-துவாரகன்
நேற்றைய கனவிலென்
புராதன நகரத்தைக் கண்டேன்.
வேலியில்லாத வளவுகள்
குன்றும் குழிகளுமாகிப்போன வீதிகள்
எல்லாவற்றையும்
மக்கள் தங்கள் கதைகளால்
நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இருட்திட்டுக்கள் எல்லாம்
ஒளியால் வழிந்தன.
பஸ்வண்டி,
புராதன நகரம் என்ற பெயர்ப்பலகையோடு
மிடுக்காக வந்து நின்றது.
ராணியம்மா
தன் வியாபாரத் தளபாடங்களோடு
வந்திறங்கினார்.
ஒரு கொண்டாட்ட மனநிலையை
அவர்களிடம் கண்டேன்.
தாங்கள் நட்டுவைத்த மரங்களை...
நினைவுகளை வளர்த்த வீடுகளை...
ஆரத் தழுவினார்கள்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள்போல்
சில வீடுகள்
தங்கள் முகங்களைத்
தொங்கப் போட்டுக் கொண்டுநின்றன.
என் இளைய சகோதரன் கேட்டான்.
இந்தப் புராதன நகரத்தின்
பெயர் என்னவென்று.
ஈ. தன் பெயரை மறந்ததுபோல்
நினைவுகள் களவாடப்பட்ட
என் புராதன நகரத்தின் பெயரை
வாழ்ந்தவர் வீழ்ந்தவர் நினைவுகளிலும்
மிஞ்சிய எச்சங்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
112023
கருத்துகள்
கருத்துரையிடுக