முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கறிவேப்பிலை

- துவாரகன் கறிவேப்பிலை கறிக்குச் சேர்க்கலாம். வீட்டின் கொல்லைப்புறத்தில் கழிவுநீர் ஊற்றியும் வளர்க்கலாம். தேவைப்படும்போது சேர்க்கவும் சாப்பிடும்போது தூக்கி எறியவும் கூடியது. அனேகர் பொதுப்புத்தியும் இதுவே! கறிவேப்பிலைக்கு மருத்துவக் குணமுண்டு என்பதும் அது உண்ணக்கூடியது என்பதும் சிலருக்குத்தான் தெரியும். சில மனிதர்களும் இருக்கிறார்கள். கறிவேப்பிலைபோல்... பயன்படுத்தவும் தூக்கி எறிந்துவிடவும். 072018

நஞ்சூறிய வார்த்தைகள்

- துவாரகன் அவர்களுக்கு மட்டும் இது எப்படித்தான் வாய்த்துவிடுகிறது? கருணை அன்பு இரக்கம் எதுவுமே இல்லை. நல்லபாம்புபோல் நஞ்சு தெறிக்கும் வார்த்தைகளால் தீண்டுகிறார்களே? இன்னொருபுறம் மனத்தில் வைத்துக் குடைந்து கொண்டு வாய்விட்டு அழவும் முடியாமல் மற்றவரிடம் பகிரவும் முடியாமல் பாதிவாழ்வில் காரணம் தெரியாமலே மரித்துப்போகிறார்கள். இதற்கு நஞ்சூட்டிய மனங்கள்தான் காரணமோ? குலைத்துப்போடவும் கூடிக்கெடுக்கவும் புறம்பேசிக் கொல்லவும் அவர்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறது. இந்த நஞ்சூறிய எண்ணத்தை யாரால்தான் மாற்றமுடியும் அண்டவெளியில் இன்னொரு புதிய கிரகம் பிறந்தாலும் அங்கு சென்றும் நஞ்சூட்டும் எண்ணத்துடன் இவர்கள் விரைந்து கொண்டே இருப்பார்கள். கறங்குபோல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாறும் என்றார் பெரியர். இங்கு கறங்கும் இல்லை. மாற்றமும் இல்லை. 28012018

முடிவில்லாக் காலங்களின் இருள்

- துவாரகன் நீண்ட கோடாக இருள். வலிய காந்த இழுப்பில் ஒட்டிக்கொள்ளும் துருப்பிடித்த இரும்புத் துகள்களாக. திருகிப் பூட்டப்பட்ட தண்ணீர்க் குழாயிலிருந்து ஓரிடைவெளியில் விட்டுவிட்டுச் சொட்டிக்கொண்டிருகிறது வாழ்வு. அங்கு எல்லையற்ற பாலைவெளியாக நீள்கிறது இருள். வெளியில் தொலைந்து போனவை மண்குடிலில் ஒளியேற்றும் சிட்டி விளக்குகள் அடர்காட்டில் வழிகாட்டும் தீவட்டிகள் அன்றாடம் வயிறு கழுவும் சூழ்விளக்குகள் இப்போ வெளிச்சத்தைத் தேடி வரிசைகட்டி நின்றோரும் இருளின் ஈர்ப்பில் ஒதுங்குவதற்குத் தங்களைத் தயார்ப்படுத்துகிறார்கள். நீண்ட கோடாக இழுபடுகிறது இருள். வலிய காந்த இழுப்பில் ஒட்டிக்கொள்ளும் துருப்பிடித்த இரும்புத் துகள்களாகவே. 05/2017

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்"

துவாரகனின் புதிய கவிதைத்தொகுதி

அழுக்குப் போக்குவது எங்ஙனம்?

- துவாரகன் உடலின் அழுக்குப் போக்க கடலில் நீந்தலாம். குளத்தில் முக்குளிக்கலாம். கிணற்று நீரை அள்ளிச் சூடுபோகக் குளிக்கலாம். தொட்டியில் நீர் நிரப்பி நீந்தி விளையாடலாம். மனத்தின் அழுக்குப் போக்க வழியுண்டா? ஞானிகளும் யோகிகளும் அறிவுநிறை சான்றோரும் எத்தனையோ வழிகள் சொன்னார்கள். ஆனால், ஒதுக்குப்புறம் நாடியல்லவா அவர்களை நெருங்குகிறோம்? மூதுரை… நல்வழி… எல்லாவற்றையும் போகிற போக்கில் ஒரு குப்பைக்கூடையில் வீசிவிட்டுச் சென்றுகொண்டே இரு. அகமும் புறமும் அழுக்கு நிரம்பியவன்தான் இந்த உலகின் அதி உன்னத மானிடன் ! 07/2015

மன்றாட்டம்

கைகளும் கால்களும் ஓய்ந்துபோக உங்கள் கண்களில் நிரம்பி நின்ற அந்த மன்றாட்டத்தை இறுதிவரை… எந்தக் கடவுளும் கண் திறந்து பார்க்கவில்லையே?

படங்காட்டுதல்

- துவாரகன் தெருவுக்கொரு தியேட்டர் பொழுதுக்கொரு புதுவரவு யார் காட்டும் படத்தை முதலில் பார்ப்பது? பற்களிள் இடுக்குகளில் நரமாமிசம் கைகளெல்லாம் காய்ந்துபோன கறை தழும்பு கொண்ட முகமெங்கும் முகப்பூச்சு புன்னகை முகமென்னும் நினைவோடையில் தள்ளுவண்டில் சுண்டல்காரன்போல், கூவி அழைக்கிறார்கள். தகரக்கொட்டகைகளும் தறப்பாள் குடில்களும் காணாமற்போகும் நாள்வரும் என்று கூவி அழைக்கிறார்கள். நீங்களே நடித்து நீங்களே இயக்கி நீங்களே அனுமதிச்சீட்டு எடுத்து உங்கள் படங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். மழைவெள்ளம் தேங்கிய என் வீட்டுமுற்றத்தையும் சரிந்து கிடக்கும் தகரக் கொட்டகையையும் நான் சரிப்படுத்தவேண்டும். 11/2014