முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கரைந்து நீளுதல்

-துவாரகன் சோம்பல் முறித்து எழுந்த சூரியன் மரங்களிடையே ஒளித்து விளையாடுகிறான். யாரோ சிந்திவிட்ட சோற்றுப் பருக்கைகளை எறும்புகள் இழுத்துச் செல்கின்றன. வைக்கோற்போர் அருகே சிதறிய நெல்மணிகளை அணிற்பிள்ளைகள் தேடித் தின்கின்றன. வெறும் குப்பையைக் கிளறி கோழிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறது கொண்டை வைத்த சேவல். நேற்றைய பூக்களை உதிர்த்துவிட்டிருக்கிறான் காலதேவன். மேசையில் விரித்து வைத்த புத்தகத்தின் பக்கங்கள் நகர மறுக்கின்றன. எந்தச் சலனமுமற்று விடிகின்றது மற்றுமொரு காலைப்பொழுது... அந்தச் சோம்பலைத் துடைத்தெறிகிறது உன்னுடைய மொட்டுச் சிரிப்பு. 18022022 நன்றி : உயிரோடை வானொலி https://www.facebook.com

காலத்தின் ரேகை

- துவாரகன் சோர்வையே அள்ளிக் தெளிக்கும் மம்மல். மனிதர்களின் குரலில்லாத இடைவெளியை வானொலி நிரப்புகிறது. காலில் உரசிக்கொண்டிருந்த பூனையும் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த கறுப்பனும் உலாப் போய் விட்டன. புலுனிகள் மட்டும் நாற்சார் முற்றத்தில் குதூகலமாய். உணர்வைத் தொலைத்துவிட்டு மின்மினிகளின் பின்னால் மனிதர்களும் சென்றுவிட்டார்கள். இருளும் ஒளியும் ஒன்றாகிய வாழ்வில் கண்சிமிட்டும் வெளிச்சம் அவளைத் தேற்றப்போவதில்லை. பேர் சொல்லி அழைக்கும் ஒரு குரலுக்காக... அந்தக் கணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. அழுக்கேறிப்போன மேசையில் வலது கையூன்றி இருட்டை வெறித்தபடி இருக்கிறாள். ஒரு காலடியோசை. அவசரத்தில் மூக்குக் கண்ணாடியை எடுத்துப் பொருத்துகிறாள். கைத்தடியைத் தேடி எடுக்கிறாள். தனிமை... அவள் காலடியில் சுருண்டு கிடக்க, காலம், தன் ரேகைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது. 02/2022 https://vanakkamlondon.com

ஆத்மவிசாரியின் பாவச்சுமை

  - துவாரகன்   உன் முதுகை அழுத்தும் அத்தனையும் பாவமூட்டைகளா? முற்றிய நெற்கதிர் தலைசாய்த்தபோதெல்லாம் காட்டாறாய் வந்தாயே! கையறுநிலைக் கண்ணீர்ப்படலத்தைப் பரிசளித்தாயே! அந்தப் பாவத்தைக் கழுவுதற்கா திசையெட்டும் நீர்ப்படியேறினாய்?   மழை பெய்து ஓய்ந்துபோன விடிகாலை வேளையிலே, காக்கைகூடக் கரையாமல் தனியனாய் அங்கப் பிரதிஷ்டை செய்தாயே! உன் பாவங்கள் கரைந்தனவா அன்பரே?   விச ஈட்டி   பாயும்முன்னே உன் அரற்றல் கேட்டு உள்ளே அழைக்கக்கூடும் என்று நினைந்தழுகிறாய்.   உன் முதுகை அழுத்திக் கொண்டிருப்பது திட்டிவாயிற் காவலனுக்குரிய பரிசுப் பொதியல்ல பாவச்சுமை! 26012022

விழி பிதுங்கும் மாடுகள்

 - துவாரகன்  அந்த நாற்றத்தை நாங்கள் மூன்று தலைமுறையாக அனுபவிக்கிறோம் என்றார் பெரியவர்.   நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். இந்த மாடுகளை என்னதான் செய்வது?   கால்களைப் பிணைத்து லாடம் அடித்து நாணயக் கயிற்றை இறுக்கிக் கட்டி எரு ஏற்றிப் பாரம் இழுக்க வைத்தால் எல்லாம் சரிவரும்.   இல்லாவிடில் குறி சுருங்கும்வரை சூடுவைக்க வேண்டியதுதான்! 21012022

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்

  - துவாரகன் இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்? பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய். இனிப்புப் பலகாரங்களையும் சில புதிய ஆடைகளையும் வாங்கி வைத்திருப்பாய். பவுடர் அப்பிய முகத்துடன் புன்னகை பூத்தபடி, படியேறும்போது எந்த வார்த்தையை முதலில் பேசவேண்டுமென்று மனப்பாடம் செய்து கொண்டிருப்பாய். ஆனால், உன்னைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். உனக்காக. ஐந்து பகல்களும் இரண்டு இரவுகளும் அன்னியனின் ஆயிரத்தெட்டு வண்ணங்களையும் புலுனிகளின் கீச்சிடலுக்கும் நாய்களின் குரைப்புகளுக்குமிடையே நெருப்பில் சுட்ட கருவாட்டு வாசனை நினைப்பில் இதயம் கருக ஏற்றுக்கொண்டாளே! அது நீ தேடிக்கொடுத்த சுயநல இருள். உயர்ந்த நீர்த்தாங்கியில் தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக்கூடுபோல், எல்லோர் கண்களிலும் துலங்குகிறது வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள். நீ தேடிக் கொடுத்த பரிசுகள் அவை. அவளின் கட்டை தீயில் வேகும்வரை ஆறாதது! 14012022 http://www.easy24news.com

அகலிகையின் செருப்பு

- துவாரகன் மற்றவர் பொருளைத் திருட  என் தந்தை  எனக்குக் கற்றுத் தரவில்லை.  நானும் என் மகனுக்குக்  கற்றுக் கொடுக்கப் போவதில்லை.  நிரம்பக் கற்றவர்களும்  மற்றவர் பொருளைத்  திருடக் கற்றிருக்கிறார்கள்.  செருப்பைக்கூட... களவாக அணிந்து பார்க்க  ஆசைப்படுகிறார்கள்.  இந்திரன் சேவலாகியதும்  திருட்டுக்காகத்தான்.  பூனையாகிப் பொட்டுக்குள்ளால்  தப்பியோடியதும்  திருடியதால்த்தான்.  ஏன், அகலிகைக்கு மட்டும்  தான் அணிந்திருந்தது  தன் செருப்பில்லையென்று  தெரியாமலா போனது?  திருடியவரும்  திருடக் கொடுத்தவரும்  பிரதியுபகாரமாக  ஒன்றை இன்னொன்றால்  நிரப்பிக் கொள்கிறார்கள்போலும்! 12012022 https://vanakkamlondon.com/literature/kavithaikal/2022/01/147143/?fbclid=IwAR0FF6xmZvNt6IKx9WG01J7j2dfVtejxq_plCxWbz96egGQWVIghYsikb_M

புதிய மூன்று சிலுவைகள்

  -துவாரகன்   பொய்யருக்கும் காமுகருக்கும் சட்டவிரோதிகளுக்கும் இந்த அழகிய வெளி திறக்கப்பட்டிருக்கிறது.   மூலையில் பதுங்கியிருக்கும் உண்மையை சவுக்கால் அடியுங்கள். ஒழுக்கத்திற்கு முட்கிரீடம் சூட்டுங்கள். நேர்மைக்கு நஞ்சுகொடுத்துச் சாவடியுங்கள்.   மீளவும் உயிர்க்காதபடி மூன்று சிலுவைகளிலும் முந்நூறு ஆணிகொண்டு அறையுங்கள்.   நாங்கள் எல்லோரும் பொய்யரைப் போற்றுவோம். நாங்கள் எல்லோரும் காமுகரைக் கொண்டாடுவோம். நாங்கள் எல்லோரும் சட்டவிரோதிகளுக்குப் பன்னீர் தெளிப்போம். 04012022 https://vanakkamlondon.com