வெளியார் பாடல்
துவாரகன்
ஐயா தர்மவான்களே!
நாங்கள் தினமும் காலையில் நீராடுகிறோம்.
மூன்று வேளையும் கைகால் அலம்புகிறோம்.
கைநகங்களையும் சுத்தமாக்கி வைத்திருக்கிறோம்.
காலையில் உங்களைப் போலத்தான் குந்தி எழும்புகிறோம்.
தினமும் உடைகளை மாற்றுகிறோம்.
மூன்று வேளையும் உண்கிறோம்.
நீராகாரமும் பருகுகிறோம்.
வீதியிலும் கைகளை வீசி
இரண்டு கால்களாலும் நடக்கிறோம்.
நீங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான்
நாங்களும் சுவாசிக்கிறோம்.
வைத்தியரும்கூட எங்கள் உடலில் ஓடுவது
சிவப்பு இரத்தம் என்றுதான் சொன்னார்.
அப்படியிருக்கும்போது…
நாங்களும் மனிதர்கள்தானே!
நன்றி : கனவு 2021
கருத்துகள்
கருத்துரையிடுக