முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை

----- துவாரகன் மண்டபத்தின் கடைசி இருக்கையில் வந்தமர்கிறது ஒரு சின்னப் பறவை மனிதர்கள் இல்லாத நாற்காலிகளுடன் அமைதியே வழிந்து ஒழுகும் மண்டபத்தில் திறந்த கதவினூடாக வந்தமர்ந்த அந்தப் பறவை ஒரு மனிதனைப் போலவே யோசனையில் ஆழ்கிறது. ஒரு மரக்கிளை ஒரு வீட்டு முகடு ஒரு மின்கம்பம் எல்லாம் இருக்க மனிதர்களை இழந்த இந்த மண்டபத்தில் ஏன்தான் வந்தமர்ந்தது? தன் இனத்திடம் பகிர முடியாது நெஞ்சை அடைத்து விம்மும் சஞ்சலமோ? மனிதர்களை இழந்த அந்தக் காலியான கடைசி இருக்கையில் அந்தச் சின்னப்பறவை வந்தமர்கிறது. உறவுகளை இழந்து தனித்துப் போன ஒரு சிறுவனைப்போலவே! 261020092229
வீதியைக் கடக்கும் தம்பளப்பூச்சிகள் ----- துவாரகன் வானத்துக் கதவுடைத்துக் கொட்டிய பெருமழையில் வீதிகள் கழுவப்பட்டன. சேறு வெள்ளம் நாய் மாடு இறைத்த எச்சங்கள் எல்லாமே அள்ளுண்டன. சருகுகள் தடிகள் பெருமழையால் இழுபட்டன. மழை பெய்த பின்நாளில் மண்ணில் மூடுண்ட வித்துக்கள் வெடித்தன. இளம்பச்சைக் குருத்துக்கள் வெளித்தெரிந்தன சாணக வண்டுகள் உருண்டு புரண்டன தம்பளப் பூச்சிகள் ஊர்ந்தன சரக்கட்டைகள் வீதியைக் கடந்தன வாரடித்த மண்ணை மண்வெட்டியால் வழித்தெடுத்தனர் சிலர் மழை சுத்தப்படுத்திய வெளியில் கிளித்தட்டு விளையாடினர் சிறுவர் வீதி அருகில் இருந்து வெற்றிலை போட்டுத் துப்பினர் பெரியவர் இது நல்ல மழை என்றனர் மழையால் வழித்தெடுக்கப்பட்ட எல்லாம் வீதியால் வழிந்தோடி பாலங்களுக்கடியில் தேங்கின குளங்களை நிறைத்தன எல்லைகள் இழந்த புதிய வீதியை தம்பளப் பூச்சிகளும் சரக்கட்டைகளும் கடந்து செல்கின்றன. 210920092003 நன்றி- கலைமுகம்

செட்டிக்குளமும் ஒரு பிரெஞ்சு மருத்துவனும்

-----துவாரகன் வெடித்து விழுந்த மின்னல் வெட்டுக்களிடையே சிதறித் தெறித்தன உயிர்க்கொடிகள் முகத்தை விட்டுத் துள்ளி விழுந்தன கண்கள் மரங்களின் பொந்துகளிடை பதுங்கிக் கொண்டன காதுகள் கைவிரல்கள் மாமரங்களில் தொங்கிக் கொண்டன கால்கள் தென்னை மரங்களில் தெறித்து வீழ்ந்தன பிரிந்த குடலிலிருந்து ஊறிய அரிசியும் பருப்பும் சிவப்பாய்ச் சிதறின துடித்துக் கொண்டிருந்த இதயத்தை நாயொன்று காவிச்சென்றது முழுதாய்க் கிடந்த கண்முழிகளை கோழிகள் கொத்திச் சென்றன சிதறித் தூவிய தசைப்பிண்டங்களை எறும்புகள் இழுத்துச் சென்றன. உயிர்ப்பிச்சைக்கான அவலத்தினிடை தன் முன்னே பரப்பியிருந்த இரத்தம் நிரம்பிய உடல்களிலிருந்து முழுதாக ஒரு மனிதனை மீண்டும் உருவாக்க செட்டிக்குளத்தில்… பிரெஞ்சு மருத்துவனொருவன் முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறான் 100520090835

சாத்தான்களின் உலகம்

-----துவாரகன் மனிதர்களைப் போலவே வருகின்ற துன்பங்களுக்கும் கொஞ்சமும் இரக்கமில்லை. எப்படித்தான் எல்லாத்துயரங்களும் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன? சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆயத்தமாகிய பிணத்தின் முன் கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன. இத்துயரங்களைப் போலவே அதை வருவித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் கூட கொஞ்சமும் இரக்கமில்லை வீதியில் வாகனத்தின் சில்லுகளிடையே நசிந்து செத்துப்போன ஒரு குட்டிநாயின் வாழ்வுபோல் நாம் வாழும் காலங்களும் செத்துப் போகின்றன. யாரிடம் சொல்லி ஆற்றுவது யார் யாரைத் தேற்றுவது கொல்லும் வீரியத்தோடு கோரப்பற்களைக் காட்டியபடி மரணம் முன்னால் வந்து எக்காளமிட்டுக் கொக்கரிக்கிறது. மரணத்தின் கூரிய நகங்கள் எம் தொண்டைக்குழியில் ஆழ இறங்குகின்றன. அதன் கடைவாய் வழியாகவும் நாக்குகளின் மீதாகவும் இரத்த நெடி வீசியபடியே உள்ளது எங்கும் மரண ஓலம் எங்கும் சாவின் எச்சம் எங்கள் வாழ்வுக்காக இன்னமும் வாழும் ஆசையுடன் அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம். கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும் குறிபார்த்தபடி குறுவாள் ஒளிந்திருக்கிறது இது...

எல்லாமே இயல்பாயுள்ளன

-----துவாரகன் எல்லாமே மிக இயல்பாய் உள்ளன. எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்யலாம். தெரிவு மட்டும் எனதாய் உள்ளது. இன்று இருப்பதும் நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும் மிக எளிதாயிருக்கிறது. சாப்பிடுவது நடந்து செல்வது ஆட்களைப் பார்க்கும்போது எந்தச் சலனமுமில்லாது ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் பார்த்துக் கொண்டேயிருப்பது எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின் ஒப்புக்காக சிறு உதட்டுப் புன்னகையை காட்டிவிட்டுப் போவது எல்லாமே இயல்பாயுள்ளன. ஒரு கூரான கத்தியோ ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ ஒரு கிணறோ எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது. இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு கதியாலில் தொங்கவிடப்பட்ட ஒரு கோழியின் செட்டையடிப்பின் பின்னான அமைதியும்… கூடவே கிடைத்துவிடும். எல்லாமே மிக இயல்பாய் உள்ளன. நான் எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்யலாம். தெரிவு மட்டும் எனதாய் உள்ளது. 160120080637

எங்கள் குழந்தைகள்

-----துவாரகன் எங்கள் குழந்தைகள் வீடுகளைத் தொலைத்து விட்டார்கள் எங்கள் குழந்தைகள் வீதிகளைத் தொலைத்து விட்டார்கள் எங்கள் குழந்தைகள் சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள் இனியும் அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை எங்கள் கைகளை விட்டுத் தூரப் போய்விட்டன. படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல் இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல நடந்த களைப்புத் தீர ஒரு முள்ளில்லாப் பற்றை தாகம் தீர்ப்பதற்குக் கொஞ்சம் குடிதண்ணீர் 051020082250

காதுகளால் நிரம்பி வழிகின்ற சனங்களின் கதைகள்

-----துவாரகன் சனங்களின் கதைகள் காதுகளால் நிரம்பி வழிகின்றன உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி காதுகளை நிரப்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி தோள்மூட்டால் வழிந்து குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள் சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கவோ ஒரு பீப்பாவில் நிரப்பி வைக்கவோ முடியாதுள்ளது. சீமெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல் வழுக்கி ஓடுகின்றன. வீடு தாண்டி வாசல் தாண்டி கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி மரங்களின் மீதேறி வானத்துக் கயிறுகளைப் பிடித்து தொங்கி விண்ணைத் தாண்டிச் செல்கின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் இரவில் தூங்கும்போது வாசலுக்கு வெளியே நின்று முழித்துப் பார்க்கின்றன ஒரு பெரும் பூதம்போலவும் கதைகளில் அறிந்த பேய்கள் போலவும் இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும் உயிரைத் தனியே ஒரு இரும்புப் பெட்டியில் வைத்துக் கொண்டும் கொட்டக் கொட்ட முழித்துப் பார்க்கின்றன. உயிரியல் ஆய்வு கூடத்து பாடம் போட்ட மனிதர்களின் உடல்களைப் போலவும் இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் கொண்டும் இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள் மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும் சில கிரகவாசிகள் சொல்கிறா...