நவம்பர் 14, 2023

துவாரகனின் இரண்டு கவிதைகள்

1.

அறுவடைக் காலம் 

- துவாரகன் 

விதைக்கும்போது

நல்விதை தேடிவிதை 

என்றார் அப்பு. 


ஒரு பூசணி விதையெனினும் 

முற்றிய நல்விதை 

சாம்பல் சேர்த்து 

அடுப்பு முகட்டில் 

பொட்டலமாய்த் தொங்க விட்டார். 

மதர்த்து பூத்து 

காய்த்துக் குலுங்கின

நல் விதைகள்.


எங்கள் காலத்திலும் 

விதைகள் கிடைத்தன. 

பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்!


அறுவடை செய்கிறோம்

புற்களும் களைகளும்.


2.

நிறைகுடம் 

- துவாரகன் 

அதிகம் பேசாதே 

சிரித்துக் கதைக்காதே

எப்போதும்

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள் 

அறிவாளி. 


மலைமேல் எதுவுமில்லை

எனினும் 

மழை பெய்கிறது

நிறைகுடமாயிரு

புத்திசாலி.


குறைகுடம்கூடத் தளம்பாது 

யாருக்குத் தெரியப்போகிறது

தளம்பாது இரு

நீயும் நிறைகுடம்.

நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக