பைத்தியக்காரர்களின் உலகம்
-துவாரகன்
இந்த உலகமே
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.
மனிதர்களை ஆட்டுவிக்கும்
அதிகாரிகளும் ஆயுததாரிகளும்
ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள்.
பணத்திற்கும் பகட்டுக்கும்
ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது.
இச்சைக்காகக் கட்டிய கச்சையை
இழக்கத் தயாராயிருக்கிறார்கள்
காணுமிடமெல்லாம் பைத்தியங்கள்.
எல்லாம் இழந்தபின்
யாரோ ஒரு நல்லவனிடம்
கடன்வாங்கிக் கொண்டுவந்த
மூவாயிரத்து நானூறு ரூபாவை
பிரயாணத்தில் யாரோ களவாடிவிட்டதாக
நாடி நரம்பு தளர்ந்து போய்
கண்கலக்கிக் கூறினானே ஒரு முதியவன்;
அந்தக் களவாணியும் ஒரு பைத்தியம்தான்.
நான் நடந்து செல்லும்
ஒற்றையடிப்பாதையில்
உடல் தளர்ந்து
ஒட்டடைக் குடிலில் இருந்து
ஆசையாய்க் கதைகேட்கும்
இன்னொரு முதியவளின் கண்களில்
ஒளிந்திருக்கும் அன்பைக் கண்டேன் .
எந்தக் கபடமும் அவளிடமில்லை.
அவளைப் பைத்தியம் என விரட்டும்
என்னைச் சுற்றிய உலகத்தில் இருக்கும்
எல்லாருமே பைத்தியங்கள்தான்
இப்போ நான் செய்ய வேண்டியதெல்லாம்
இந்தப் பைத்தியக்கார உலகிடம் இருந்து
என் குழந்தைகளைக்
காப்பாற்றிக் கொள்வது மட்டுமே!
200920102244
நன்றி - திண்ணை, காற்றுவெளி
டாக்டர் முருகானந்தம் முகநூலில் எழுதியது
பதிலளிநீக்குDr.Muttiah wrote
""...அவளைப் பைத்தியம் என விரட்டும்
என்னைச் சுற்றிய உலகத்தில் இருக்கும்
எல்லாருமே பைத்தியங்கள்தான்.."
எங்களைக் காப்பாற்றுவது யார் எனத் துவண்டுவிடாதிருக்க
உங்கள் வரிகள் கைகொடுக்கும்."