வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்
- துவாரகன் எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று எல்லாம் பூசி மெழுகியாயிற்று இரத்தக்கறை உருச்சிதைவு துருத்தும் சுவடு எல்லாம் கடின உழைப்பில் முடிந்தாயிற்று நீ இன்னும் கனவுகளையும் நினைவுகளையும் காவித் திரிகிறாய் சித்தங் கலங்கியிருக்கிறாய் செத்த பிணத்தின் நினைவைச் சுமந்திருக்கிறாய் உன் பிஞ்சின் சிதறலை அள்ளி மடியில் வைத்துக் கொண்டிருக்கிறாய் நான் தந்துள்ள வண்டின் ரீங்காரத்தையும் செல்லங் கொஞ்சுங் கிளிகளையும் கண் சிமிட்டும் மின்மினிப் பூச்சிகளையும் ஏற்க மறுக்கிறாய் திருவிழாவில் மிஞ்சிப் போனவை வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளுமே ஆட்காட்டிக் குருவியொன்று சத்தம் போட்டுச் சொன்னது. 10/2013