முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்

- துவாரகன் அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் ...காத்தானும்... குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்... பெரியவளவு முதலியாரும்... உன் வீடு வந்து போகும்போதெல்லாம் பொறாமை கொண்டேனடி. என் காலங்கள் வீணானதடி. உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர். நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து பொக்கிசமாய் பொத்திவைத்தேன். அந்த ஏடுகளைச் சிதைத்தவரே. மிச்சமிருப்பனவும் தருவேன் தீயிட்டுப் பொசுக்குவீர். கனகி, அவள் அழகி. அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும். அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க என்னையும் சேர்த்திடுவீர். அவள் பேச்சின் நளினமும் அவளின் அசைவின் அர்த்தமும் இத்தனை நாள் தெரியாதிருந்தேனே! அன்பரே வாரீர்! கனகியின் பெருமை கேளீர்!! அவள் கூந்தலில் கொண்டை பாரீர்! அவள் கைகளில் விரல்கள் பாரீர்! அவள் கால்களில் கொலுசு பாரீர்! அவள் முகத்திலே கண்கள் பாரீர்! --- (குறிப்பு – ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற அங்கதநூலே ‘கனகிபுராணம்’. இதனை எழுதிய...

நாங்கள் மனிதர்?

- துவாரகன் எத்தனை மனிதர் எத்தனை முகம் எத்தனை குணம் எத்தனை குரூரம் ஒரு பொம்மையைக்கூட... கைவேறு கால்வேறு கழற்றிப்போட மனம் பதறுகிறது. ஒரு சைக்கிளைக் கழற்றிப் போட்டதேபோல் மனிதர்களைச் சிதைத்துவிடும் குரூரத்தை எங்களுக்கு யார் கற்றுத் தந்தார்? விடிகாலை, மண்வெட்டி தோளில் சாய்த்து மண்ணைப் பொன்னாக்கிய மனிதர் நாம். இன்று மனிதர்களைப் பிளந்து கொண்டிருக்கிறோம். 03/2014

வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்

- துவாரகன் எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று எல்லாம் பூசி மெழுகியாயிற்று இரத்தக்கறை உருச்சிதைவு துருத்தும் சுவடு எல்லாம் கடின உழைப்பில் முடிந்தாயிற்று நீ இன்னும் கனவுகளையும் நினைவுகளையும் காவித் திரிகிறாய் சித்தங் கலங்கியிருக்கிறாய் செத்த பிணத்தின் நினைவைச் சுமந்திருக்கிறாய் உன் பிஞ்சின் சிதறலை அள்ளி மடியில் வைத்துக் கொண்டிருக்கிறாய் நான் தந்துள்ள வண்டின் ரீங்காரத்தையும் செல்லங் கொஞ்சுங் கிளிகளையும் கண் சிமிட்டும் மின்மினிப் பூச்சிகளையும் ஏற்க மறுக்கிறாய் திருவிழாவில் மிஞ்சிப் போனவை வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளுமே ஆட்காட்டிக் குருவியொன்று சத்தம் போட்டுச் சொன்னது. 10/2013

வெள்ளாடுகள்

-துவாரகன் இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம் எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும் வழிமாறிவிடுகின்றனவே? ஆடுகளிலே ஆவலாதிப்படுவன இந்த வெள்ளாடுகள்தானாம்! அம்மம்மா சொல்லுவா… ‘சரியான பஞ்சப் பரதேசிகள்’ என்று கண்டதெல்லாத்திலயும் வாய் வைக்குங்கள் முருங்கையில ஒரு பாய்ச்சல் பூவரசில ஒரு தாவல் பூக்கண்டில ஒரு கடி மேய்ச்சல் தரவையில சரியா மேயாதுகள் இந்த ஆவலாதிப்படும் ஆடுகளை என்னதான் செய்வதாம்? சத்தம் போடாம கட்டையில கட்டவேண்டியதுதான். 10/2013

அது அவர்களின் உலகம்

-துவாரகன் அழு வாய்விட்டு அழு கண்ணீர் தீரும்வரை அழு நெஞ்சடைக்கும் பாரம் குறையும்வரை அழு உன் உண்மை முகத்திலிருந்தும் ஈரம் நிறைந்த உள்ளத்திலிருந்தும் எழுந்து வரும் கண்ணீரும் ஓலமும் உனக்கான உலகம் என்றாகிவிட்டது. அது அவர்களின் உலகம் அந்த உலகின் சொற்கள் நஞ்சூறியவை அந்த உலகின் முகங்கள் போலியானவை அதில் நீ சஞ்சரிக்கமுடியாது. உன் ஓலம்… ஒரு பறவையின் சிலுசிலுப்பு மட்டுமே. மரத்துப்போனவர்கள்! 08/2013

முதுமரத் தாய்

- துவாரகன் அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்து போகாத நினைவுகள் வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின. சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின. தளர்ந்து செதிலாகிப் போன கால்களை நீட்டியபடி இன்னமும் தீர்ந்து போகாத அந்த நினைவுகளோடு காத்திருக்கிறாள் முதுமரத் தாயொருத்தி. அறுந்துபோன செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல் எல்லோரும் அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். 2013/05

ஒரு வார்த்தை

மூச்சுமுட்டி நெஞ்சடைக்கும் துயரோடு வாய்விட்டு அழுபவரை ஏனழுகிறாய் என்று கேட்பதற்கு இந்த உலகில் ஒரு மனிதராவது வேண்டும். இன்னமும் ஆயிரம் ஆயிரம் தளைகளோடும் தழும்புகளோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்டோமா?