காறை பெயரும் சுவர்கள்


-துவாரகன்
உங்களைச் சுற்றி
பெரிய சுவர்களை எழுப்பியுள்ளீர்கள்.
தவறுதலாகக்கூட
எங்கள் மூச்சுக்காற்று
பட்டுவிடக்கூடாதென
இடையில் கண்ணாடிகளையும் பொருத்தியுள்ளீர்கள்.
உங்கள் சுட்டுவிரல்களுக்கும்
உங்கள் குரல்களுக்கும்
உங்கள் பொதிகளுக்கும்
ஓர் எருமைக்கூட்டம்
உள்ளதென நினைத்தீர்கள்போலும்.
நன்றாகக் கவனியுங்கள்
நீங்கள் கட்டிய சுவர்களின்
காறைகள் பெயரத் தொடங்கியுள்ளன.
உப்புக் காற்றில் கற்கள்
போறையாகிக் கொண்டிருக்கின்றன.
அத்திவாரக் கற்களின் கீழே
நீரோடிய பாதைகள் துலக்கமாயுள்ளன.
இன்னமும்
இந்தச் சுவர்கள்
பலமென்று நம்புகிறீர்களா?
கருமேகக்கூட்டம்
எப்போதும் வானத்திற்குச் சொந்தமில்லையென்று
ஒரு தவிட்டுக் குருவிக்குக்கூட
நன்றாகத் தெரியும்.
நீங்களும்
நம்பித்தான் ஆகவேண்டும்!
10042022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

சபிக்கப்பட்ட உலகு -1