முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

துறவியின் கற்குவியல்

- துவாரகன்  கருமேகத்தால் உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது.  உன் நாவு  எப்போதாவது  அந்த வார்த்தைகளை  உச்சாடனம் செய்ததா? பெருவெளிக்குள்  நுழைய முடியமுடியாதபடி  உன்னைப் போர்த்தியிருக்கிறாய். நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள்  ஒரு மூக்குமின்னியை நேற்றும் நீதானே கண்டெடுத்தாய். அந்தக் கற்குவியல்  மற்றவர் கணக்கல்ல. உனது கணக்கு அதற்கு சாட்சியம் நீயே! கமண்டல நீராவது  கிடைக்கவேண்டும் என்றால் வேடத்தைக் கலைத்துவிடு. 02112021 http://www.easy24news.com/2021/11/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/?fbclid=IwAR1uSdB6_7eiXE_xNw8HMI7cCHggt2EbZzlP2WhVQYhIHRcps3vNdSrNNzc

பத்துக் கட்டளைகள்

  - துவாரகன்  உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன்.   முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் எண்ணெயில்லாமல் பந்தம் பிடிக்கவேண்டும். இன்னமும் அவர்கள் நடக்கும்போது வால் நிலத்தில் படிந்து  அழுக்காகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டுச் சுவருக்கு  கூலியில்லாமல்  வர்ணம் பூசவும் மதிய இடைவேளையில் ஏற்றியிறக்கவும் பழகிக் கொள்ளவேண்டும். தேவைப்படும்போது உன் மூளையை கழற்றிவைத்துவிட்டு கோயில் மாடுபோல் எல்லாவற்றுக்கும்  ஆட்டவேண்டும். தாவவும் தழுவவும் தட்டிக்கொடுக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும். மிக முக்கியமாக, குதிரையேற்றம் பழகியிருத்தலும் அந்தரவேளைகளில் உனக்கும் அவர்களுக்கும் உதவியாய் இருக்கக்கூடும்.   என்ன பத்துக் கட்டளைகளும் சரிதானே? அப்படியானால், கதவைத் திறந்து நீ உள்ளே வரலாம். 25102021. https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/136245/?fbclid=IwAR1EyihJxZfF3FUO2bpSQuYoAL4BxCv-wnJgnjzY-ODWiJztPU9pWlIVFsk

கடவுள் மறைத்து வைத்த உலகம்

- துவாரகன்  கொள்ளைக்காரரின் கண்களிலிருந்து  கடவுள்  அந்த உலகத்தை  மறைத்து வைத்திருந்தார் அது குழந்தைகளின் உலகம் அங்கே பறவைகளின் சங்கீதம் இருந்தது காற்றுக் கரங்களின்  அரவணைப்பு இருந்தது.  தாய்மடியின் உயிர்ப்பு இருந்தது கொடியோரின் சுவடுகள் இல்லை சுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லை உயிர் பறிக்கும் குழிகள் இல்லை நீரும் நிலமும் வெளியும்  வரைந்து வைத்த  ஓவியங்கள் இருந்தன உங்கள் திமிர்த்த பார்வைகள்  அங்கு படவேண்டாம் உங்கள் பாவப்பட்ட கரங்கள்  அங்கு தீண்ட வேண்டாம் அது குழந்தைகளின் உலகம்.  17102021 https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/135190/?fbclid=IwAR3XZgS_zLd0Q3c_pIiMPHU2SPaL_YftBq4oTRLONQdHIqzT-9_eJ6YB61c

நிர்வாண மனிதர்கள்

-          -  துவாரகன்   வெட்கப்படவேண்டியது நீங்கள்தான். உங்கள் நிர்வாணம்தான் வீதியெங்கும் மிதக்கிறது.   மண்ணைக் கிளறி வெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும் உ ழைப்பாளியும் உங்களைப் பற்றித்தான் கேலி பேசுகிறான். இதைவிட ஓட்டைச் சிரட்டைக்குள் சீவனை விட்டிருக்கலாம் என்கிறாள் அம்மா.   என் பாட்டனின் கைகளில் இருந்த தளநாரின் வலிமைகூட உங்களிடம் இப்போ இல்லை.   ‘யுரேக்கா’ என்றபடி அவன் வீதியில் ஓடியபோது யாருக்கும் அவனின் நிர்வாணம் தெரியவில்லை.   நாலுகூட்டுக் கச்சேரியான பரிவாரத்திலும் உங்கள் நிர்வாணமே எங்களுக்குத் துலக்கமாயிருக்கிறது.   முற்றும் துறத்தல் என்பதும் சாத்தியமில்லாதபோது, இருளே உமதானது. ஒளியே எமதானது. 13102021 https://vanakkamlondon.com/literature/2021/10/134691/?fbclid=IwAR3rIP-n2qjUAj488bo2MGo57bEdQ7hvJ6p8ALtftoNOxTG5SchABz9SJcw

அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல்

- துவாரகன்   இன்னும் எத்தனை காலம்தான் கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்? இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான் இந்தச் செம்பாட்டு மண்ணில் நடந்து திரிகிறாயா?   சுருண்டுபோன புடலங்காய்க்கு ஒரு சிறுகல் போதுமே! நான்கு தலைமுறையாக இந்த நிஷ்டையைக் கலைக்க ஓர் ஒளிப்பொட்டுக்கூடவா உனக்குக் கிடைக்கவில்லை?   இனி மலையைப் பிளக்கவேண்டாம் ஒரு கூழாங்கல்லைத் தேடி எடு எறிவதற்கல்ல. சுருண்டுபோன வாலை நிமிர்த்துவதற்கு. 01102021. நன்றி: https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/132500/?fbclid=IwAR0OgD5VcrmsiRCniJoK9KxdXUOpemS-5cI1CUvEJhi127p1GL-zJ3K7TLY

என் குழந்தையைக் களவாடியவன்

-        துவாரகன்   மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளை கன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன் எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி. எண்ணெய் பூசி தடுக்கில் வளர்த்தியிருந்தபோது அந்தத் திருடன் களவாடி விட்டான்.   நேர்த்திக் கடன் கழித்த சந்நிதியின் வாசலிலே முல்லைச் சிரிப்புடன் கைகளில் தவழ்ந்தது கண்டு அன்பு கொண்டவன். கன்னக்குழியின் அழகுபேசி கதை கேட்டவன்.   சற்று நாங்கள் கண்ணயர்ந்தபோது ஓசைப்படாமல் வந்து களவாடிவிட்டான்.   மார்பிருத்திச் செல்லங்கொஞ்சிய மனது வலிக்க நாட்களை எண்ணிக்கொண்ட பச்சை வயிறு தவிக்க ஊசலாடும் வெற்றுடல்கள் ஆனோம்.   புதியபெயர் சூட்டி புரியாத மனிதரிடம் அகப்பட்ட   என் குழந்தையைக் கண்டீராயின் தேடித் தருவீரோ அன்பரே! 19072021 (தடுக்கு : குழந்தைகளுக்குரிய சிறிய ஓலைப்பாய்) நன்றி : இலக்கியவெளி 2021 https://vanakkamlondon.com/literature/2021/09/131701/?fbclid=IwAR25iiYTqYkdeZLjfH4fIeIrHTKcSktyn7Er59lGDKYmbwVAJCCU_goJ_50

கறங்குபோல் சுழன்று

 - துவாரகன்  இந்தக் காலத்திற்கு  என்னதான் அவசரமோ?  சுழலும் வேகத்தில்  இழுத்து நடுவீதியில்  வீசிவிட்டுப் போகிறது.  என் வீட்டு நாய்க்குட்டிகள்  கண்மடல் திறந்ததும்  மல்லிகை மணம்வீசி  மனத்தை நிறைத்ததும்  சிட்டுக் குருவி வந்து  முற்றத்தில் மேய்ந்ததும்  நேற்றுத்தான் போலிருக்கிறது.  வெளிகளில் இறக்கைகட்டிப்  பறக்கலாம் என்றீர்கள்.  இப்போ,  பிணங்களை வெளியே  கொண்டுவாருங்கள்  என்றல்லவா அழைக்கிறார்கள்.  21092021 https://vanakkamlondon.com/