- துவாரகன்
நினைவோரத்தில் தேங்கிய
கனவுகளைத் தூக்கிச் செல்கிறான்.
கலங்கலாயிருக்கிறது.
புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன.
சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள்.
சந்தையின் இரைச்சலும்
சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும்
தரவையும்
கோயில்பொங்கலும்
கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன.
ஐந்து தோடம்பழ மிட்டாய்களை
நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த
ஈரலிப்பு.
தொலைந்துபோன காலங்களின் குளிர்மை
நெஞ்சை நிறைக்கிறது.
பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த
வேலியின் ஊடே
ஒரு வேற்றுமனிதனைப்போல
அந்த வீட்டைப் பார்க்கிறான்.
'வீட்டுக்கு முன்னால
மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!'
வார்த்தைகள் குமிழிடுகின்றன.
மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான்.
'இது எங்கட வீடுதானோ?'
நினைவு,
கையிலிருந்து வீழ்ந்த
கண்ணாடியாகச்
சிதறுகிறது.
01062023
கருத்துகள்
கருத்துரையிடுக