முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்

-துவாரகன் இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன் அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான். சொல்… விழுங்கினால் திக்கும். யாருக்கும் எதுவும் புரியாது. வேடதாரி ஒளியை விழுங்கினான். அது தொண்டைக்குழியில் மீன்முள் போல் சிக்கிக்கொண்டது. பாட்டன் சொன்ன கதைகள் போல் கனவுகண்டான் ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று. ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று. குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான் ஒளி அசைவற்றுக் கட்டியாகியது. இன்னமும் ஆட்டுக்குட்டியை விழுங்கிய வெங்கடாந்திப் பாம்புடல்போல் துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி 06/2011

தீராக்காதலியின் வினாக்கள்

-துவாரகன் என் உதட்டுச்சாயம் பற்றியும் கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும் கூந்தல்அழகு பற்றியும் நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை என் அன்பும் தீராக்காதலும் ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன என் நகப்பூச்சுக்கே நாளும் புகழ்ந்து தள்ளும் நீ நான் பேசும்போதெல்லாம் வானத்தையும் பூமியையும் பார்த்து ஏதேதோ பிதற்றுகிறாய் தீராக்காதலி அடுக்கடுக்காக மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள். ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும் அழகுடன் கூடிய பரிசுப்பொருளுடன் பேச முடிவுசெய்துவிட்டேன். அவளின் கேள்விக் கணைகள் முழுதாக என்னை மூடும்முன்னே! 06/2011 நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாதும்

சபிக்கப்பட்ட உலகு - 2

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்… உயிரின் மோகம்… ததும்பி வழிய முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன் நினைவு துரத்துகிறது. மறதியே! என் இருளறையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன் நீ வாழ்க இப்போது மட்டும் எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது ஒரு சுருக்குக்கயிறு. 06/2011 நன்றி - காற்றுவெளி யூன்/பதிவுகள்

உக்கிப்போன தெருவும் எலும்பும்

-துவாரகன் உக்கிப்போன தெருவில் எலும்பொன்றைக் கண்டெடுத்தேன் சுவட்டெச்ச ஆராய்ச்சிக்கு மூளை தயாரானபோது காற்றுக் கைகளிலிருந்து அது நொறுங்கி விழுந்தது செத்துக் கோதாகிப்போன மிருகத்துள் புகுந்து குடைந்து வெளியேறும் பன்றியைப்போல் தெருவையும் எலும்பையும் குடைந்துகொண்டிருக்கிறது பதார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் தீராப்பிணிபோல்... உக்கிப்போகின்றன தெருக்களும் எலும்புகளும். 04/2011 நன்றி - சுடர் ஒளி மே 29

மீன்குஞ்சுகள்

-துவாரகன் கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்குஞ்சுகள் ஒருநாள் துள்ளி விழுந்தன மாடுகள் தின்னும் வைக்கோல் கற்றைக்குள் ஒளிந்து விளையாடின வேப்பங் குச்சிகளைப் பொறுக்கியெடுத்து கரும்பெனச் சப்பித் துப்பின வயலில் சூடடித்து நீக்கிய ‘பதர்’ எல்லாம் பாற்கஞ்சிக்கென தலையிற் சுமந்து நிலத்தில் நீந்தி வந்தன வீதியிற் போனவர்க்கு கொல்லைப்புறச் சாமானெல்லாம் விற்றுப் பிழைத்தன திருவிழா மேடையில் ஏறி ஆழ்கடல் பற்றியும் அதன் அற்புதங்கள் பற்றியும் நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும் அளந்து கொட்டின இப்படித்தான் வைக்கோலைச் சப்பித் தின்னும் மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த மீன்குஞ்சுகள். 04/2011 நன்றி - காற்றுவெளி/ வார்ப்பு

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

-துவாரகன் நேற்றும்கூட என் அம்மா எனக்காக ஒருபிடி திரளைச்சோறு குழைத்து வைத்திருந்தாள் நான் வருவேனென்று. அவளிடம் சேகரமாயிருக்கும் எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை. எல்லாப் பாரத்துக்கும் அவளே சுமைதாங்கி அப்பாவின் உயர்வில் கோபம்கொண்டே அவர்கள் எங்கள் வீடு அடித்து உடைத்து போத்தலால் அப்பாவைக் காயப்படுத்தி அம்மாவும் நாரியில் அடிவாங்கி அலறியபோது வேலிப்பொட்டால் எங்களை இழுத்துக் காத்த 'பெரியமாமி' சொல்லக் கேட்டிருக்கிறேன். பெற்றெடுத்த கணத்திலும் முன்பு எங்களுக்காய் சேகரித்து வைத்திருந்த முத்தங்கள் பற்றி. தாம் சொல்வது பொய்யெனத் தெரிந்தும் ஆயிரம் வார்த்தைகள் கூறியும் காத்திடுவர் எங்கள் தாயர். ஊரானுக்கு ஊதாரியென்றாலும் அவளுக்கு உயிர்க்கொடி. நள்ளிருளிலும் தனித்திருந்து கலங்குவாள். தாய்மைக்கு வார்த்தைகளேது? எங்கள் தாயரைப்போலவே என் அம்மாவின் புன்னகை அழகு அவளின் அழுக்கு அழகு அவளின் மனசு அழகு எங்கள் தாயரின் காலங்கள் புனிதமானவை. இப்போ எங்கள் சின்னத்தாயர் இந்தப் புன்னகைகளை எல்லாம் குப்பைக்கூடையில் தூக்கிஎறிந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறார் தாயாக அல்ல தெருநாயாக…பேயாக… 04/2011

அவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்

-துவாரகன் பரிபாஷைகளுடன் இருப்பவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அளவுகோல் வைத்து ஆராய்ந்தவர்கள் இப்போ உதிர்க்கும் வார்த்தைகளை இரத்தினப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி சாமரம் வீசி குதிரையில் ஏற்றிச்செல்லக் காத்திருக்கிறார்கள். அவளின் வார்த்தைகள் பறவைபோல் சிறகடிப்பவை குழந்தைகளின் வண்ணமயச் சட்டைகளில் அழகுகாட்டக்கூடியவை மனிதர்களின் வார்த்தைகள் எப்போதும் தூலமானவை பூடகமானவை எப்போதும் பொய்யானவை எந்நேரமும் கொல்லக்கூடியவை. உயிர்வாழவைக்கும் வார்த்தைகள் எங்கள் கடவுளரிடமும் இல்லை. இப்போ தீர்மானமாயிற்று மனிதர்களுக்கு வார்த்தைகளைக் கடன் கொடுப்பதைப் பார்க்கிலும் ஒரு சிட்டுக்குருவிக்குக் கொடுக்கலாம் என்று. 03/2011 நன்றி : காற்றுவெளி