முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அந்தரத்தில் மிதத்தல்

  -துவாரகன் மமதையை,  யுகங்களாகச்  சுமந்துவந்த காலம்  இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம்  பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும்  சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி.  தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 https://vanakkamlondon.com/news/2024/05/217653/

களவாடப்பட்ட நினைவுகள்

  -துவாரகன் நேற்றைய கனவிலென் புராதன நகரத்தைக் கண்டேன். கதவில்லாத கடைகள் வேலியில்லாத வளவுகள் குன்றும் குழிகளுமாகிப்போன வீதிகள் எல்லாவற்றையும் மக்கள் தங்கள் கதைகளால் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இருட்திட்டுக்கள் எல்லாம் ஒளியால் வழிந்தன. பஸ்வண்டி, புராதன நகரம் என்ற பெயர்ப்பலகையோடு மிடுக்காக வந்து நின்றது. ராணியம்மா தன் வியாபாரத் தளபாடங்களோடு வந்திறங்கினார். ஒரு கொண்டாட்ட மனநிலையை அவர்களிடம் கண்டேன். தாங்கள் நட்டுவைத்த மரங்களை... நினைவுகளை வளர்த்த வீடுகளை... ஆரத் தழுவினார்கள். பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள்போல் சில வீடுகள் தங்கள் முகங்களைத் தொங்கப் போட்டுக் கொண்டுநின்றன. என் இளைய சகோதரன் கேட்டான். இந்தப் புராதன நகரத்தின் பெயர் என்னவென்று. ஈ. தன் பெயரை மறந்ததுபோல் நினைவுகள் களவாடப்பட்ட என் புராதன நகரத்தின் பெயரை வாழ்ந்தவர் வீழ்ந்தவர் நினைவுகளிலும் மிஞ்சிய எச்சங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன். 112023

மறைந்திருக்கும் பறவைகள்

  -துவாரகன் வரிசை குலையாத அழகு. காற்றோடு கலந்த சுகந்தம். புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை. பந்தற்கால் அருகே நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி. சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்! எந்தப் பறவையென்று தெரியவில்லை. கைப்பிடி, இருக்கை, கைப்பை அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மிக இரகசியமாக, அழுக்கைத் தெளிப்பதற்காகவே காத்திருக்கின்றன பறவைகளும். மனிதர்கள்போலவே! 18092023 vanakkamlondon.com

துவாரகனின் இரண்டு கவிதைகள்

1. அறுவடைக் காலம்  - துவாரகன்  விதைக்கும்போது நல்விதை தேடிவிதை  என்றார் அப்பு.  ஒரு பூசணி விதையெனினும்  முற்றிய நல்விதை  சாம்பல் சேர்த்து  அடுப்பு முகட்டில்  பொட்டலமாய்த் தொங்க விட்டார்.  மதர்த்து பூத்து  காய்த்துக் குலுங்கின நல் விதைகள். எங்கள் காலத்திலும்  விதைகள் கிடைத்தன.  பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்! அறுவடை செய்கிறோம் புற்களும் களைகளும். 2. நிறைகுடம்  - துவாரகன்  அதிகம் பேசாதே  சிரித்துக் கதைக்காதே எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்  அறிவாளி.  மலைமேல் எதுவுமில்லை எனினும்  மழை பெய்கிறது நிறைகுடமாயிரு புத்திசாலி. குறைகுடம்கூடத் தளம்பாது  யாருக்குத் தெரியப்போகிறது தளம்பாது இரு நீயும் நிறைகுடம். நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ் 

சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்

  எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும். 'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது : facebook.com/thuwarakan தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது : vanakkamlondon.com --------------- මෙම හික් මීයන්හට පාසැලක් ද නොමැත ගුරුවරුන් ද නොමැත ඔවුන් දන්නා දේ කරවල සුවඳ ද පොල් කැබැලි ද පමණි ගේ මුදුන්වල සෙල්ලම් කරමින් සිටි මීයන් දැන් බිමට බැස නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය පූසන් මීයන් අල්ලා ගැණීම අමතක කොට නර්තනය රස විඳින්නේය කළ යුත්තක් වෙනත් නොමැත ඉතිං අපි ද අත් පොළසන් දී දිරිමත් කළ යුතුය නැතහොත් මී කතුරුවල අපව මාට්ටු කළ යුතුවනු ඇත - තුවාරකන් - පරිවර්තනය - ඉබ්නු අසූමත් சுண்டெலிகள் பெருகிவிட்டன - துவாரகன் இந்தச் சுண்டெலிகளுக்கு பள்ளிகளும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் கருவாட்டு வாசனையும் தேங்காய்ச் சொட்டுக்களும்தான். வீட்டு முகடுகளில் விளையாடித் திரிந்த எலிகள் இப்போது தரையில் இறங்கி நடனமாடத் தொடங்கிவிட்டன. பூனைகள், எலி பிடிப்பதை மறந்துவிட்டு நடனத்தை ர...

பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்

  - துவாரகன் ----------------- இந்த மந்திரவாதிகளுக்கு ஒழுங்காக மந்திரம் தெரியாதுபோலும். மிகத் திறமான மந்திரவாதிகள் எத்தனை பெரிய பூதங்களையும் அடைத்துவைக்கும் வித்தையைக் கற்றிருந்தார்கள். காட்டிலோ கடலிலோ அகப்பட்ட ஜாடிகளைத் திறந்து பூதங்களிடம் மனிதர்கள் அகப்பட்ட கதைகளை பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மந்திரவாதிகள் ஆடைகளை அழகாக அணிந்திருக்கிறார்களேயன்றி மந்திரக்கோலில்லா மந்திரவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். இன்று தெருக்களிலும் வீட்டுத் திண்ணைகளிலும் புகுந்து அச்சுறுத்துகின்றன விதம்விதமான பூதங்கள். 18092023

இது யாருடைய வீடு

  - துவாரகன் நி னைவோரத்தில் தேங்கிய கனவுகளைத் தூக்கிச் செல்கிறான். வளையம் உருட்டிவிளையாடிய ஒழுங்கை கலங்கலாயிருக்கிறது. புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன. சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள். சந்தையின் இரைச்சலும் சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும் தரவையும் கோயில்பொங்கலும் கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன. ஐந்து தோடம்பழ மிட்டாய்களை நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த ஈரலிப்பு. தொலைந்துபோன காலங்களின் குளிர்மை நெஞ்சை நிறைக்கிறது.   பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த வேலியின் ஊடே ஒரு வேற்றுமனிதனைப்போல அந்த வீட்டைப் பார்க்கிறான். 'வீட்டுக்கு முன்னால மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!' வார்த்தைகள் குமிழிடுகின்றன. மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான். 'இது எங்கட வீடுதானோ?'   நினைவு, கையிலிருந்து வீழ்ந்த கண்ணாடியாகச் சிதறுகிறது. 01062023