையேனும் விட்டுவைக்க மறந்து போனோம்.   கவனமாகப் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் காலச்சுழலை யார்தான் விரும்பிக் கேட்டார்கள்?   வீடு திரும்பிவிடுவோம் என்ற நினைவுடனேயே வைத்தியசாலை வாசலில் கால் பதிக்கிறோம்.   அந்த நம்பிக்கையேனும் நிச்சயமாக மீதியாக இருக்கட்டும். 11082021 ---  நன்றி :   பதிவுகள்

கருணையாளரின் தும்புத்தடி

  -        துவாரகன் அவள் பூனை வளர்ப்பதை எப்போதும் விரும்புவதில்லை. கண்ட கண்ட இடமெல்லாம் மயிர் உதிர்த்தும். திண்ட மிச்சத்தையும் வீட்டுக்குக் கொண்டு வரும். கட்டிலின் கீழே கடித்துப் பாதியான ஓணான் தலையொன்றைக் கண்ட நாள்முதல் அவள் பூனையை வெறுத்தாள்.   பூனை உதிர்த்த மயிரைக் கூட்டித் தள்ளுவதற்கு இதுநாள்வரை நல்ல தும்புத்தடி கிடைக்கவில்லையென்று நாளும் விடியற்காலையில் புறுபுறுத்துக் கொண்டேயிருப்பாள்.   பொங்கலோடு மடைபோட்டுப் பலியிட்ட வயற்கோயிற் திருவிழாவில் காலமெல்லாம் நின்றுழைக்கும் மிகத் திறமான தும்புத்தடி விற்றார்கள்.     இப்போ கருணையாளரிடம் மிகத் திறமான தும்புத்தடிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று கூட்டக்கூடியது. இன்னொன்று கூட்டிக் கொடுக்கக்கூடியது. 270820211212