முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உடுத்துத்திரியும் எருமைமாடுகள்

- துவாரகன் நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன் அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர் வற்றிப்போன நாள்முதல் எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன. தங்கள் லிங்கம் வெளியே தெரியாதபடி அம்மணத்தைக் கண்டு குழந்தைகள் அருவருக்காதபடி அழகாக உடுக்கின்றன. பட்டுப்பீதாம்பரத்துக்கும் சுங்கான் பிடித்து புகை விடுதலுக்கும் வெளிநாட்டுச் சரக்குகளில் மிதப்பதற்கும் உடுத்துத் திரியவேண்டும் என்று கரிக்குருவி ஒருநாள் சீட்டியடித்துச் சொன்னதாம். யாருக்குத் தெரியும் மனிதர்களின் ஆடைகளைப் பிடுங்கி எல்லா விலங்குகளுக்கும் விற்றுவிடும் காலம் ஒன்று எருமைமாடுகளின் புண்ணியத்தில் கிடைக்கவும் கூடும்.  11/2012

பறித்தெடுக்கப்பட்ட மூலப்பிரதி

- துவாரகன்  துருப்பிடித்த அடையாளம் அழி முலாம் பூசு கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள் பொருத்து கண்டவர் வாய் பிளக்கட்டும். மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி புனைந்தெழுது புதிய பக்கம் சேர் ஏமாந்து போனவனிடம் பிரதியே இல்லையென்று சொல். வாதம் செய்தால் உன் கச்சையில் இருந்து பழுப்பேறிய பக்கத்தை எடுத்துக்காட்டு இதுதான் மூலஓலை என்று. தலையாட்டிப் பழக்கப்பட்டவை கோயில் மாடுகள் மட்டுமல்ல. 10/2012 நன்றி - பதிவுகள்

ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல்

  - துவாரகன் கண்ணிருந்தும் கள்ளிப்பால் பட்டவர்போல் குருடாயிருந்து கொன்றவரும் சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும் இந்தத் தீவின் சீழ்கொண்ட மானிடர் என்பேன். இழிந்தவரை… நெடிக்கு நெடி சபித்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் இன்னும் இன்னும் தோத்திரமும் செய்வேன். ஆகப்பெரிய தண்டனை தந்த ஊழிப்பெருமழையில் எங்கள் உயிரும் உடலும் காத்த உறவுகளை எப்படி மறப்பேன். தூக்கிய துவக்கைத் தாழ்த்தி போவென்று விட்டானே ஒருவன் முகந்தெரியா அவன் இதயம் வாழ்க. துண்டங்களாய் தொங்கிய உடலத்தை பிரித்துப் பொருத்தி உயிர்காத்தானே ஒரு மருத்துவன் அவன் பாதங்கள் என்றும் வாழ்க. சுமந்து வந்த சுற்றம் கூட இருந்த நட்பு உயிர் காத்த உறவு எப்படி மறக்கமுடியும்? இந்தத் தேசத்தின் நன்னீர்ஓடைகள் நீங்கள் உங்களுக்கு ஆயிரம் தடவை தோத்திரம். 10/2012 ---

வாழ்வோம்

வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் இன்னும் நாங்கள் வாழ்வோம்.  வாழ்வின் சுமையைத் தூக்கி சுகமாய் நாங்கள் இன்னும் வாழ்வோம்.                  (வாழ்வோம்…) உலகில் பூக்கும் கொடியும் உரமாய்ப் பற்றிப் பிடித்தே வாழும். சுற்றி இருப்போர் உறவாய் சுமையைப் பகிர என்றும் வாழ்வோம்.                 (வாழ்வோம்…) வானம் பார்க்கும் நிலமும் மண்ணில் பொழியும் மழையின் நீரும் பின்னிப் பிணைந்தது போலே மனமும் திடமும் உரமும் கொள்வோம்.                   (வாழ்வோம்…) உழைப்பு உறுதி உயர உன்னத வாழ்வு கைகளில் சிக்கும். களைப்பு நீங்கி வாழ்வோம் - நம் கரங்களை இன்றே ஒன்றாய் சேர்ப்போம்.                   (வாழ்வோம்…) பாடலைக்கேட்க அழுத்தவும்  Hoste...

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...

காலையும் மாலையும் துதித்தல் நன்று

-துவாரகன் உன் பேச்சு நன்று உன் பாடல் நன்று உன் நினைவு நன்று உன் வரவு மிக நன்று நீ வாழ்க்கை தந்தாய். வாழ்க! இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் குற்றம் சொல்பவர்கள் உன் அருமை புரிவதேயில்லை நீயே என் வாழ்வு நீயே என் வழிகாட்டி உனக்காகவே என் காலங்கள் எனக்கு வேறு என்ன வேலையிருக்கிறது கொஞ்சம் பொறுக்கிறீர்களா? காலைக்கடன் முடித்துவிட்டு வருகிறேன். 07/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012