முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எங்களுக்கு விசர்பிடித்ததென்று அங்கீகரியுங்கள்

-துவாரகன் நீங்கள் எப்போதாவது விசர்நாயைக் கண்டதுண்டா? உடல் இளைத்து நாக்குநீட்டி உமிழ்நீர் வடித்து தூங்கி விழுந்த வாலுடன் வீதியெல்லாம் அலையும் வேட்டைப்பல் காட்டி வெறித்துப்பார்க்கும் குரைக்காது கண்டதெல்லாம் கடிக்கும். அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று அங்கீகரியுங்கள் குழந்தைக்கும் குமரிக்கும் குறியொன்று இருக்குதென்று குண்டிதட்டிச் சொன்னான் ஒருவன். அப்போதிருந்து அலைகிறது வீதியெங்கும் விசர் விசர்… குத்தும் கிழிக்கும் கூடிச் சிதைக்கும் கொல்லும் இன்னும் என்னவெல்லாம் செய்யும் நாங்கள் ஒவ்வொருவரும் விசர்களுக்கு தீனிபோட்டு வளர்க்கிறோம். விசராக்கியவன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். 03/2012 நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாழ் ஓசை

தலைப்பில்லாதது

-துவாரகன் இனி எந்தப் பிஞ்சுக் குழந்தை உன் விரல் பிடித்து நடந்து வரும்? இனி எந்தக் குமரி உன்னைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கதை பேசுவாள்? என் சின்னப் பெண்ணை என் சகோதரியை என் மனைவியை என் அம்மாவை என் பாட்டியை இனி எந்த நம்பிக்கையுடன் குறிகள் மட்டுமே உள்ள உனக்கருகில் தனியே விட்டுச் செல்வேன்? நான் வெளியேறி மீண்டுவரும்போதெல்லாம் என் கால்விரல் நக்கி அன்பைச் சொல்லும் என்வீட்டுச் சின்ன நாய்க்குட்டியிடம் இருக்கும் ஈரம்கூட; உன் உலகத்தில் இருந்து நழுவிக்கொண்டிருக்கிறது. கனவிலும் நனவிலும் திடுக்கிட்டு விழித்து ‘எங்கே என் சின்னப்பெண்’ எனத் தவிக்கும் ஈரவிழிகளின் உலகத்தில் தான்; இன்னமும் குறிகள் மட்டுமே உள்ளவர் மனிதரென வாழ்கிறார். 02/2012 நன்றி - பதிவுகள், காற்றுவெளி

கீறல் விழுந்த ஒலித்தட்டு

- துவாரகன் மீளவும் அதே வார்த்தைகள் மீளவும் அதே குரல்கள் மனம் லயிக்காத இசை. ஆனாலும் ‘கேள்’ என்கிறது. காது மந்தமானோரும் மூளை மடிப்புக் குறைந்தோரும் அந்தக் கீறல் விழுந்த ஒலியே தங்கள் வீட்டுத் துளசிச் செடி என்றனர். பிரதான வீதியின் இரைச்சல்போல், சைக்கிள்டைனமோ சுழற்றிப் பாட்டுக்கேட்கும் அவசரம் போல் ஒழுங்கின்றி ஒலிக்கிறது கீறல் விழுந்த ஒலித்தட்டு. கழற்றி எடுத்து மாற்றுவார் யாருமில்லை. கீறல் விழுந்த ஒலித்தட்டில் கதை நேரம் “நீங்கள் குரலும் கூடும் இல்லாத ஊமைப்பறவைகள்” காகங்களைப் பார்த்துக் கூறின; புறாக்களும் குயில்களும். 01/2012 நன்றி - பதிவுகள், காற்றுவெளி, படிகள்

உக்கிப்போன சொற்கள்

-துவாரகன் நாற்றத்தைத் தூவும் சொற்களைத் தூக்கி எறி பழைய ஓலைப்பாயைப்போல் போகும் இடமெல்லாம் நீதானே அந்தச் சொற்களைத் தூக்கிச் செல்கிறாய் வெள்ளையும் மஞ்சளுமாய் உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும் காய்ந்துபோன மாமரக் கொப்பென சொற்கள் வழியெங்கும் சிதறுகின்றன. வீட்டு யன்னல்களை இறுகப் பூட்டிக்கொண்டு ஒரு கணம் வீட்டையும் நாற்றத்தையும்கூட குற்றம் சொல்கிறாய். அந்தச் சொற்களைத் தூக்கி எறி. விறகுக்கட்டின் கீழிருந்து செத்துப்போன ஒரு எலியைத் தூக்கி எறிவதேபோல்! 12/2011

சாம்பற்பூச்சிகளென

                            -துவாரகன் சிரி அணை சிதை ஊரைக்கூட்டு உனதென்று சொல் இரத்த நாளம் மூளைத்திசு எங்கும் மூட்டைப் பூச்சியாய் களிம்பாய் ஒட்டு. துலா மிதித்து வந்தாரை வாழவைத்து வளர்ந்த சாதி வாய் கிழியச் சொல். சுட்டுவிரல் நாற்காலி உச்சக்குரலோடு சேர்ந்து நீயும் விழுங்கு சாம்பற்பூச்சிகளென! 11/2011

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி

-துவாரகன் நகரச் சந்துகளில் கூவிக்கூவி விற்ற கடலை வியாபாரி ஒருநாள் என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான் மழை பெய்து ஓய்ந்திருந்த மாலைப்பொழுதில் சிறுவர்கள் மாபிள் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் கோவிலில் கடவுளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் மூச்சிலும் சிறுவர்களின் பேச்சிலும் ஊர் உயிர்த்திருந்தபோது ஊரின் ஒதுக்குப் புறத்தால் வந்துபோனான் கடலை வியாபாரி கடவுளைத் தூக்கி வீதியுலாச் செல்ல இளைஞர்களைத் தேடியபோது அவர்கள் யாருக்கும் தெரியாமல் கடலை கொறித்துக் கொண்டிருந்தனர். அழகான கிராமத்தின் குச்சொழுங்கைகள் எல்லாம் அசிங்கமாயின பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால். 11/2011 நன்றி - பதிவுகள், tamilauthors

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது

-துவாரகன் உயிரைக் கொண்டோடிய கணத்தில் தாயைப் பறிகொடுத்தாள். சோதரி கைபிடித்து மீண்டு வந்தாள். வாரப்படாத தலை கறைபடிந்த பற்கள் உயிர்ப்பற்ற சிரிப்பு குமரியானாலும் குறுகி நடந்தாள் தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள் சில அப்பாக்களைப் போலவே ஒருநாள் புதுத்துணைவியோடு பெற்றவன் வந்தான். வாடிய பூக்களிடையே மீண்டும் அவள் காணாமற்போயிருந்தாள். அவளுக்கென்று எதுவுமில்லாதபோது ஒருநாள் அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள். அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது. 10/2011 (குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)