-துவாரகன்
குளித்த ஈரம் துவட்ட நேரமில்லை.
காற்சட்டை காயும்முன்னே அணிந்து கொள்கிறேன்
சாப்பாடும்
ஆலயப் பூஜைபோல் ஆறுவேளையாயிற்று
அப்புச்சியின் உலகில்
பழஞ்சோற்றுடன்
வயிறு குளிரக் கஞ்சி.
பின்னொரு காலம்
வெள்ளைப் பிட்டுடன்
ருசியான மிளகாய்ச் சம்பல்.
அவசரக் கோமாளிகளின் கையில்
‘கேக்’கும் 'மைலோ' பாலும்.
நினைவுகளின் துகிலுரிப்பு
நிலைப்பவற்றின் நிலையழிப்பு
என்னையும் தொலைக்கிறது
என் கண்ணிலும்
மூளையிலும்
மூக்கின் வழியிலும்
பாட்டனின் கறுப்பு
இன்னும் மீதியாய் ஒட்டியுள்ளது.
அவசரமாகக் கண்ட இடமெல்லாம்
குந்தி எழும்பியதில்
என் பின்பக்கம் மட்டும்
கொஞ்சம் கறுத்துப் போயுள்ளது.
நண்பரே
சந்தேகமெனில்
காட்டட்டுமா?
யூலை/2011 நன்றி- tamilauthors.com
(குறிப்பு - கவிஞர் சோ. ப வின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று ஞாபகம் வருகிறது)
துவாரகனின் வலைப்பதிவு