முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல்


 
- துவாரகன்

கண்ணிருந்தும்
கள்ளிப்பால் பட்டவர்போல்
குருடாயிருந்து கொன்றவரும்
சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும்
இந்தத் தீவின்
சீழ்கொண்ட மானிடர் என்பேன்.

இழிந்தவரை…
நெடிக்கு நெடி சபித்துக்கொண்டே இருப்பேன்.
ஆனாலும்
இன்னும் இன்னும் தோத்திரமும் செய்வேன்.

ஆகப்பெரிய தண்டனை தந்த
ஊழிப்பெருமழையில்
எங்கள் உயிரும் உடலும் காத்த உறவுகளை
எப்படி மறப்பேன்.

தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
போவென்று விட்டானே ஒருவன்
முகந்தெரியா அவன் இதயம் வாழ்க.

துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
பிரித்துப் பொருத்தி உயிர்காத்தானே
ஒரு மருத்துவன்
அவன் பாதங்கள் என்றும் வாழ்க.

சுமந்து வந்த சுற்றம்
கூட இருந்த நட்பு
உயிர் காத்த உறவு
எப்படி மறக்கமுடியும்?

இந்தத் தேசத்தின் நன்னீர்ஓடைகள் நீங்கள்
உங்களுக்கு ஆயிரம் தடவை தோத்திரம்.
10/2012
---

கருத்துகள்

  1. மனிதம் இன்னமும்
    மரணித்துவிடவில்லை.
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கொல்பவரும்
    இந்ததீவின்
    சீழ் கொண்ட மனிதர் ................
    அனல் தெறித்து விழுகிறது வார்த்தைகளில். நன்றி ஐயா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நெற்கொழுதாசன்.

      நீக்கு
  4. துவாரகன் உங்களுக்கு அன்பான என் வேண்டுகள் - SLAS, SLEAS இந்த பரீட்சைகளுக்காக Aptitue என்ற ஒரு வினாத்தாள் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்தானே! அதில் குறைந்தது 5 வினாக்கள் யாருமே புரிந்து கொள்ள முடியாத கேள்விகளும் கட்டாயம் வருவது நியமம். அதற்கான விடையினை அவ் வினா பத்திரத்திற்கான ஸ்கீம் வந்த பிறகுதான் எல்லோருக்கும் புரிய வரும். அது போலவே இங்கு நிறையப் பேர் கவிதை படைத்து அதந்தக்கால மரபு கவிதைகளை விடவும் கடுமையாக எழுதி வருகிறார்கள். மரபுக் கவிதை என்பது பண்டிதர்களுக்கும், படித்தவர்களுக்கும்தான் புரியும்.பாமரனுக்கும் இலகுவில் புரிந்து ஒரு சிந்தனையை அவனும் வளர்த்துவிடவே இந்தப் புதக்கவித தோன்றியிருக்கிறது. அதில் சில கவிதைகள் படித்தவர்களுக்கும், பண்டிதவர்களுக்கும் கூட புரியாமல் போகின்றன. ஆனால், தீபச்செல்வன், துவாராகன் கவிதைகள் வித்தியாசமானவை. மொழிகள் புதிதாக இருந்தாலும் அவை சாதாரண பாமரனுக்கும் ஏதோ ஒரு கருத்தை புரிய வைத்துவிடுகிறது. துவாரகனின் அனேக கவிதைகள், பொதுவாக டில்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன். இந்த ஸ்ரையில் தொடருங்கள். தயவு செய்து விளங்காத கவிதை படைப்போரிடம் சேரங்கள். ஆனால், அததான் கவிதை அருமை, பெருமை என்று சொல்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாரும் துவாரகன் கவிதைகளையும் துவாரகனை நிச்சயம் தேடிவர வைக்கும். வாழ்த்துக்கள துவாரகன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பரே, உங்கள் நீண்ட கருத்துரை பார்த்தேன். எனது கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்பதை அறிந்தேன். எனது மொழியைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து உரையாடுவோம்.

      நீக்கு
  5. தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
    போவென்று (தப்ப)விட்ட இராணுவ வீரனும்...

    துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
    பிரித்துப் பொருத்தி உயிர்காத்த
    மருத்துவனும்...

    இவ்வுலகில் மானுடம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை நிமிர்ந்து நின்று நினைவுறுத்துகிறார்கள்.

    நன்றி மறவா நெஞ்சமுள்ள துவாரகன் - ஒரு புறத்தில் கொஞ்சமும் இரக்கமற்ற அரக்கரையும் மறுபுறத்தில் இதயம் மட்டுமே படைக்கப்பட்ட தேவரையும் ஒருங்குசேரக் கண்டு எமக்கெழுதி அனுப்பிய கடிதமே இது. காத்துப் போற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  6. ராஜாஜி ராஜகோபால் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...