-----துவாரகன்
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு
கொளுத்தும் வெய்யிலில்
கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில்
பேய்க் காற்றுத் தாண்டவத்தில்
எல்லாமே அள்ளுண்டபடி
சிவப்பு கறுப்பு பொட்டிட்ட
ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி
செழிப்பிழந்து போன
நித்திய கல்யாணிப் பூக்களில்
நம்பிக்கையுடன்
தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட…
நம் வாழ்க்கையிலிருந்து
மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது.
அதற்கிருக்கும் திராணிகூட
இல்லாமற் போய்விடுமா?
வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தொpயும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை
பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில்
மூன்று நாளாக உதறிப் போடாத
அழுக்குப் படிந்த போர்வையுடன்
நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு
மண் நிரப்பிய சிரட்டையில்
எச்சில் துப்பிக் கொண்டிருக்கும்
இந்தத் தரித்திரத்தை
யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்?
அழுக்கு மூட்டையாய்
அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும்
தூசி படிந்துபோன சாய்மனைக் கதிரையாக
நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்
காத்திருப்புக்களின் நடுவே...
பழுத்துப்போன இலைகளாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.
20052007
கருத்துகள்
கருத்துரையிடுக