முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது



-துவாரகன்

என் அம்மம்மாவின் உலகத்தில்
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.

முற்றத்தில் இருத்தி
திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம்.

எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன்
நடந்து வருவாள்.
கறிக்குக் கீரை
சாப்பிடப் பழங்கள்
மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த
பணியாரங்கள்.
முதல்நாள் இருமியதைக் கண்டு
மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள்
தோடம்பழ மிட்டாய்
அவளுக்கு மிகப் பிடிக்கும்

தங்கை ‘புஸ்பா’வின் பெயர்
அவள் வாயில் வராதெனத் தெரிந்தும்
சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம்

சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும்
தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச்
சுமந்து கொண்டிருந்தாள்.

எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும்
அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும்
எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள்
தோட்டம்… வீடு…
ஆடு…மாடு…
பேரப்பிள்ளைகள் என்ற
உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள்
நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர்.

ஞாபகமாய் இருந்த
ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும்
பெருப்பிப்பதற்காக
ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன்.
திரும்பியபோது அதுவும் முகாமாக இருந்தது.

வருடத்தில் ஒருநாள்
அம்மா படைக்கும்போது
‘இது அம்மம்மாவுக்கு’ என்பாள்

திரளைச் சோறு ஊட்டி
எம்மை வளர்த்த
அந்தக் கணங்கள்
எங்கள் வாழ்வின் பொற்காலங்கள்.
அதிகாரமும் ஆணவமும் வந்து
எல்லாவற்றையும் அள்ளிச் சென்றுவிட்டுவிட்டது.

அப்போது
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.
071020101052

கருத்துகள்

  1. அனுபவபூர்வமான மனதைத் தொடும் கவிதை. அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைடயே.
    எமது சமூகத்தின் சாதிய ஆணவம் என்று அழியுமோ?

    பதிலளிநீக்கு
  2. எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும்
    அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும்
    எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள்
    அருமையான வரிகள். ஆனால் தலைப்பாகைகள் என்பது முற்றிலும் தவறானது. அவர்களும் எங்களைப்போல ஒரு நசுக்கபபட்ட இனமே. மட்ராஸ் ரெஜிமென்டால் நசுக்கபட்டவர்கள். மற்றும்படி தலைப்பாககைள் என்பது முற்றிலும் இந்தியா ஆகிவிடாது. பின்புலத்தில் வெறு சமூகமே இருந்தது.
    ஆனால் இன்று சீக்கிய சமூகம் இருக்கும் நிலையில் இன்னும் 10-15 வருடங்களில் எமது சமூகம் இருக்கும். (சிறிலங்கா எனது தாய்நாடுஎன்று கொண்டு)

    பதிலளிநீக்கு
  3. அனுபவபூர்வமானதென்பதில் உண்மை இருக்கிறது டொக்டர். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் வெண்காட்டான் அவர்களுக்கு,

    இக்கவிதையில் 'தலைப்பாகை' என்பதை குறியீடாகத்தான் பயன்படுத்தினேன். அப்போது சாதாரணமாக கதைக்கும்போது மக்கள் அவ்வாறுதான் குறிப்பிட்டார்கள். நானும் புரிந்து கொள்கிறேன். எதிர்காலத்தில் கவிதைகளைத் தொகுப்பாக்கும்போது மேலும் செம்மைப்படுத்துவேன். தங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வெண்காட்டான் சொல்வது மிகவும் சரி. தலைப்பாகைகள் என்பது முழு இந்தியா ஆகிவிடாது. கூடவே கூர்க்கா அல்லது நாகலாந்து சிப்பாய் என்றுகூட எழுதியிருக்கலாம். ஆனால் ஒன்று பாருங்கள் அநேகமான நாடுகளில் விளிம்புநிலை சமூகங்களிலிருந்தே புறக்கணிப்பு, அல்லது பிழைப்புக்கு மாற்றுவழியில்லாத நிலையில்தான் சிப்பாய்களாகிறார்கள்.( இது போராளிகளுக்கு மட்டுமல்ல ஜேவிபியினருக்கும்கூட ஒரு பின்னம் பொருந்தும்.)

    இங்கு தலைப்பாகை என்பது இந்திய சமாதனப்படையின் ஒரு குறியீடுதான். இவ்வாறாக ஒரு கவிதையின் ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனி பிரித்து நோண்டிப்பார்ப்போமாயின் கவிதையின் உயிரை ஸ்பரிசிக்கமுடியாலாகிவிடும்.

    காருண்யன் கொன்ஃபூஸியஸ்.

    பதிலளிநீக்கு
  6. கருத்துக்கள் செம்மைப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும்தானே. மூர்த்தி அவர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @ponnia:தமிழ் போரட்டம் விளிம்பு நிலை மக்களில் இருந்து வரவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் இருக்கிறார்க்ள. அரசாங்கம் கூறுவது போல அவர்கள் கிழக்கை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல.
    அதே வேளை விளிம்பு நிலை மக்களே அதிக துன்பத்தையும் அனுபவித்தவர்களாகவும் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகதவர்கள்.
    தமிழ்ர்களின் முக்கிய பலகீனமே எதையுமே சுயமாக சிந்திக்கும் குணம் அற்றதுதான். போராளிகள் யாவரும் பிளைப்புக்கு வழியற்று போனவர்கள் இல்லை.. அப்படிபட்டவர்களால் தியாகம் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
  8. சீக்கியரும் எம் மக்களைபோல ஒடுக்கப்டர்வகளே. ஆனால் தற்போது அதை முற்றாக மறக்கடிக்பட்டடுவிட்டார்கள். கவிதையில் பிழைகசொல்லவில். நானும் இந்தியா என்றால் அவர்கள் தான் என்ற கருத்துதான் இருந்தது. ஆனால் அவர்கள் அல்ல. நாகாலந்து கூர்காவுமல்ல. அவர்கள் படும் பாடு அங்கு போய் பார்தால்தான் தெரியும். இந்தியா அதிகாரவர்க்கம் என்பது குறிப்பிட்ட உயர்சாதியினரும் அவர்கின் விசுவாசமான மலையாளிகளுமே ஆகும். அவர்களு இங்கு குறிப்பிப்பட வேண்டியவர்கள். மலையாளிகளுக்கு என்றுமே தமிழ்ாகள் மீது பரிவோ பாசமோ கிடையது. மாறாக ஒரு வித இன ரீதியான வெறுப்பே உண்டு. தமிழ்நாட்லி்.இருந்தால் தெரிந்திருக்கும்.
    அகதி ஈழத்தமிழருக்கு விமான நிலையங்களில் அவர்கள்க கொடுக்கும் துன்பம் நிங்கள் அறியதது அல்ல.

    பதிலளிநீக்கு
  9. //முதல்நாள் இருமியதைக் கண்டு
    மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள்
    தோடம்பழ மிட்டாய்
    அவளுக்கு மிகப் பிடிக்கும்//

    வரிகளில் எதார்த்தம்..கவிதையை ரசிக்கச்செய்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. மதுரை சரவணன், வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012