
-----துவாரகன்
மனிதர்களைப் போலவே
வருகின்ற துன்பங்களுக்கும்
கொஞ்சமும் இரக்கமில்லை.
எப்படித்தான்
எல்லாத்துயரங்களும்
ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன?
சுடுகாட்டில் அடக்கம் செய்ய
ஆயத்தமாகிய பிணத்தின் முன்
கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே
எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன.
இத்துயரங்களைப் போலவே
அதை வருவித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் கூட
கொஞ்சமும் இரக்கமில்லை
வீதியில் வாகனத்தின் சில்லுகளிடையே
நசிந்து செத்துப்போன
ஒரு குட்டிநாயின் வாழ்வுபோல்
நாம் வாழும் காலங்களும் செத்துப் போகின்றன.
யாரிடம் சொல்லி ஆற்றுவது
யார் யாரைத் தேற்றுவது
கொல்லும் வீரியத்தோடு
கோரப்பற்களைக் காட்டியபடி
மரணம் முன்னால் வந்து
எக்காளமிட்டுக் கொக்கரிக்கிறது.
மரணத்தின் கூரிய நகங்கள்
எம் தொண்டைக்குழியில் ஆழ இறங்குகின்றன.
அதன் கடைவாய் வழியாகவும்
நாக்குகளின் மீதாகவும்
இரத்த நெடி வீசியபடியே உள்ளது
எங்கும் மரண ஓலம்
எங்கும் சாவின் எச்சம்
எங்கள் வாழ்வுக்காக
இன்னமும் வாழும் ஆசையுடன்
அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம்.
கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும்
குறிபார்த்தபடி குறுவாள் ஒளிந்திருக்கிறது
இது சாத்தான்களின் உலகம் என்பதால்
கடவுளர்களுக்குக்கூட
வேலையில்லாமற் போய்விட்டது.
300120092005
கருத்துகள்
கருத்துரையிடுக