முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது

-துவாரகன் உயிரைக் கொண்டோடிய கணத்தில் தாயைப் பறிகொடுத்தாள். சோதரி கைபிடித்து மீண்டு வந்தாள். வாரப்படாத தலை கறைபடிந்த பற்கள் உயிர்ப்பற்ற சிரிப்பு குமரியானாலும் குறுகி நடந்தாள் தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள் சில அப்பாக்களைப் போலவே ஒருநாள் புதுத்துணைவியோடு பெற்றவன் வந்தான். வாடிய பூக்களிடையே மீண்டும் அவள் காணாமற்போயிருந்தாள். அவளுக்கென்று எதுவுமில்லாதபோது ஒருநாள் அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள். அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது. 10/2011 (குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)

ஒளி

- துவாரகன் ஒளி ஞாயிற்றின் தூய சுடர் இருள் விரட்டி அறிவேற்றும் குறி விளக்கேந்திய பெருமாட்டியும் இருள்விரட்டி உயிர்த்திரி தூண்டினாள். அப்போதும்கூட விளக்குகள் விளக்குகளாகவே ஒளிர்ந்தன. கடவுளின் தூண்டாமணி விளக்கு களவுபோனதிலிருந்து விளக்குகளுக்கு இருள் பற்றிய பயம் தொடங்கிவிட்டது. விளக்கைச் சுற்றிய ஈசல்கள் மழையில் செட்டைகழற்றிச் செத்துக்கிடந்த நேரம் பார்த்து கொல்லைப்புறத்தால் கடவுள் வந்தார். கையில் அணைந்துபோன விளக்கு. ஒரு மின்மினிப் பூச்சியை அடையாளமாகப் பற்றிப் பிடித்திருந்தார். 10/2011

கிழித்துப்போடு

-துவாரகன் ம ண்டைக்குள் குறவணன் புழு நரம்புகளுள் கொழுக்கிப்புழு வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம் உடலெங்கும் ஊனம் இன்னும் பேசிப்பேசியே வாசனை பூசு கவச குண்டலம் பந்தியில் பறிபோனது காண்டீபம் திருவிழாவில் தொலைந்து போனது சாரதியும் தேரோடு செத்துப்போனான் இந்த அழகிய உலகில் அழுகிய மனிதர்களோடு இன்னமும் வாழ்கிறேன் என்று உன் வரலாற்றில் எழுது. இல்லையெனில் இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு! 2011/09

மூளை விற்றவர்களின் கதை

-துவாரகன் நான் சிறுவனாக இருந்தபோது அயலூரில் ஒரு மூளைதின்னி இருந்தானென்று அம்மா சொல்வாள். வேகும் பிணத்தின்முன் சுடுகாட்டில் காத்திருப்பானாம். இப்போ மூளை விற்ற மனிதர்களைக் கண்டுகொண்டேன். பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள் செம்மறியாட்டினதும் குரங்கினதும் காண்டாமிருகத்தினதும் மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள் சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள் உடையுண்டு நிறமுண்டு கையுண்டு நகமுண்டு காலில்லை பேயென்று என் குழந்தை சொல்கிறது நான் சொல்லிக்கொள்கிறேன் அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று நாங்களும் யோசிக்கலாம் எங்கள் மூளைகளை நல்ல விலைக்கு விற்பதுபற்றி…! 08/2011

ங போல் வளை

-துவாரகன் உடல் குறுகு எலும்பை மற கும்பிடு போடு நாணலாய் இரு தவளையாவாய். இனிப்பெனச் சொல் குட்டையைக் குளமாக்கு இன்னும்... ங போல் வளை தமிழ்ப்பாட்டிக்கு நன்றி சொல் நீ துளிர்ப்பாய். 8/2011

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள் -2

-துவாரகன் முகமூடியில்லை குறுவாள் இல்லை சோதரரோடு கைகோர்த்து நிஜத்தில் கூடவே இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். சிரிப்பைப் பறித்து காட்டேரியிடம் கொடுக்கிறார்கள் நிலத்தைச் சுருட்டி நீளமாய் விரித்துப் படுக்கிறார்கள் குழந்தைகளின் சோற்றை கூட்டாய்க் களவாடுகிறார்கள் இருப்பையும் உணர்வையும் தம் கைகளில் திணிக்கிறார்கள் மூட்டை கட்டியெடுத்தவருக்கு படத்தில் இருக்கும் பாட்டனின் மீசையும் வளையில் செருகிய பாக்குவெட்டியும் உறுத்துகிறது Night museum இரவில் உயிர்ப்பதுபோல் அஞ்சுகிறார் எங்கள் கடவுளரிடமும் இருக்கிறது அவரவருக்கு ஒவ்வொரு பாக்குவெட்டி. 8/2011 (Night museum - சிறுவருக்கான ஜனரஞ்சக ஆங்கிலப் படம். அப்படத்தில் ஒவ்வொரு இரவும் மியூசியத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் உயிர் வந்துவிடும்)

தலைப்பில்லாத கவிதை -1

-துவாரகன் குளித்த ஈரம் துவட்ட நேரமில்லை. காற்சட்டை காயும்முன்னே அணிந்து கொள்கிறேன் சாப்பாடும் ஆலயப் பூஜைபோல் ஆறுவேளையாயிற்று அப்புச்சியின் உலகில் பழஞ்சோற்றுடன் வயிறு குளிரக் கஞ்சி. பின்னொரு காலம் வெள்ளைப் பிட்டுடன் ருசியான மிளகாய்ச் சம்பல். அவசரக் கோமாளிகளின் கையில் ‘கேக்’கும் 'மைலோ' பாலும். நினைவுகளின் துகிலுரிப்பு நிலைப்பவற்றின் நிலையழிப்பு என்னையும் தொலைக்கிறது என் கண்ணிலும் மூளையிலும் மூக்கின் வழியிலும் பாட்டனின் கறுப்பு இன்னும் மீதியாய் ஒட்டியுள்ளது. அவசரமாகக் கண்ட இடமெல்லாம் குந்தி எழும்பியதில் என் பின்பக்கம் மட்டும் கொஞ்சம் கறுத்துப் போயுள்ளது. நண்பரே சந்தேகமெனில் காட்டட்டுமா? யூலை/2011 நன்றி- tamilauthors.com (குறிப்பு - கவிஞர் சோ. ப வின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று ஞாபகம் வருகிறது)