முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்களுக்கு விசர்பிடித்ததென்று அங்கீகரியுங்கள்


-துவாரகன்

நீங்கள் எப்போதாவது
விசர்நாயைக் கண்டதுண்டா?

உடல் இளைத்து
நாக்குநீட்டி உமிழ்நீர் வடித்து
தூங்கி விழுந்த வாலுடன்
வீதியெல்லாம் அலையும்

வேட்டைப்பல் காட்டி
வெறித்துப்பார்க்கும் குரைக்காது
கண்டதெல்லாம் கடிக்கும்.
அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று
அங்கீகரியுங்கள்

குழந்தைக்கும் குமரிக்கும்
குறியொன்று இருக்குதென்று
குண்டிதட்டிச் சொன்னான் ஒருவன்.
அப்போதிருந்து அலைகிறது
வீதியெங்கும் விசர்

விசர்… குத்தும் கிழிக்கும்
கூடிச் சிதைக்கும்
கொல்லும்
இன்னும் என்னவெல்லாம் செய்யும்

நாங்கள் ஒவ்வொருவரும்
விசர்களுக்கு
தீனிபோட்டு வளர்க்கிறோம்.
விசராக்கியவன்
கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
தன்னைத்தானே
குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.
03/2012
நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாழ் ஓசை

கருத்துகள்

  1. அருமையான கவிதை.தொடர்ந்து வாசிக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு அளப்பரியது.தங்களின் பல கவிதைகளை வாசித்தும் உள்ளேன்.கவிதைக்கான களம்/அதன் தேர்வு,வடிவமைப்பு உண்மையிலேயே இரசிக்க்றேன்.
    நல்லதொரு கவிஞனை இனந்காட்டிஉள்ளது.
    வாழ்த்துக்கள்!
    முல்லைஅமுதன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முல்லை அமுதன்

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகளும் அழுகு
    வரிகளுக்கிடையே ....
    சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. பேஸ்புக் நண்பரிடமிருந்து...

    இடுகாட்டான் இதயமுள்ளவன் அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று
    அங்கீகரியுங்கள் ????????????????
    Yesterday at 06:15 · Like

    பதிலளிநீக்கு
  5. nazza kavithai,neenda vasippin pin nenju kanakkirathu.vaazthukkaz.



    March 09, 2012 5:19 AM அன்று வல்லைவெளி இல் sutharmamaharajan ஆல் உள்ளிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  6. ”நாங்கள் ஒவ்வொருவரும்
    விசர்களுக்கு
    தீனிபோட்டு வளர்க்கிறோம்.
    விசராக்கியவன்
    கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
    தன்னைத்தானே
    குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

    வெளியே வேடிக்கையும் உள்ளே வேதனையும்
    கொண்டு நிற்கிற வித்தியாசமான கவிதை.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தீபிகா.

      நீக்கு
  7. விசரை மாற்றும் மருத்துவரும் உண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோகேஸ்வரி சிவப்பிகாசம், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...