முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வார்த்தைகள் புரிந்தபோது...

  - துவாரகன் வீட்டுக்குத் தினமும் வரும் புலுனிகளோடு என் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டேன் எந்தப் பயமுமின்றி அருகே வந்து தத்தித் திரிவன அவை சோற்றுப் பருக்கைகளையும் தானியங்களையும் தங்கள் சுகதுக்கங்களைப் பேசியபடியே கொத்தித் தின்றன பின்னர் விடுவிடுவென பறந்து போயின என் வார்த்தைகளின் அர்த்தத்தை மற்றப் பறவைகளும் புரிந்து கொண்டதில் காற்றில் மிதந்த புழுகம் எனக்கு ஒரு மாலைநேரம் மூஞ்சியை நீட்டிக்கொண்டு ஒரு கூட்டமே படையெடுத்தது அன்பு என்ற ஒற்றைச் சொல் தம்மைப் பயமுறுத்தி விட்டதாம் நான் கொடுத்த தானியங்களை மட்டும் திருப்பித் தந்துவிட்டுப் பறந்தன. 06/2026

எதிர்பார்ப்பு

- துவாரகன் உன்னைப் போலவே பேசவும் சிரிக்கவும் பொழுதுபோக்கவும் வேண்டுமென மற்றவரிடமும் நீ எதிர்பார்க்கிறாய் உனது சுகமும் பயணமும் சல்லாபமும் உனக்குச் சொந்தமானவை நீ மாத்திரை எடுக்காது மதுபானம் அருந்தலாம் பணத்தை எண்ணிப் பார்க்காது பயணம் புறப்படலாம் உனக்கு சங்கீதம் கேட்கவும் தலையிடி இல்லாமல் சுகமான நித்திரை கொள்ளவும் வாய்த்திருக்கலாம் தராசின் தட்டுகள் சமமாகும்வரை நிறுப்பவனுக்கு சிரமம் இல்லை இங்கும் தட்டுகள் சமமாக வேண்டுமெனில் கொஞ்சம் சுகம் கொஞ்சம் சங்கீதம் கிள்ளி வைக்கவேண்டும் அவ்வளவுதான்! 06/2026