செப்டம்பர் 19, 2009

காதுகளால் நிரம்பி வழிகின்ற சனங்களின் கதைகள்



-----துவாரகன்

சனங்களின் கதைகள்
காதுகளால் நிரம்பி வழிகின்றன
உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி
காதுகளை நிரப்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி
தோள்மூட்டால் வழிந்து
குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள்

சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில்
பிடித்து வைக்கவோ
ஒரு பீப்பாவில் நிரப்பி வைக்கவோ முடியாதுள்ளது.
சீமெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல்
வழுக்கி ஓடுகின்றன.

வீடு தாண்டி வாசல் தாண்டி
கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி
மரங்களின் மீதேறி
வானத்துக் கயிறுகளைப் பிடித்து தொங்கி
விண்ணைத் தாண்டிச் செல்கின்றன.

அதிகமான சந்தர்ப்பங்களில்
இரவில் தூங்கும்போது
வாசலுக்கு வெளியே நின்று முழித்துப் பார்க்கின்றன
ஒரு பெரும் பூதம்போலவும்
கதைகளில் அறிந்த பேய்கள் போலவும்
இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும்
உயிரைத் தனியே
ஒரு இரும்புப் பெட்டியில்
வைத்துக் கொண்டும்
கொட்டக் கொட்ட முழித்துப் பார்க்கின்றன.

உயிரியல் ஆய்வு கூடத்து
பாடம் போட்ட மனிதர்களின்
உடல்களைப் போலவும்
இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் கொண்டும்
இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள்
மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும்
சில கிரகவாசிகள் சொல்கிறார்கள்.

இந்தக் கதைகள் எல்லாவற்றையும்;
நான் நேசிக்கும் பூனைக்குட்டியினது வருடலில்
நிதானமாக நின்று கேட்க முடியவில்லை.
அவை அதற்கு முன்னரே வழிந்தோடி விடுகின்றன.

ஒரு வாமன அவதாரமாக
இந்த உலகை அளந்தபடியே.
040320092344

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக