முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்பார்ப்பு

- துவாரகன்


உன்னைப் போலவே
பேசவும் சிரிக்கவும்
பொழுதுபோக்கவும் வேண்டுமென
மற்றவரிடமும் நீ எதிர்பார்க்கிறாய்

உனது சுகமும்
பயணமும் சல்லாபமும்
உனக்குச் சொந்தமானவை

நீ மாத்திரை எடுக்காது
மதுபானம் அருந்தலாம்
பணத்தை எண்ணிப் பார்க்காது
பயணம் புறப்படலாம்
உனக்கு சங்கீதம் கேட்கவும்
தலையிடி இல்லாமல்
சுகமான நித்திரை கொள்ளவும்
வாய்த்திருக்கலாம்

தராசின் தட்டுகள் சமமாகும்வரை
நிறுப்பவனுக்கு சிரமம் இல்லை

இங்கும் தட்டுகள் சமமாக வேண்டுமெனில்
கொஞ்சம் சுகம்
கொஞ்சம் சங்கீதம்
கிள்ளி வைக்கவேண்டும்
அவ்வளவுதான்!
06/2026

கருத்துகள்